சென்னை : பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆயுள் முழுவதும் காலணி அணிய முடியாது என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது, திமுக ஆட்சியை அகற்றத்தான் காலணி அணியவில்லை என்றால் கடைசி வரை அணிய முடியாது. சாட்டையால் அடித்துக் கொள்வது என்பது ஒருவருக்கு கொடுக்கக்கூடிய தண்டனை அல்லது பாவ விமோசனம்.
அண்ணாமலை செய்த தவறுகளுக்கு பாவ விமோசனம் பெற சாட்டையில் அடித்துக் கொண்டாரா? அல்லது ஏதாவது ஒரு தவறு செய்ததற்காக தனக்குத்தானே தண்டனை கொடுத்துக் கொண்டு சாட்டையில் அடித்துக்கொண்டாரா?. திமுக அவருக்கு எந்த பாதகமும் செய்யவில்லை. அண்ணாமலையும் காலணி அணியாமல் இருக்கலாம். அதே வேளையில் திமுக ஆட்சியை அகற்றுவதற்காக தான் அவர் காலணி அணியவில்லை என்றால், அவர் வாழ்நாள் முழுவதும் காலணியே அணிய முடியாது.
அண்ணா பல்கலைக்கழக சம்பவத்தில் ஈடுபட்ட ஞானசேகரனுக்கும், எங்களுக்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை என்பதை ஏற்கனவே சொல்லிவிட்டேன். ஏதாவது ஒரு தொடர்பை நிரூபியுங்கள். அரசியல் கட்சி தலைவர்கள் பக்கத்தில் யாரோ போட்டோ எடுக்கத்தான் செய்வார்கள். யாரோ புகைப்படம் எடுப்பதையெல்லாம் தடுக்க முடியாது. புகார் கொடுப்பவர்களுக்கு எஃப்ஐஆர் காப்பி கொடுக்க தானே வேண்டும். அவர்கள் மூலமாகவும் வெளியே வந்திருக்கலாம். மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், வாசகங்கள் தரம் தாழ்ந்து எஃப்ஐஆரில் இருக்க வாய்ப்பு இல்லை.
அப்படி காவல்துறை எழுத மாட்டார்கள். அது என்னவென்று படித்து பார்த்துவிட்டு கூறலாம். ஞானசேகரன் பல வழக்குகளில் குற்றவாளி என்பது நேற்றுதான் எங்களுக்கு தெரியும். ஞானசேகரனை காப்பாற்ற வேண்டிய அவசியம் எங்களுக்கு கிடையாது. அவர் எங்கள் கட்சியிலும் இல்லை. முதலில் இதனை கேட்பவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். எல்லா நீதிமன்றங்களிலும் துப்பாக்கி ஏந்திய போலீசாரின் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பல்கலைக்கழக வாசலிலும் போட வேண்டும் என்றால் போடலாம். ஒரு சம்பவம் நடந்த பிறகு தான் பாதுகாப்பு கொடுக்க முடியும்.
ஒரு பீச்சில் ஒரு குற்றம் நடக்குது என்பதற்காக பீச் முழுவதுமாக போலீஸ் பாதுகாப்பு போட முடியுமா?. குற்றம் நடந்த பிறகுதான் அதை மையமாக வைத்து பாதுகாப்பு அளிக்க முடியும். நாங்கள் தவறு நடந்துள்ளது, குற்றவாளியை கைது செய்து விட்டோம் என்று கூறுகிறோம். பாலியல் குற்றங்களுக்கு எதிராக சட்டங்கள் நடைமுறையிலேயே உள்ளது. ஆயுள் தண்டனை வரை கொடுக்கலாம். பாலியல் வழக்கில் எந்த குற்றவாளிகளையும் தப்பிக்கவிடுவதே இல்லை என அமைச்சர் தெரிவித்தார்.
The post பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆயுள் முழுவதும் காலணி அணிய முடியாது: அமைச்சர் ரகுபதி விமர்சனம் appeared first on Dinakaran.