சென்னை: தேசிய அளவிலான வாள் வீச்சுப் போட்டியில் தங்கம் வென்ற பவானி தேவியின் வெற்றிப் பயணம் தொடர என்றும் துணை நிற்போம் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கேரளாவில் நடைபெற்ற தேசிய சீனியர் வாள்வீச்சு போட்டிகளில் தமிழ்நாட்டை சேர்ந்த வீரர்கள் தங்க பதக்கம் வென்று அசத்தி உள்ளனர். 35வது தேசிய வாள்வீச்சு சாம்பியன் ஷிப் போட்டிகள் கடந்த 2 நாட்களாக கேரள மாநிலம் கன்னூரில் நடைபெற்று வருகிறது.
இதில் 29 மாநிலங்களை சேர்ந்த சுமார் 700 வீரர், வீராங்கனைகள் பங்கேற்ற நிலையில் தமிழ்நாட்டை சேர்ந்த பவானி தேவி மற்றும் ஜிசோ நிதி ஆகியோர் தங்க பதக்கங்களை வென்று அசத்தி உள்ளனர். பெண்கள் பிரிவில் 15 க்கு 5 என்ற புள்ளி கணக்கில் முதல் இடம் பிடித்து பவானி தேவி தங்கம் வென்றார். மேலும் பெண்கள் பிரிவில் கேரளாவின் அல்கா விசன்னி வெள்ளி பதக்கமும், ஜம்மு காஷ்மீரை சேர்ந்த ஷ்ரேயா குப்தா வெண்கல பதக்கமும் வென்றனர்.
இந்த நிலையில், வெற்றிப் பயணம் தொடர என்றும் துணை நிற்போம் என துணை முதல்வர் எக்ஸ் தள பக்கத்தில் வாழ்த்து தெரிவித்தார். அதில், 12வது முறையாக தேசிய அளவிலான வாள் வீச்சுப் போட்டியில் தங்கம் வென்று தன்னிகரில்லா சாதனையைப் படைத்துள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த தங்கை பவானி தேவி-ஐ வாழ்த்தி மகிழ்கிறோம். ஒலிம்பிக் வீராங்கனையான தங்கை பவானி தேவி, நம்முடைய தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் ELITE திட்ட Player என்பது கூடுதல் சிறப்பு. திசையெங்கும் வாள்வீசி வாகை சூடி வரும் தங்கை பவானி தேவியின் வெற்றிப்பயணம் தொடர என்றும் துணை நிற்போம். அவருக்கு அன்பையும், பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு தெரிவித்தார். .
The post தேசிய அளவிலான வாள் வீச்சுப் போட்டி: பவானி தேவியின் வெற்றிப் பயணம் தொடர என்றும் துணை நிற்போம்: துணை முதல்வர் உதயநிதி appeared first on Dinakaran.