×

சென்னை அண்ணா பல்கலைக்கழக விடுதிக்கான விதிகளில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல்..!!

சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழக விடுதிக்கான விதிகளில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அண்ணாபல்கலைக்கழகத்தின் கீழ் இயங்க கூடிய கிண்டி பொறியியல் கல்லூரியை சேர்ந்த 2 ஆம் ஆண்டு மாணவி பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டது தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 2 நாட்களாக இச்சம்பவத்தை குறித்து பல்வேறு அரசியல் கட்சிகள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

மாணவர்களின் பாதுகாப்புக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் கோ.வி செழியன் ஏற்கனவே தெரிவித்திருந்தார். இந்த நிலையில் அண்ணா பல்கலை கழகத்தின் கீழ் சென்னையில் இயங்கக்கூடிய 4 வளாக கல்லூரியின் முதல்வர்கள் இன்று காலை ஒன்று சேர்ந்து மாணவர்கள் பாதுகாப்பு குறித்து ஆலோசனை நடத்தினர். நீண்ட நேரமாக நடைபெற்ற இந்த கூட்டத்தில் பல்வேறு விவகாரங்கள் குறித்த ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆலோசனையின் முடிவில்,

ஏற்கனவே இரவு 8.30 வரை மாணவர்கள் விடுதிக்கு செல்லலாம் என அனுமதி இருந்த நிலையில் அதை மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இரவு 8.30 மணிக்குப் பதிலாக மாலை 6.30 மணிக்கு மாணவர்கள் விடுதிகளில் இருக்க வேண்டும். மாணவர்கள் அனைவரும் கல்வி அடையாள அட்டை அணிய வேண்டும். அடையாள அட்டை அணியாமல் பல்கலை கழக வளாகத்தில் நடமாட கூடிய மாணவர்கள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

மாணவர்கள் தாமதமாக விடுதிக்கு வர நேரிட்டால் முன்கூட்டியே வார்டனுக்கு தகவல் அளிக்க வேண்டும். மாணவர்கள் தகவல் அளிக்காமல் விடுதிக்கு தாமதமாக வந்தால் பெற்றோரிடம் தகவல் தெரிவிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலை. தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் இது குறித்த அதிகார பூர்வமான அறிக்கையும் விரைவில் வெளியாகும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

 

The post சென்னை அண்ணா பல்கலைக்கழக விடுதிக்கான விதிகளில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல்..!! appeared first on Dinakaran.

Tags : Anna University ,Chennai ,Anna University Accommodation ,Kindi College of Engineering ,Tamil Nadu ,
× RELATED அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வழக்கு...