சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்ஜினியரிங் மாணவி பலாத்காரம் செய்யப்பட்டது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விவகாரத்தில் மாணவி துணிச்சலுடன் புகார் செய்திருப்பதற்கும், போலீசார் மின்னல் வேகத்தில் செயல்பட்டு குற்றவாளியை கைது செய்திருப்பதற்கும் சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். பொறியியல் படிக்கும் மாணவர்கள், மாணவிகளுக்கு தனித்தனியாக தங்கும் விடுதிகள் உள்ளன. பல்கலைக்கழகத்தில் உள்ள விடுதியில் தங்கியிருந்து தென் மாவட்டத்தைச் சேர்ந்த இன்ஜினியரிங் மாணவி ஒருவர் 2ம் ஆண்டு படித்து வருகிறார். இந்த மாணவி, மெக்கானிக் இன்ஜினியரிங் பிரிவில் 4ம் ஆண்டு படித்து வரும் மாணவன் ஒருவரை காதலித்து வந்ததாக தெரிகிறது.
கடந்த திங்கட்கிழமை அந்த மாணவனும் மாணவியும் விடுதியில் உள்ள உணவகத்தில் இரவு உணவு சாப்பிட்டு விட்டு பின்னர் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் அங்குள்ள மரங்கள் நடுவே மறைவான இடத்தில் இருவரும் தனிமையில் இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது திடீரென அங்கு வந்த ஒரு வாலிபர், அவர்கள் தனிமையில் இருப்பதை பார்த்ததும் தனது செல்போனில் வீடியோ பதிவு செய்ததாக தெரிகிறது. பிறகு அந்த வாலிபர், மாணவியுடன் இருந்த மாணவனை சரமாரியாக அடித்து விரட்டிவிட்டு, மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
இதையடுத்து, அந்த வாலிபர், ‘நான் எப்போது அழைத்தாலும் நீ வரவேண்டும். இல்லையென்றால் செல்போனில் பதிவு செய்துள்ள உனது வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிடுவேன். கல்லூரிக்கு தெரியப்படுத்தி படிக்க விடாமல் செய்வேன். வீட்டுக்கும் அனுப்பி வைப்பேன்’ என்று மாணவியை மிரட்டிவிட்டு சென்றுவிட்டார். இதன்பிறகு தங்களுக்கு நடந்தது பற்றி இருவரும் ஆலோசனை நடத்திவிட்டு இறுதியாக வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் தொந்தரவு கொடுத்த நபர் மீது புகார் கொடுக்க முடிவு செய்து, போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளார். போனில் தனக்கு ஒருவர் பாலியல் தொந்தரவு கொடுப்பதாக மட்டுமே கூறியுள்ளார்.
இந்த தகவல் கோட்டூர்புரம் உதவி கமிஷனர் பாரதிராஜாவுக்கு தெரியப்படுத்தப்பட்டது. அவர், மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மதேவி, பாதிக்கப்பட்ட பெண்ணிடம் பேசியுள்ளார். அப்போது அன்று தேர்வு நடைபெற உள்ளதால், மாலை 4 மணிக்கு மேல் பேசுவதாக கூறியுள்ளார். ஆனால் போலீசார் இந்த விவகாரத்தை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல், அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள பாலியல் துன்புறுத்தலை விசாரிக்கும் கமிட்டியை கூட்டுமாறு கூறியுள்ளனர். அந்த கமிட்டியில் பெண்களும் உள்ளனர்.
இதனால் அவர்கள் முன்பு மாலை 4 மணிக்கு விசாரணை நடந்தது. அப்போதும் அந்த மாணவி, தனக்கு பாலியல் துன்புறுத்தல் என்று சாதாரணமாகவே கூறியுள்ளார். இதனால் அந்த மாணவியிடம் தனியாக விசாரணை நடத்தினர்.
விசாரணையில், ஆரம்பத்தில் கூற மறுத்தவர், பின்னர் தனக்கு நடந்தவற்றை விலாவாரியாக தெரிவித்துள்ளார். அதை தொடர்ந்து, தனிப்படை போலீசார் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள 70 சிசிடிவி கேமராக்களை பார்க்க தொடங்கினர். ஆனால் அங்கு 56 கேமராக்கள் வேலை செய்கின்றன.
14 கேமராக்கள் மட்டுமே வேலை செய்தன. அந்த கேமராக்களில் இருந்த வீடியோவில் ஒரு வாலிபர் மட்டும் தனியாக நடந்து செல்வதைப் பார்த்தனர். அந்த வாலிபரை காட்டியபோது அவர்தான் என்று மாணவி அடையாளம் காட்டினார். ஆனால், அந்த சிசிடிவி வீடியோ கூட தெளிவாக இல்லை. இந்நிலையில், உதவி கமிஷனர் பாரதிராஜா தலைமையிலான தனிப்படையினர், பழைய குற்றவாளிகள் குறித்து விசாரிக்க தொடங்கினர். அதில் 9 பழைய குற்றவாளிகளின் போட்டோக்கள் கிடைத்தன. அதில் ஒவ்வொரு குற்றவாளியையும் மாணவியிடம் காட்டியபோது கடைசியாக 6 குற்றவாளிகளின் அடையாளத்தை காட்டினார்.
அதில் 4 பாலியல் குற்றவாளிகள் சிறையில் உள்ளனர். 2 பேர் மட்டுமே வெளியில் உள்ளனர். அதில் ஒருவர் சென்னையில் இல்லை. இதனால் ஒரு குற்றவாளியான ஞானசேகரன் (37) என்பவர் மட்டும் இருப்பது தெரியவந்தது. அதை தொடர்ந்து, போலீசார் அவரை மாணவி புகார் கொடுக்கும் நேரத்திலேயே தூக்கிவிட்டனர். அவரிடம் விசாரணை நடத்தியபோது தான் எந்த தவறும் செய்யவில்லை என்று கூறினார். ஆனால், அவரது செல்போன் டவரை பார்த்தபோது அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் இருந்தது உறுதி செய்யப்பட்டது. அவர் டிப்ளமோ இன்ஜினியரிங் முடித்தவர் என்பதால், தனது செல்போனை பிளைட் மோடில் போட்டு விட்டுத்தான் சென்றுள்ளார்.
மேலும் செல்போனை ஆய்வு செய்தபோது ஆபாச படங்கள் எதுவும் இல்லை. இதனால் சைபர் க்ரைம் போலீஸ் உதவியுடன் செல்போனை ஆய்வு செய்தபோது, செல்போனில் ஏராளமான ஆபாச படங்கள், வீடியோக்கள் இருந்தன. அவற்றில் மாணவியை மிரட்டிய வீடியோக்களும் இருந்தன. இதை தொடர்ந்து, அவர்தான் குற்றவாளி என்பதை உறுதி செய்தனர். அப்போது அவரை சம்பவ இடத்துக்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றபோது தப்பி ஓடினார். போலீசார் விரட்டிச் சென்றனர். அப்போது காம்பவுண்ட் சுவரை தாண்டி குதித்தபோது அவரது ஒரு கை, கால் முறிந்தது.
அதை தொடர்ந்து அவரை பிடித்த போலீசார் விசாரணை நடத்தினர். அவர், மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததை ஒப்புக் கொண்டார். அதைத் தொடர்ந்து அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். கைது செய்யப்பட்ட ஞானசேகரன் 3 இடங்களில் பிரியாணி கடை நடத்தி வந்தது தெரியவந்தது. இவர் மீது 13 வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த 2010ம் ஆண்டுக்கு பிறகு எந்த குற்றத்திலும் ஈடுபட்டதற்கான புகார்கள் வரவில்லை. அதேநேரத்தில் இவர் அண்ணா பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து இதுபோன்ற குற்றங்களில் ஈடுபட்டு வந்தாரா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
* வீடியோவை தந்தை, டீனுக்கு அனுப்பி டிசி தர வைப்பேன் என மிரட்டினான்
போலீஸ் தரப்பில் கூறும்போது, 23ம்தேதி இரவு 7.45 மணிக்கு மாணவர் விடுதி கட்டிடத்தின் பின்புறம் உள்ள தூண் அருகில் மாணவியும், ஒரு மாணவரும் பேசிக்கொண்டு இருந்துள்ளனர். அப்போது பின்பக்கம் இருந்த 30 வயது மதிக்கத்தக்க நபர் வந்து நீங்கள் ‘கிஸ்’ செய்ததை வீடியோ எடுத்துள்ளேன். அந்த வீடியோவை உன் தந்தை, டீனுக்கு அனுப்பி உங்கள் டி.சி.யை தர வைப்பேன் என்று மிரட்டியுள்ளான். பிறகு காதலனை மிரட்டிவிட்டு மாணவியை மட்டும் நெடுஞ்சாலை ஆய்வக கட்டிடத்திற்கு அழைத்து சென்றுள்ளான். மாணவி மன்னிப்பு கேட்டு கெஞ்சியுள்ளார்.
அதற்கு அவன் மாணவிக்கு மூன்று ‘ஆப்சன்’ தந்துள்ளான். முதல் ஆப்சன் ‘வீட்டில் மற்றும் டீன் அலுவலகத்திற்கு இந்த வீடியோவை காண்பித்து கல்லூரியில் இருந்து உனக்கு டிசி தர வைப்பேன்’. இரண்டாவது ஆப்சன் ‘என் கூட கொஞ்ச நேரம் இரு’, மூன்றாவறு ஆப்சன் ‘அந்த சார் கூட கொஞ்ச நேரம் இரு’ என மாணவியை மிரட்டியுள்ளான். இந்த 3 ஆப்சன் சொன்னதற்கு பின் மாணவி எதுவும் கூறாமல் அமைதியாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரத்தில் மாணவியை திட்டியுள்ளான். பின் மாணவியை தொட ஆரம்பித்துள்ளான்.
இதன்பிறகு மேலும் ஆபாசமாக நடக்க ஆரம்பித்துள்ளான். அப்போது அந்த காட்சிகளை போனில் வீடியோ எடுத்து காண்பித்துள்ளான். பின்னர் மாணவியின் செல்போனில் இருந்து அவரது தந்தையின் செல்போன் எண்ணை எடுத்துக்கொ
ண்டு, நான் கூப்பிடும் போதெல்லாம் நீ வர வேண்டும் என்று கூறி அவரது கல்லூரிக்கான அடையாள அட்டை மற்றும் ஐ-போனை எடுத்துள்ளான். பின்னர், அவன் அருகில் உள்ள கட்டிடத்தின் அருகே மாணவியை விட்டு விட்டு சென்றுள்ளான். மாணவி பார்க்கும்போது கருப்பு சட்டை, க்ரே ஜீன், கருப்பு கேப் அணிந்து இருந்ததாக தெரிகிறது என்று போலீசார் தெரிவித்தனர்.
* 3 மனைவிகள்
ஞானசேகரனுக்கு சொந்த ஊரே கோட்டூர்புரம் தான். அவன் வளர்ந்தது எல்லாம் அண்ணா பல்கலைக்கழகம் அருகில்தான். விளையாடுவதற்கு கூட அங்குதான் செல்வான். இதனால் அண்ணா பல்கலைக்கழகம் குறித்து அனைத்து தகவல்களும் அவனுக்கு தெரியும். அவனுக்கு 3 மனைவிகள் உள்ளனர். 3 பேர் வீட்டுக்கும் அடிக்கடி செல்வான். அதை தவிர பாலியல் பெண்களுடனும் பழக்கம் வைத்துள்ளான். இந்நிலையில்தான், மாணவியை மிரட்டி பாலியல் தொந்தரவில் ஈடுபட்டுள்ளான் என்று தெரியவந்தது. அவனால் முழுமையாக பாலியல் உறவில் ஈடுபட முடியாது. இதனால்தான் பலாத்கார முயற்சியில் ஈடுபடாமல் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளான் என்பது தெரியவந்தது.
The post சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பலாத்கார சம்பவம் குறித்து பரபரப்பு தகவல்கள்: துணிச்சலுடன் புகார் செய்த மாணவி; துரித நடவடிக்கை எடுத்த போலீஸ் appeared first on Dinakaran.