×

25 நிமிடத்தில் 1.40 லட்சம் பேர் முன்பதிவு சொர்க்க வாசல் தரிசன டிக்கெட் கிடைக்காதவர்களுக்கு மாற்று ஏற்பாடு: திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு

திருமலை: திருப்பதியில் சொர்க்க வாசல் தரிசன டிக்கெட் ஆன்லைனில் வெளியிடப்பட்டு 25 நிமிடங்களில் 1.40 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ள நிலையில், டிக்கெட் கிடைக்காதவர்களுக்கு தேவஸ்தானம் மாற்று ஏற்பாடு செய்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி ஜனவரி 10ம் தேதி சொர்க்கவாசல் திறக்கப்பட்டு 19ம் தேதி வரை 10 நாட்களுக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். இந்த 10 நாட்களுக்கு உண்டான ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் ஆன்லைனில் நேற்று வெளியிடப்பட்டது.

இந்த டிக்கெட்டுகள் வெளியிடப்பட்ட 25 நிமிடத்தில் 1.40 லட்சம் டிக்கெட்டுகளையும் பக்தர்கள் முன்பதிவு செய்தனர். ஆனால் இந்த டிக்கெட்டுகளை பெறுவதற்காக 14 லட்சம் பேர் தேவஸ்தான இணையதளத்தில் முயற்சி மேற்கொண்டு கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில் இந்த 10 நாட்களுக்கு உண்டான இலவச தரிசன டோக்கன்கள் திருப்பதியில் 9 இடங்களில் வழங்கப்பட உள்ளது. இதற்கான கவுண்டர்கள் ஏற்பாடு செய்வதை செயல் அதிகாரி ஷியாமலா ராவ், கூடுதல் செயல் அதிகாரி வெங்கையா சவுத்திரியுடன் இணைந்து ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: திருப்பதி, திருமலையில் சொர்க்க வாசல் தரிசனத்திற்காக ஜனவரி 10, 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் 3 நாட்களுக்கு உண்டான 1.20 லட்சம் இலவச சர்வ தரிசன டோக்கன்கள் ஜனவரி 9ம் தேதி காலை 5 மணி முதல் தொடர்ந்து வழங்கப்படும். 3 நாட்களுக்கு உண்டான டோக்கன்கள் முடிந்த பின்னர், அந்தந்த நாட்களுக்கு உண்டான டோக்கன்கள் முந்தைய நாள் வழங்கப்படும். இதற்காக திருப்பதியில் 8 மையங்களில் 87 கவுண்டர்களும், திருமலையில் 4 கவுன்டர்களும் என மொத்தம் 91 கவுன்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. பக்தர்கள் தங்களின் ஆதார் அட்டையை காண்பித்து டோக்கன் பெற வேண்டும். இந்தமுறை முறைகேடுகள் நடக்காமல் இருக்க டோக்கன் பெற்ற பக்தர்களுக்கு அவர்களின் புகைப்பட அடையாளத்துடன் கூடிய டோக்கன் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

The post 25 நிமிடத்தில் 1.40 லட்சம் பேர் முன்பதிவு சொர்க்க வாசல் தரிசன டிக்கெட் கிடைக்காதவர்களுக்கு மாற்று ஏற்பாடு: திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : gate of ,Tirupati Devasthanams ,Tirumala ,Tirupati ,Vaikuntha Ekadashiya ,Tirupati Ezhumalaiyan ,
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மார்ச்...