×

மும்பை போலீஸ் பேசுவதாக கூறி புதுச்சேரி, தமிழகம் உள்பட பல மாநிலங்களில் ரூ.66 கோடி மோசடி செய்த 3 பேர் கைது: சைபர் கிரைம் போலீசார் அதிரடி

புதுச்சேரி: புதுச்சேரி, தமிழகம் உள்பட பல மாநிலங்களில் ரூ.66 கோடி மோசடி செய்த மேற்குவங்காளத்தை சேர்ந்த 3 பேரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். புதுச்சேரி முருங்கப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் அழகம்மை. இவரிடம் அறிமுகமில்லாத நபர்கள் வாட்ஸ்-அப் மூலமாக தங்களை மும்பை போலீஸ் என்று அறிமுகப்படுத்தி, உங்களது ஆதார், செல்போன் எண்களை பயன்படுத்தி கம்போடியா மற்றும் தைவான் நாடுகளுக்கு மும்பையில் இருந்து தடை செய்யப்பட்ட போதைப்பொருள் மற்றும் போலி பாஸ்போர்ட்டுகள் கடத்தப்பட்டுள்ளது என்று கூறி, டிஜிட்டல் அரஸ்ட் செய்துள்ளதாக மிரட்டி ரூ.27 லட்சம் பணத்தை இணையவழி மோசடிக்காரர்கள் கொள்ளையடித்து உள்ளனர்.

இதுகுறித்து அழகம்மை, புதுச்சேரி இணைய வழி காவல் நிலையத்தில் கடந்த ஜூன் 1ம் தேதி புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர்கள் தியாகராஜன், கீர்த்தி தலைமையிலான சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். பல்வேறு வங்கி கணக்குகள், ஸ்கைப் ஆன்லைன் வீடியோ கால் மற்றும் பணம் பரிவர்த்தனை செய்யப்பட்ட பல்வேறு வங்கிகளின் விவரங்கள், வாட்ஸ்அப், டெலிகிராம் ஆகியவற்றில் பேசியவை என பல கோணங்களில் விசாரணை செய்தனர்.

அப்போது கொல்கத்தாவை சேர்ந்த ஒரு நபரின் வங்கி கணக்கிற்கு ரூ.27 லட்சம் பணம் சென்றது தெரியவந்தது. அது சம்பந்தமாக சைபர் கிரைம் எஸ்.பி. பாஸ்கரன் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் கீர்த்தி தலைமையிலான போலீசார், கொல்கத்தா சென்று விசாரித்ததில் மேற்படி வழக்கில் மேற்குவங்காளத்தை சேர்ந்த அமித்சர்தார் (36), ராகேஷ் கோஷ் (39), சஞ்சிப் தேப் ஆகிய 3 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் விசாரணைக்கு வருமாறு போலீசார் சம்மன் அளித்தனர். அதன்பேரில் மேற்படி நபர்கள், புதுச்சேரி இணைய வழி காவல் நிலையம் வந்தனர்.

அப்போது, அவர்களுடைய வங்கி பரிவர்த்தனைகள் மற்றும் வாட்ஸ்-அப், டெலிகிராம் மற்றும் தொலைபேசி விவரங்களை ஆய்வு செய்தபோது மேற்படி வங்கி கணக்குகள் இந்தியா முழுவதும் பல வழக்குகளில் சம்மந்தப்பட்டு இருப்பது தெரியவந்தது. மேலும், இவ்வழக்கில் மோசடியான முறையில் பணம் பெறப்பட்ட குறிப்பிட்ட வங்கி கணக்கிற்கு, என்சிஆர்பி போர்டல் மூலமாக பல்வேறு மாநிலங்களில் இருந்து மொத்தம் ரூ.66.11 கோடி மோசடி செய்துள்ளனர். இவர்கள் ஆன்லைன் மோசடி குற்றவாளிகளுக்கு வங்கி கணக்குகளை வாங்கி தருவது, பணத்தை அவர்கள் சொல்கின்ற வங்கி கணக்கிற்கு மாற்றுவது மற்றும் கிரிப்டோ கரன்சிகளை வாங்கி அவர்களுக்கு அனுப்புவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இதையடுத்து 3 பேரையும் நேற்று போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இது சம்பந்தமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களுடைய செல்போன்களின் விவரங்களை சேகரித்து வருகின்றனர். இதில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பதும், அவர்கள் மும்பை, அசாம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருப்பதும் தெரியவந்துள்ளது. அவர்களையும் கைது செய்ய தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இவ்வழக்கில் முக்கிய குற்றவாளிகளை கைது செய்த சைபர் கிரைம் காவல்நிலைய இன்ஸ்பெக்டர்கள் தலைமையிலான போலீசாரை சீனியர் எஸ்.பி. பாராட்டினார்.

* `மோசடிக்காரர்களிடம் சிம்கார்டு, வங்கிக்கணக்கு கொடுத்தால் சிறை’
இதுபற்றி சைபர் கிரைம் சீனியர் எஸ்.பி. நாரா சைதன்யா கூறுகையில், உங்களை டிஜிட்டல் அரஸ்ட் செய்துள்ளோம், மும்பை போலீஸ் பேசுகிறோம், உங்களுடைய செல்போன் எண்ணை பயன்படுத்தி வெளிநாடுகளுக்கு போதைப் பொருள் கடத்தப்பட்டுள்ளது, உங்களுடைய வங்கி கணக்கில் சட்டத்துக்கு விரோதமாக பண வருவாய் வந்துள்ளது, கூரியரில் உங்களுடைய மொபைல் எண்ணை பயன்படுத்தி போதைப்பொருள் கடத்தப்பட்டுள்ளது என இதுபோன்று எந்த இணைய வழி மோசடி மிரட்டல் அழைப்புகள் வந்தாலும் அதை நம்ப வேண்டாம். மேலும் நம்பி பணத்தை செலுத்த வேண்டாம். இது சம்பந்தமாக, உடனடியாக 1930 என்ற இணையவழி காவல் நிலைய இலவச தொலைபேசி நம்பரை தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்களை கேட்டுக்கொள்கிறேன். மேலும், இதுபோல் வங்கி கணக்குகள், சிம் கார்டு பணத்திற்காக யார் கேட்டாலும் கொடுக்க வேண்டாம். மேற்படி வங்கி கணக்குகள், சிம் கார்டுகள் இணையவழி மோசடிக்காரர்களால் பயன்படுத்தப்பட்டு, நீங்கள் சிறைக்கு செல்ல நேரிடும் என்றார்.

The post மும்பை போலீஸ் பேசுவதாக கூறி புதுச்சேரி, தமிழகம் உள்பட பல மாநிலங்களில் ரூ.66 கோடி மோசடி செய்த 3 பேர் கைது: சைபர் கிரைம் போலீசார் அதிரடி appeared first on Dinakaran.

Tags : Mumbai Police ,Puducherry ,Tamil Nadu ,West Bengal ,Murungapakkam ,Cyber ,Dinakaran ,
× RELATED தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில்...