×

சமயபுரம் கோயிலுக்கு பக்தர்கள் வழங்கிய 541 கிலோ தங்கத்தை உருக்குவதற்காக வங்கியிடம் ஒப்படைப்பு: அமைச்சர்கள் நேரு, சேகர்பாபு வழங்கினர்

சமயபுரம்: சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய 541 கிலோ தங்கத்தை உருக்குவதற்கு மும்பைக்கு அனுப்ப அமைச்சர்கள் நேரு, சேகர்பாபு ஆகியோர் நேற்று வங்கி அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். தமிழக சட்டப்பேரவையில் 2021-2022ம் ஆண்டு நடந்த மானிய கோரிக்கையின்போது அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, கடந்த 10 ஆண்டுகளாக கோயில்களில் காணிக்கையாக வரப்பெற்ற பொன் இனங்களில், கோயிலுக்கு தேவைப்படும் இனங்கள் நீங்கலாக, ஏனைய பொன் இனங்களை மும்பையில் உள்ள அரசுக்கு சொந்தமான தங்கம் உருக்கு ஆலையில் உருக்கி சொக்கத்தங்கமாக மாற்றி கோயிலுக்கு வருவாய் ஈட்டும் வகையில் வங்கியில் முதலீடு செய்யப்படும் என்று அறிவித்தார்.

அதன்படி கோயில்களில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் தங்கங்களை சேகரித்து உருக்கி வருகின்றனர். திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு தினம்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து வழிபாடு நடத்துவதுடன் தங்களது வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக தங்கத்தை காணிக்கையாக செலுத்தி வருகின்றனர். அப்படி உண்டியலில் செலுத்தப்படும் காணிக்கைகள் மாதம்தோறும் இருமுறை எண்ணப்பட்டு பணம், தங்கம், வெள்ளி பொருட்கள் கோயில் வங்கி கணக்கில் டெபாசிட் செய்யப்படும்.

அந்தவகையில் கடந்த செப்டம்பர் 9ம்தேதி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி துரைசாமி ராஜு தலைமையில் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் ரவிசந்திரபாபு, மாலா ஆகியோர் முன்னிலையில் பக்தர்களின் நேர்த்திக்கடன், காணிக்கையாக வரப்பெற்ற 541 கிலோ, 781 கிராம் எடையுள்ள பொன் இனங்கள் பிரிக்கப்பட்டது. இந்த பணியில் இந்து சமய அறநிலையத்துறை திருச்சி மண்டல இணை ஆணையர் கல்யாணி, சமயபுரம் மாரியம்மன் கோயில் இணை ஆணையர் பிரகாஷ், கோயில் அறங்காவலர் குழுத்தலைவர் இளங்கோவன் மற்றும் அதிகாரிகள் ஈடுபட்டனர்.

இந்நிலையில் சமயபுரம் மாரியம்மன் கோயில் வளாகத்தில் காணிக்கையாக வரப்பெற்ற தங்கத்தை ஸ்டேட் வங்கியில் முதலீடு செய்வதற்கு ஒப்படைக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. உச்சநீதிமன்ற ராஜூ தலைமையில் உயர் நீதிமன்ற நீதிபதி ரவிசந்திரபாபு, மாலா முன்னிலையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு ஆகியோர் 541 கிலோ தங்கத்தை ஸ்டேட் வங்கியில் முதலீடு செய்வதற்காக ஒப்படைத்தனர்.

இதன்பின் வங்கி சார்பில் தங்கத்தை உருக்குவதற்காக மும்பைக்கு அனுப்பி வைக்கப்படும். விழாவில் கலெக்டர் பிரதீப்குமார், மண்ணச்சநல்லூர் எம்எல்ஏ கதிரவன், கோயில் அறங்காவலர் குழுத்தலைவர் இளங்கோவன், இணை ஆணையர் பிரகாஷ் மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.

The post சமயபுரம் கோயிலுக்கு பக்தர்கள் வழங்கிய 541 கிலோ தங்கத்தை உருக்குவதற்காக வங்கியிடம் ஒப்படைப்பு: அமைச்சர்கள் நேரு, சேகர்பாபு வழங்கினர் appeared first on Dinakaran.

Tags : Samayapuram ,temple ,Ministers ,Nehru ,Shekarbabu ,Samayapuram Mariamman ,Mumbai ,Tamil Nadu Legislative Assembly ,Minister ,Endowments… ,
× RELATED தங்க பிஸ்கட்களாக மாற்ற சமயபுரம்...