×

ராமேஸ்வரத்தில் செயற்கையான ‘டிமாண்ட்’ ஏற்படுத்தி அறைகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் விடுதி உரிமையாளர்கள்: முறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமா?

* பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் புகார்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் கூட்டம் கூடும் நாட்களில் செயற்கையான டிமாண்ட் ஏற்படுத்தி, தங்கும் விடுதிகளில் அறைகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர். இதைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரம் பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலமாகவும், புண்ணிய ஸ்தலமாகவும் விளங்குகிறது. இங்குள்ள ராமநாதசுவாமி கோயிலில் தரிசனம் செய்ய தமிழக மட்டுமல்லாமல், அண்டை மாநிலங்கள் மற்றும் வடமாநிலங்களில் இருந்து ஏராளமானோர் வருகின்றனர். மாதந்தோறும் அமாவாசை நாட்களில் அக்னி தீர்த்தக் கடலில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய, ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குவிகின்றனர். இந்நிலையில், தற்போது அரையாண்டு தொடர் விடுமுறை என்பதால் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள், பக்தர்கள் தினசரி வருகின்றனர். இந்நிலையில், கூட்டத்தை பயன்படுத்தி தங்கும் விடுதிகள், ஆட்டோக்கள், ஓட்டல்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது.

அறைகளுக்கு மூன்று மடங்கு கட்டணம்
வெளிமாநிலங்களில் இருந்து ராமேஸ்வரம் வரும் பக்தர்கள் விடுதிகளில் தங்குகின்றனர். இங்குள்ள விடுதிகளின் உரிமையாளர்கள் கூட்ட நாட்களில் தங்களுக்குள் சிண்டிகேட் அமைத்து இணைய தளத்தில் மொத்த ரூம்களை லாக் செய்துவிட்டு நேரில் வரும் பக்தர்களிடம் ரூம் புல் என டிமாண்ட் ஏற்படுத்தி சாதாரண நாட்களில் ரூ.1800 வாடகைக்கு விடப்படும் டபுள் பெட் ஏசி ரூம் ரூ.5,500க்கு வாடகை விடப்படுகிறது. இதேபோல் தரத்திற்கு ஏற்றார்போல் விலைகளை மூன்று மடங்கு வரை உயர்த்தி தங்கும் அறைகள் வாடகைக்கு விடப்பட்டது. இதனால், சுற்றுலாப்பயணிகளும், பக்தர்களும் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். ஒருசில தங்கும் விடுதிகள் பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு வழக்கமான வாடகை கட்டணத்திற்கு யாத்திரைகளுக்கு ரூம் கொடுக்கின்றனர்.

உளுந்த வடை ரூ.20க்கு விற்பனை
ராமேஸ்வரம் கோயிலை சுற்றியுள்ள ஒரு சில உணவகங்கள், டீக்கடைகளில் யாத்திரைகளுக்கு கூடுதல் விலை நிர்ணயம் செய்யப்பட்டது. கிழக்குவாசல் அருகே உள்ள டீக்கடை ஒன்றில் ரூ.10க்கு விற்கபடும் ஒரு உளுந்தவடை ரூ.20க்கு விற்கப்பட்டது. கூட்ட நேரங்களில் விலையை உயர்த்தி வியாபாரம் செய்யும் டீ கடைகள் மீது உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

ஆட்டோ கட்டணம் இரண்டு மடங்கு
முக்கிய விஷேச நாட்களில் சுற்றுலா வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை தீர்க்க போக்குவரத்து போலீசார் முக்கியச் சாலைகளை ஒருவழிப்பாதையாக மாற்றுகின்றனர். கூட்ட நாட்களில் அனைத்து விதமான கனரக வாகனங்களும் ராமேஸ்வரம் பேருந்து நிலையம் அருகே உள்ள சுற்றுலா வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் தடுத்து வைக்கப்படும். கோயில், தனுஷ்கோடி செல்ல உள்ளே வரும் சுற்றுலா கார்கள், வாகனங்கள், ஆட்டோக்கள், உள்ளூர் சுற்றுலா வேன்கள் அனைத்தும் திட்டக்குடி சந்திப்பு சாலை வழியாக அனுப்பி வைக்கப்படுகிறது. அக்னி தீர்த்தக் கடற்கரை, கோயில் பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள் காமராஜர் நகர், சல்லிமலை, சிவகாமி நகர் வழியாக வந்து தேசிய நெடுஞ்சாலையில் சேர்கின்றனர்.

தனுஷ்கோடியில் இருந்து திரும்பி வரும் வாகனங்கள் 6 நம்பர் லைன், ரயில்வே பீடர் ரோடு, வண்ணார் தெரு, இராமர் தீர்த்தம் வழியாக தேசிய நெடுஞ்சாலையில் சேர்கிறது. இதனால் சுற்றுலா வாகன நெரிசல்கள் ஒரளவு குறைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சொந்த வாகனங்களில் கூகுள் மேப் பார்த்து வரும் சுற்றுலா பயணிகள் திரு சாலைகளுக்குள் சென்று வாகனங்களில் சிக்கித் தவிக்கின்றனர். குறிப்பாக பொந்தம்புளியில் இருந்து தீட்சிதர்கொல்லை, இரயில்வே வடக்கு, காந்தி நகர், அண்ணா நகர் தெரு சாலையில் கார்களும் ஆட்டோக்களும் எதிர் எதிராக சென்று கடும் நெருக்கடி ஏற்பட்டு சிக்கி செல்கின்றனர். இந்நிலையில், ஒரு வழிப்பாதையை காரணம் காட்டி ஒருசில ஆட்டோக்களை தவிர்த்து பெரும்பாலான ஆட்டோக்கள் கட்டணமும் இரண்டு மடங்காக வசூல் செய்தனர்.

ஒரு கி.மீ தூரம் செல்லும் இடத்திற்கு சிறிய ஆட்டோவிற்கு ரூ.200, பெரிய ஆட்டோவிற்கு ரூ.250 என வாடகை வசூல் செய்கின்றனர். புண்ணிய ஸ்தலமான ராமேஸ்வரத்திற்கு வார விடுமுறை நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கமாக மாறியுள்ளது. பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் இது போன்ற கூடுதல் வாடகை கட்டணம் வசூல் செய்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து, பக்தர்கள் தங்கி செல்வதற்ககு தேவையான வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post ராமேஸ்வரத்தில் செயற்கையான ‘டிமாண்ட்’ ஏற்படுத்தி அறைகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் விடுதி உரிமையாளர்கள்: முறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமா? appeared first on Dinakaran.

Tags : Rameshwar ,Rameshwaram ,
× RELATED எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி...