×

பள்ளியில் நுழைந்து மிரட்டிய பாஜ நிர்வாகிகள் 7 பேருக்கு வலை

சத்தியமங்கலம்: ஈரோடு மாவட்டம், புஞ்சை புளியம்பட்டியில் தனியார் சிபிஎஸ்இ பள்ளியில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டவர், பைபிள் வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை மாணவர்களுக்கு வழங்கியுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த ஈரோடு வடக்கு மாவட்ட பாஜ இளைஞரணி செயலாளர் ஹரிஹரன், தனியார் பள்ளி குறித்து தனது முகநூல் பக்கத்தில் அவதூறாக பதிவிட்டதாகவும், ஆதரவாளர்களுடன் பள்ளிக்குள் அத்துமீறி நுழைந்து பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர்களிடம் வாக்குவாதம் செய்து மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து தனியார் பள்ளி நிர்வாகம் புஞ்சை புளியம்பட்டி போலீசில் புகார் அளித்தது. அதன்பேரில், போலீசார் வழக்கு பதிந்து பாஜ நிர்வாகி ஹரிஹரனை கைது செய்து சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கிளைச்சிறையில் அடைத்தனர். இவ்வழக்கில் தொடர்புடைய பாஜ வழக்கறிஞர் அணி மாவட்ட செயலாளர் சின்னராஜ், பவானிசாகர் மண்டல தலைவர் ஈஸ்வரமூர்த்தி, மண்டல தலைவர் தங்கமணி, வர்த்தக அணி மாவட்ட தலைவர் சந்திரசேகர், மண்டல பொதுச்செயலாளர் சதீஷ்குமார், இளைஞர் அணி மண்டல தலைவர் ரகு சூர்யா, ஆறுமுகம் ஆகிய 7 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களை தேடி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

The post பள்ளியில் நுழைந்து மிரட்டிய பாஜ நிர்வாகிகள் 7 பேருக்கு வலை appeared first on Dinakaran.

Tags : BJP ,Sathyamangalam ,Christmas ,CBSE ,Punjai Puliyampatti, ,Erode district ,Erode North District BJP Youth Committee ,Dinakaran ,
× RELATED பள்ளிக்குள் நுழைந்து மிரட்டல் வழக்கில் மேலும் ஒரு பாஜ நிர்வாகி கைது