×

சுரங்க பால பணிக்காக சுருக்கப்பட்ட வெள்ளிவிழா நினைவு பூங்கா விரிவுபடுத்தப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

திருப்பூர்: திருப்பூர் மாநகரில் மக்கள் தொகை ஆண்டுதோறும் அதிகரித்து வரக்கூடிய நிலையில் மக்கள் தொகைக்கு ஏற்றவாறு மாநகராட்சி பகுதியில் அமைந்துள்ள மாநகராட்சி வெள்ளிவிழா நினைவு பூங்காவை விரிவுபடுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர். ஆயத்த ஆடை உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் பல்லாயிரம் கோடி அன்னிய செலவாணியை ஈட்டி தரக்கூடிய தொழில் நகரமாக திருப்பூர் இருந்து வருகிறது. மாநகரில் உள்ள பின்னலாடை மற்றும் அதன் சார்பு நிறுவனங்கள், அனுப்பர்பாளையம், ஆத்துப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நூற்றுக்கணக்கான பாத்திர பட்டறைகள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் பணிபுரிவதற்காக திருப்பூர் மட்டுமல்லாது வெளி மாவட்டம் மற்றும் மாநிலத்தைச் சேர்ந்த மக்கள் திருப்பூர் மாநகரில் குடும்பத்துடன் குடியேறி தங்கி பணிபுரிந்து வருகின்றனர். இதன் காரணமாக, திருப்பூர் மாநகரில் மட்டும் சுமார் 11 லட்சத்திற்கு அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். மக்கள் தொகைக்கு ஏற்றவாறான பொழுதுபோக்கு அம்சங்கள் திருப்பூரில் பெரும்பாலும் இல்லை.

திரையரங்குகளுக்கு அடுத்து திருப்பூரில் உள்ள பொழுதுபோக்கு பூங்காக்கள் மட்டுமே பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அழைத்துச் செல்லக்கூடிய பொழுது பொழுதுபோக்கு இடங்களாக உள்ளது. திருப்பூர் பூங்கா சாலையில் நொய்யல் கரையோரம் அமைந்துள்ள மாநகராட்சி வெள்ளிவிழா நினைவு பூங்கா 50 ஆண்டுகளை கடந்து இன்றும் செயல்பட்டு வருகிறது. திருப்பூர் மாநகராட்சி பகுதியில் தொடங்கப்பட்ட முதல் பூங்காவான இது மட்டுமே இன்று பல்வேறு விளையாட்டுககழுடன் பயன்பாட்டில் உள்ளது. இது தவிர்த்து குடியிருப்பு பகுதிகளுக்குள் ஆங்காங்கே பூங்காக்கள் இருந்தாலும் கூட சிறுவர் சிறுமியர்கள் விளையாடும் வகையில் ஒரு சில விளையாட்டுகள் மட்டுமே உள்ளது‌. ஆனால், மாநகராட்சி வெள்ளிவிழா நினைவு பூங்காவில் சிறியோர் முதல் பெரியவர்கள் வரை விளையாடக்கூடிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளது.

இது மட்டுமல்லாது பிறந்தநாள் உள்ளிட்ட விழாக்களை நடத்துவதற்கான அரங்க வசதியும் உள்ளது. குழந்தைகளுக்கான ராட்டினம், சுழலும் கார், வாத்து ராட்டினங்கள், பந்து அறை, படகு சவாரி, ஏணி, ஊஞ்சல், சறுக்கு மரம் உள்ளிட்டவையும், பெரியவர்களுக்கு பெரிய ராட்டினங்கள், டிராகன் ராட்டினம், சுழலும் ராட்டினம், டான்சிங் கார் ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாது செயற்கை வண்ண நீரூற்று, வண்ண மீன் காட்சியகம் ஆகியவை இடம் பெற்றுள்ளதோடு பல்வேறு பறவை இனங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மாலை நேரத்தில் டிஜே நடனம் உள்ளிட்டவையும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக, வார இறுதி நாட்களாக சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை தினங்களில் இந்த பூங்காவிற்கு 3000 முதல் 4000 பேர் வரை வந்து செல்வதாக கூறப்படுகிறது.

பெரியவர்களுக்கு நுழைவு கட்டணமாக 20 ரூபாயும் சிறியவர்களுக்கு நுழைவு கட்டணமாக பத்து ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. ஆனால் மக்கள் வருகைக்கேற்றவாறு பூங்காவிற்கான இடத்தை விரிவு படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. தற்போது வளர்மதி பாலம் அருகே சுரங்கப்பாதை கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக, பூங்காவின் ஒரு பகுதி கையகப்படுத்தப்பட்டு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளதால் மேலும் பூங்காவின் இடம் சுருக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, தற்போதுள்ள மக்கள் தொகைக்கு ஏற்றவாறு ஒரே நேரத்தில் 3000 பேர் வரை வந்து சென்றால் இடப்பற்றாக்குறை ஏற்படும் நிலை உருவாகிறது. இதனை தவிர்க்க திருப்பூர் மாநகராட்சி வெள்ளி விழா நினைவு பூங்கா விரிவுபடுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து பூங்காவிற்கு குழந்தைகளை அழைத்து வரும் பெற்றோர் கூறுகையில்,“திருப்பூரின் மையப்பகுதியில் பொழுது போக்குவதற்கான இடங்கள் ஏதுமில்லை. தற்போது, பள்ளி அரையாண்டு விடுமுறை விடப்பட்டிருப்பதன் காரணமாக குழந்தைகளை பூங்காவிற்கு அழைத்து வர வேண்டிய நிலை உள்ளது. விளையாடுவதற்கு பல்வேறு ராட்டினங்கள் மற்றும் உபகரணங்கள் இருந்தாலும் கூட நெருக்கடியில் விளையாடும்போது போன்ற உணர்வு ஏற்படுகிறது. 500க்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் வந்தாலும் கூட போதுமான அளவு குழந்தைகளை விளையாட வைக்க முடிவதில்லை. உடனடியாக பூங்காவை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்படுகிறது. எனவே தற்போதுள்ள சூழலுக்கு ஏற்றவாறு பூங்காவை விரிவுபடுத்த வேண்டும்’’ என்றனர்.

The post சுரங்க பால பணிக்காக சுருக்கப்பட்ட வெள்ளிவிழா நினைவு பூங்கா விரிவுபடுத்தப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.

Tags : Silver Festival Memorial Park ,Tiruppur ,Municipal Silver Festival Memorial Park ,Dinakaran ,
× RELATED அனைத்து வணிக நிறுவனங்களில் தமிழில்...