×

கடலூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

*விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்

கடலூர் : கடலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நல்லாத்தூர், தூக்கணாம்பாக்கம், செல்லஞ்சேரி, கீழ்அழிஞ்சிபட்டு ஆகிய பகுதிகளில் ஊரக வளர்ச்சி துறையின் வாயிலாக மேற்கொள்ளப்பட்டு வரும் திட்ட பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கடலூர் ஊராட்சி ஒன்றியம் நல்லாத்தூர் ஊராட்சியில் அப்பர் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் கட்டப்பட்டு வரும் கழிவறை கட்டுமான பணிகளையும், நூலகக் கட்டுமான பணிகளையும், பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியையும், கிராம குளத்தை புனரமைப்பதற்கான திட்டம் மதிப்பீடு தயார் செய்திடும் வகையிலும், அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டுமான பணிகளையும் ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து, தூக்கணாம்பாக்கம் ஊராட்சியில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி கட்டுமான பணிகளையும், ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் கட்டப்பட்டுள்ள பள்ளி சுற்றுச்சுவற்றையும், சிமெண்ட் சாலையையும், கீழ்அழிஞ்சிபட்டு ஊராட்சியில் இருளர் இன மக்களுக்காக தலா ₹4.37 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் 7 குடியிருப்புகள் கட்டுமான பணிகளையும் ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் மாவட்ட ஆட்சியர் கூறுகையில், கிராமப்புறங்களில் மேற்கொள்ளப்படும் தூய்மைப் பணிகள், தெரு விளக்குகள், சாலை வசதிகள் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளவும், மழைக் காலங்களில் நீர் வடிந்தோடுவதற்கு ஏதுவாக நீர்வழித்தடங்களில் அடைப்பு ஏற்படாவண்ணம் தொடர்ந்து கண்காணிக்கவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தூய்மைப் பணியாளர்கள் வீடுகள்தோறும் குப்பைகளை தரம்பிரித்து சேகரிக்கும் பணிகளில் ஈடுபடவும், பொது இடங்களில் குப்பைகள் கொட்டுவதற்கெதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தவும், தூய்மை பணிகள் மேற்கொள்ள அந்தந்த பகுதிகளுக்கு பணிஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளபடி சரியான எண்ணிக்கையில் தூய்மை பணியாளர்களை வழங்கவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்கள் தங்கள் வீடுகளில் சேகரமாகும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்கா குப்பை என தரம்பிரித்து தங்கள் பகுதிக்கு வரும் தூய்மைப் பணியாளர்களிடம் ஒப்படைக்கவும், காய்ச்சல் ஏற்படாவண்ணம் சுடுதண்ணீரை காய்ச்சி குடிக்கவும் அறிவுறுத்தப்பட்டது.

மழைக்காலம் என்பதால் குளோரின் கலந்த குடிநீரை வழங்கவும், அவ்வப்போது மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளை சுத்தம் செய்யவும், சாலைகளில் தண்ணீர் தேங்காமல் இருக்க வடிகால் வசதிகளை சரிவர பராமரிக்கவும், மேலும், ஊரக வளர்ச்சித் துறை யால் மேற்கொள்ளப்படும் பல்வேறு திட்ட பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது, என்றார்.உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) ஷபானா அஞ்சும், உதவி செயற்பொறியாளர் டார்வின், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வீரமணி, பார்த்திபன் உள்பட பலர் உடன் இருந்தனர்.

The post கடலூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Cuddalore Panchayat Union ,Cuddalore ,Collector ,Sibi Aditya Senthilkumar ,Rural Development Department ,Nallathur ,Dhukanambakkam ,Chellancheri ,Kilaljinjipattu ,Cuddalore Panchayat Union… ,Panchayat ,Union ,Dinakaran ,
× RELATED சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா...