×

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்திற்கு பல்வேறு கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
எடப்பாடி பழனிசாமி (அதிமுக): சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர், இருவரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. உடனடியாக குற்றவாளிகளை கைது செய்வதுடன், அவர்களுக்கு உச்சபட்ச சட்டப்பூர்வ தண்டனை கிடைக்கப்பெறுவதை உறுதி செய்ய வேண்டும்.
ராமதாஸ் (பாமக): பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவரை இரண்டு பேர் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக வெளியாகியுள்ள செய்திகள் பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கின்றன. சென்னையின் மையப்பகுதியில் உள்ள உலகப்புகழ் பெற்ற அண்ணா பல்கலைக்கழக வளாகத்திலேயே இப்படி ஒரு கொடுமை நிகழ்ந்திருப்பது கண்டிக்கத்தக்கது.
டிடிவி தினகரன் (அமமுக): பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவியை பாலியல் தொந்தரவுக்கு உள்ளாக்கியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, இனிவரும் காலங்களில் மாணவிகள் அனைவரும் பாதுகாப்பான சூழலில் கல்வி பயில்வதை உறுதி செய்ய வேண்டும்.
கே. பாலகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட் கட்சி): மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தவர்களை உடனடியாக கைது செய்து கடும் தண்டனை வழங்கிட வேண்டுமெனவும், சமூக விரோத சக்திகளின் நடவடிக்கைகளை ஒழித்திட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.
பிரேமலதா (தேமுதிக): மாநிலத் தலை நகரத்தின் மையப்பகுதியில், பொறியியல் கல்வி தலைமை நிறுவனமான அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நிலை இருக்கிறது உடனடியாக, இந்தக் குற்றத்தில் தொடர்புடைய அனைவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அண்ணாமலை (பாஜ): சென்னையின் மையப்பகுதியில் அமைந்துள்ள தமிழகத்தின் முதன்மை கல்வி நிறுவனமான அண்ணா பல்கலைக்கழகத்தில் 2 மர்ம நபர்களால் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான செய்தி அதிர்ச்சியளிக்கிறது. இந்த சம்பவம் தொடர்பான குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும்.
நெல்லை முபாரக் (எஸ்டிபிஐ கட்சி): கல்வி நிறுவனங்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுத்து நிறுத்தவும், பெண்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்கும் வகையிலும், தமிழக அரசு உறுதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

The post அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : ANNA UNIVERSITY ,Chennai ,EDAPPADI PALANISAMI ,ADAMUKA ,Dinakaran ,
× RELATED சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி...