×

புகார் அளித்த 24 மணி நேரத்தில் குற்றவாளி கைது செய்து சிறையில் அடைப்பு பாதிக்கப்பட்ட மாணவியின் எப்ஐஆர் கசியவிட்டது தொடர்பாக வழக்கு பதிவு: தைரியமாக புகார் அளித்த மாணவிக்கு போலீஸ் கமிஷனர் அருண் பாராட்டு

சென்னை: பாதிக்கப்பட்ட மாணவியின் எப்ஐஆர் கசியவிட்டது தொடர்பாக கோட்டூர்புரம் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. புகார் அளிக்கப்பட்ட 24 மணி நேரத்திற்குள் குற்றவாளியை கைது செய்து சிறையில் அடைத்துள்ளோம் என்று போலீஸ் கமிஷனர் அருண் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், பாதிக்கப்பட்ட மாணவியை போல், இதுபோன்று மற்ற குற்றங்கள் நடந்தாலும் தைரியமாக புகார் அளிக்க முன்வர வேண்டும். அதன் மீது உடனே நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

சென்னை வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் போலீஸ் கமிஷனர் அருண் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த 24ம் தேதி மாலை 4 மணிக்கு காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு 100க்கு ஒரு அழைப்பு வருகிறது. அதில் அண்ணா பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவி ஒருவர் புகார் அளித்தார். அந்த அழைப்பின் படி, போலீசார் குழு அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சென்றது. அங்கு கல்லூரியில் பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு குழுவில் உள்ள பேராசிரியர் மற்றும் பாதிக்கப்பட்ட மாணவி ஆகியோர் புகார் அளித்தனர். அவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் எப்ஐஆர் பதியப்பட்டது.

முதல் தகவல் அறிக்கையில் பாதிக்கப்பட்டவர் என்ன கொடுக்கிறார்களோ அதை அப்படியே எழுத வேண்டும். அதில் போலீஸ் எந்த திருத்தமும் செய்யக் கூடாது. சிலர் தெரியாமல் சொல்கிறார்கள். பாதிக்கப்பட்டவர் எப்படி புகார் கொடுக்கிறார்களோ அதை அப்படியே பதிய வேண்டும். அதன்படிதான் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. எப்ஐஆர் பதிவு செய்த உடனே கோட்டூர்புரம் உதவி கமிஷனர் பாரதிராஜா தலைமையில் 4 தனிப்படைகள் அமைத்து, ஒவ்வொருவருக்கும் ஒரு பணி கொடுத்து விசாரிக்கிறோம். சந்தேகிக்கப்பட்ட நபர்கள் சிலரை கொண்டு வந்து விசாரித்தோம்.

அதன்படி அறிவியல் பூர்வமான ஆதாரங்களை சேகரித்து, டவர் லோக்கேஷன் எல்லாம் எடுத்து அடுத்த நாள் காலையில், அதாவது 25ம் தேதி காலையிலேயே குற்றவாளியை பிடித்துவிடுகிறோம். பிடித்ததற்கு பிறகு அவன்தான் குற்றத்தை செய்தானா என்று உறுதிபடுத்துவதற்கு மேலும் சில விசாரணை நடத்தினோம். குற்றம் உறுதி செய்யப்பட்ட பிறகு அவனை கைது செய்து சிறையில் அடைக்கிறோம். இதுதான் இந்த வழக்கைப் பொருத்தவரைக்கும் நடந்தது.
எப்ஐஆர் இதுபோன்ற வழக்கில் வெளியே வரக்கூடாது. வெளியே கசியவிடக் கூடாது. அப்படி செய்தால் இது சட்டப்படி குற்றம்.

அதேபோல் கசிந்து இருந்தால் கூட அதை எடுத்து வைத்து கொண்டு பெரிய அளவில் விவாதம் செய்வது சட்டப்படி குற்றம். என்ன குற்றம் என்றால், பாதிக்கப்பட்ட நபருடையே அடையாளங்கள் எந்த வகையிலுமே வெளியே தெரியக் கூடாது. பெயர்தான் சொல்லனும் என்று இல்லை. அவர்கள் கொடுக்ககூடிய சில தகவல்களை வைத்து பாதிக்கப்பட்ட நபரை நாம் அடையாளம் கண்டு பிடிக்க முடியும் என்ற அளவுக்கு தகவல் கொடுத்தாலும் அது தவறு. அப்படி கொடுத்தது, தற்போது வெளி வந்துள்ளதால் கோட்டூர்புரத்தில் தற்போது எப்ஐஆர் கசியவிட்டதற்கு போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது.

அதன்படி இந்த எப்ஐஆரை யார் கசியவிட்டது என்று கண்டுபிடித்து அவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்கப்படும். எப்ஐஆர் கசிவுவெளியில் இருந்து வந்துள்ளது. எப்ஐஆரில் சட்டப்படி எதையும் மறைக்க கூடாது. அதற்கு அடுத்து நடக்கக்கூடிய விசாரணையில்தான் சில தகவல்களை வெளியாட்களுக்கு தெரியாதபடி சில குறியீடுகள் மூலம் மறைத்து போடுவார்கள். எப்ஐஆரில் எதையும் மறைக்கக் கூடாது. இதுவரைக்கும் நடந்த புலன் விசாரணையில் ஞானசேகரன் ஒருவர்தான் குற்றவாளி. புலன் விசாரணை குறித்து வெளியே சொல்லக்கூடாது. ஆனால் இதை நிறையபேர் அரசியல் செய்வதால் சொல்லக்கூடிய நிலை உள்ளது.

குறிப்பாக குற்றம் நடக்கும்போது குற்றவாளி அவனுடைய போனை ஏரோப்பிலேன் மோடில் வைத்திருந்தான். எனவே, சாரையும் கவனிக்க வேண்டும் என்று அவன் சொன்னதாக தகவல் வெளியானது தவறானது.இதுவரை ஞானசேகரன் மீது சென்னை மாநகரை பொருத்தவரைக்கும் 2013ல் இருந்து 20 வழக்குகள் உள்ளன. எல்லா வழக்குகளிலுமே திருட்டு, வீட்டின் பூட்டை உடைப்பது, கன்னக்களவு என இவன் மீது வழக்குகள் உள்ளன. ஆனால் இவன், ரவுடியிசம் செய்ததாகவோ, பெண்களை பாலியல் தொந்தரவு செய்ததாகவோ வழக்குகள் இல்லை. இவன் மீதுள்ள 20 வழக்குகளில் 6 வழக்குகளில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மற்ற வழக்குகள் விசாரணையில் உள்ளது.

இதுவரைக்கும் எந்த பெண்களும் இவனால் பாதிக்கப்பட்டவர்கள் என்று புகார்கள் வரவில்லை. ஆனால் விசாரணையில் அவனது போனை விசாரித்து பார்க்கும் போது, வேறு யாராவது பாதிக்கப்பட்டிருந்தால், கண்டிப்பாக சம்பந்தப்பட்ட பெண்களிடம் புகார்கள் பெற்று நடவடிக்கை எடுப்போம். விசாரணைக்கு பிறகுதான் யாரேனும் பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளார்களா என்று தெரியும். இனி எப்ஐஆர் யார் வெளியே பகிர்ந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்போம். அண்ணா பல்கலைக்கழகத்தில் 70 சிசிடிவி கேமராக்கள் உள்ளன. அதில் 56 சிசிடிவிகள் வேலை செய்கிறது.

அதில் கிடைத்த பல தகவல்களை வைத்துதான் குற்றவாளியை பிடித்தோம். மாலை 4 மணிக்கு நம்பிக்கையோடு புகார் கொடுத்தார்கள். அடுத்த நாளுக்குள் விசாரணை நடத்தி குற்றவாளியை கைது செய்து சிறையில் அடைத்து இருக்கிறோம். தமிழக முதல்வரை பொருத்தவரைக்கும் நான் பதவியேற்றது முதல், நாங்கள் நடத்தும் அனைத்து மீட்டிங்கிலும் என்ன சொல்வார்கள் என்றால், ‘காவல்துறை நடுநிலையோடு வேலை செய்ய வேண்டும். எந்த பாகுபாடும் பார்க்க கூடாது. யார் எந்த கட்சி என்று சொல்லாம். அதையும் பார்க்க கூடாது என்பார். அதன்படிதான் நாங்கள் பணியாற்றி வருகிறோம்.

எங்களை பொருத்தவரைக்கும் எங்களுக்கு குற்றம் செய்தவர்கள் இந்த கட்சிக்காரர்… அந்த கட்சிக்காரார் என்றெல்லாம் கிடையாது. அதை வைத்து மற்றவர்கள் அரசியல் பண்ணலாம். நாங்கள் அப்படி கிடையாது. தேவையும் கிடையாது. பொதுமக்கள்தான் முக்கியம். பொதுமக்களுக்கு இடையூறு செய்வது போல் மறியல் செய்தால் அதை நாங்கள் அனுமதிக்க முடியாது. அனுமதிக்கப்பட்ட இடங்கள் என்று இருக்கிறது. அண்ணா பல்கலைக்கழகம் பொருத்தமட்டில் 70 சிசிடிவி கேமராக்கள் இருக்கிறது. பாதுகாப்புக்கு 140 முன்னாள் ராணுவ வீரர்கள் செக்யூரிட்டியாக பணி செய்யப்பட்டு வருகிறது.

அதில் 49 பேர் என்ற வகையில் 3 ஷிப்டில் அவர்கள் பணியாற்றி வருகிறார்கள். அதை இன்னும் எப்படி மேம்படுத்துவது குறித்து நாங்கள் அண்ணாபல்கலைக்கழகத்துடன் இணைந்து ஆலோசனை நடத்தி வருகிறோம். அண்ணா பல்கலைக்கழகத்தில் மெயின் கேட் என 6 கேட் உள்ளது. அது இல்லாமல் ஒரு 5 என மொத்தம் 11 கேட் உள்ளது. இதுதவிர சுற்றுசுவர் எங்கு உடைந்து இருக்கிறது என்று நாங்கள் ஆய்வு செய்து சரிசெய்ய ஆலோசனை செய்து வருகிறோம்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் பொதுமக்கள் நடைப்பயிற்சி செய்ய காலை மற்றும் மாலையில் அனுமதிக்கிறார்கள்.

அதில் சந்தேக நபர்கள் வந்தால் நிறுத்தி கேட்கிறார்கள். காவல்துறையை பொருத்தவரைக்கும் கோட்டூர்புரம் காவல் எல்லைக்குள் பல்கலைக்கழகம் வருகிறது. அதை 3 செக்டராக பிரித்து இருக்கிறார்கள். அண்ணா பல்கலைக்கழகம் ‘ஏ’ செக்டரில் வருகிறது. இந்த ‘ஏ’ செக்டரில் நமக்கு 3 ரோந்து வாகனங்கள் உள்ளன. இந்த 3 ரோந்து வாகனங்களில் ஒரு வாகனம் எப்போதும் அண்ணா பல்கலைக்கழகத்திலேயே இருக்கும். இதுதவிர இருசக்கர வாகன ரோந்து பணியும் உள்ளது. இந்த வழக்கில் கூடுதல் பிரிவுகள் எப்ஐஆரில் சேர்க்கப்பட்டுள்ளது. 2014ல் தான் இவனுடையே குற்றம் வெளியே தெரிந்தது.

2019க்கும் பிறகு இவன் மீது வழக்குகள் இல்லை. 2023ல் விலங்கு பராமரிப்பு நிலையத்தில் ஒரு பிரச்னை செய்கிறான். மற்றப்படி 2019க்கும் பிறகு ஞானசேகரன் மீது குற்ற வழக்குகள் இல்லை. ஒரு குற்றவாளி எந்த அரசியல் கட்சியில் இருந்தாலும் எங்களுக்கு அதைப் பற்றி கவலை கிடையாது. தவறு இருந்தால் நாங்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுப்போம். காவல்துறையை நம்பி சரியான நேரத்தில் ஒரு நாள் தாமதம் ஆனாலும் கூட பாதிக்கப்பட்ட மாணவி புகார் கொடுத்துள்ளார். அவங்க நம்பிக்கையை தக்க வைக்கும்படி காவல்துறை நடவடிக்கை எடுத்து இருக்கிறோம்.

அவர்கள் தரப்பை பொருத்தவரைக்கும் காவல்துறை நன்றாக பணியாற்றி இருக்கிறார்கள் என்று பாராட்டியுள்ளனர். அண்ணா பல்கலைக்கழகமாக இருக்கட்டும், பாதிக்கப்பட்டவர் காவல்துறை மீது நல்ல நம்பிக்கை வைத்திருந்தார்கள். அதை நாங்கள் உறுதிப்படுத்துகிற மாதிரிதான் நடவடிக்கை எடுத்து இருக்கிறோம். பாதிக்கப்பட்ட மாணவி தற்போது நலமாக உள்ளார். காவல்துறை நடவடிக்கையில் அவர் திருப்தியாக உள்ளார். இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட மாணவி எப்படி தைரியமாக வந்து புகார் அளித்தாரோ, அதே மாதரி எந்த ஒரு குற்றம் நடந்தாலோ, அவங்க அதை சொல்லிவிடுவார்களோ என்று எதையும் யோசிக்காமல், கண்டிப்பாக வந்து காவல்துறையை அணுகி புகார் கொடுக்க வேண்டும்.

அந்த புகாரின் மீது காவல்துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்கும். சிசிடிஎன்எஸ்யில் இருந்து எப்ஐஆர் சசியவிட்டதில் தொழில்நுட்ப கோளாறு இருந்தது. அந்த நேரத்தில் எப்ஐஆரை எடுத்தது தவறுதானே. மீடியாக்களுக்கு தெரிய வேண்டும். மிகவும் பொறுப்பான பணி என்பதால், சில தகவல்கள்தான் வெளியே விடவேண்டும். இந்த தகவல்களை வெளியிடக் கூடாது என்று சில விஷயங்கள் அவர்களுக்கு தெரியும். அதையும் மீறி அவர்கள் விட்டு இருந்தால் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு போலீஸ் கமிஷனர் அருண் தெரிவித்தார். எங்களை பொருத்தவரைக்கும் எங்களுக்கு குற்றம் செய்தவர்கள் இந்த கட்சிக்காரர்… அந்த கட்சிக்காரார் என்றெல்லாம் கிடையாது. அதை வைத்து மற்றவர்கள் அரசியல் பண்ணலாம். நாங்கள் அப்படி கிடையாது.

* 2 வகையில் எப்ஐஆர் கசிந்திருக்கலாம்
எப்ஐஆர் அதாவது சில குற்றங்களுக்கு, போக்சோ குற்றங்களுக்கு, அதேபோல் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு, எப்ஐஆர் போடும் போது சிசிடிஎன்எஸ் தானாகவே பிளாக் ஆகிவிடும். இப்போது ஐபிசிஇல் இருந்து பிஎன்எஸ்க்கு மாறும் போது சில தொழில்நுட்ப கோளாறு காரணமாக லாக் ஆவதற்கு தாமதம் ஆகியுள்ளது. அந்த நேரத்தில் ஒரு சிலர் பார்த்து இருக்கிறார்கள். அதை பதிவிறக்கம் செய்து இருக்கிறார்கள். அவர்கள் வழியாக வெளியே வந்து இருக்கலாம் ஒன்று, இரண்டாவது எந்த எப்ஐஆர் போட்டாலும், புகார் அளித்த நபருக்கு ஒரு நகல் கொடுக்க வேண்டும். அதுதான் விதி. அதன்படிதான் போலீசார் புகார் அளித்த மாணவிக்கு எப்ஐஆரில் ஒரு நகல் கொடுத்தோம். இந்த இரண்டு வகையில்தான் எப்ஐஆர் வெளியே கசித்து இருக்க வேண்டும்.

The post புகார் அளித்த 24 மணி நேரத்தில் குற்றவாளி கைது செய்து சிறையில் அடைப்பு பாதிக்கப்பட்ட மாணவியின் எப்ஐஆர் கசியவிட்டது தொடர்பாக வழக்கு பதிவு: தைரியமாக புகார் அளித்த மாணவிக்கு போலீஸ் கமிஷனர் அருண் பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Commissioner ,Arun ,Chennai ,Kotturpuram ,station ,Police Commissioner ,Dinakaran ,
× RELATED புத்தாண்டு தினத்தை முன்னிட்டு 31ம்...