×

அதிக சுத்தம் ஆபத்தானதா?

நன்றி குங்குமம் டாக்டர்

மனநல ஆலோசகர் ஜெயஸ்ரீ கண்ணன்

அகமெனும் அட்சயப் பாத்திரம்

இந்தக் குறைபாடு எனக்கு இருக்கிறது என்று உணர்ந்துகொள்வதும் இது ஒரு நிலையே.அதிலிருந்து மீண்டு வருதல் மிக அவசியம் என்று ஏற்றுக்கொண்டாலே பாதிப் பிரச்னைகள் மறைந்துவிடும். OCD குறித்த விழிப்புணர்வைப் படித்து அறிந்துகொள்ளுதல், நலன் விரும்பிகளோடு பகிர்தல், நண்பர்களோடு வெளியே செல்லுதல், இடம் மாற்றம் செய்தல், புதியதாக ஏதாவது ஒன்றைக் கற்றுக்கொள்ள ஆரம்பித்தல் என்று ஆரோக்யமான வழியில் மனதைத் திசைதிருப்பி இயல்பிற்குக் கொண்டு வரலாம். தேவைப்படுமாயின் மனநல ஆலோசகரை அணுகி உதவி பெறலாம்.

OCD எதனால் உருவாகிறது என்றால் ஒவ்வொரு நபருக்கும் ஒவ்வொரு காரணம் இருக்கலாம்.சில இடங்களில் மரபணு காரணமாக இருக்கக்கூடும்.ஆனால் அன்றாடப் பழக்கவழக்கங்கள், மதநம்பிக்கை போன்றவை நேரடியாக காணும்போதே குழந்தைகளுக்குப் பதிவாகின்றன என்ற நோக்கில் பார்க்கும்போது, சூழல் காரணிகளும் OCD -யை உருவாக்குகின்றன என்றுதான் சொல்ல வேண்டும். உடற்கூறுகளின் அடிப்படையில் மூளையின் உள்தோற்றத்தை நுட்பமாக ஒப்பிட்டுப் பார்த்தால் OCD பாதிப்பு உள்ளவர்களுக்கும், மற்றவர்களுக்கும் சிறுவேறுபாடுகள் உள்ளதை அறிவியல் உணர்த்துகிறது.

தற்காலத்தில் உடல்ரீதியாகப் பரிசோதித்து செரோடோனின் (Serotonin ) சுரப்பின் அளவு மாறுபாடு காரணமாகவும் OCD தோன்றலாம் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது. சமூகம் மற்றும் உளவியல் ஆராய்ச்சிகள் நீண்டகாலத் தனிமை OCD -க்கு வித்திடுகிறது என்றும் முடிவைக் கொடுத்துள்ளது. Teddy திரைப்படம் இத்தகு தனிமை விழைவின் OCD பண்புகளை கதாநாயகன் வழியாகப் காட்சிப்படுத்தியுள்ளதை நினைவில் நிறுத்தலாம்.

இன்று சர்வதேச அளவில் பெரும் கவனம் பெற்றுவரும் OCD வெகுகாலமாக ஆராயப்பட்டு பலரின் பங்களிப்பினால் தெளிவான புரிதல் நிலையை எட்டியிருக்கிறது. முதன்முதலில் 1921 – ஆம் ஆண்டு ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ராபர்ட் பேர்ட்டன் என்பவர்தான் இது குறித்துப் பேசினார்.அவர் எழுதிய ‘The Anatomy of Melancholy’ என்ற நூல் பிற்கால உளவியல் ஆராய்ச்சிகளுக்கு அடிப்படையாக அமைந்தது.அதன்பிறகு, 19-ஆம் நூற்றாண்டில் ஃபிரான்ஸ் மற்றும் ஜெர்மனியில் ஓசிடி குறித்த விழிப்புணர்வு வளர்ந்தது. ஓசிடி -யின் அறிகுறிகளை ஜெர்மனியைச் சேர்ந்த உளவியல் நிபுணர் Karl Friedrich Olto paul மாறுபட்ட கண்ணோட்டத்தில் நிரூபணங்களோடு முன்வைத்தார்.அவையே பிற்காலத்தில் இலண்டனில் ஒரே நிலை மயக்கம் (Obsession ) என்றும் அமெரிக்காவில் கட்டாயப்பெருவிழைவு (Compulsion ) என்றும் குறிப்பிடப்பட்டு உலகெங்கும் பரவியது.

உளவியலில் நாம் எது குறித்துப் பேசினாலும் ஃபிய்ராட்டின் தத்துவங்களளைப் பகிராமல் நிறைவு செய்ய இயலாது. OCD குறித்து அவர், ‘‘உள்ளே நடக்கும் மனப்போராட்டம்” என்கிறார்.அதாவது சுயநினைவற்ற (Unconcious state ) நிலைக்கும், சுயவிழிப்புணர்வின் (Consciousness ) வகுக்கப்பட்ட வாழ்க்கை முறைகளுக்கும் இடையேயான தொடர் சிக்கல்களின் விளைவே OCD என்கிறார்.1952 -ஆம் ஆண்டு ஆண்டில் வெளியிடப்பட்ட DSM 1 OCD குறித்து தவறான புரிதல்களைக் கொடுத்ததாக ஒரு மாற்றுக்கருத்தும் வரலாற்றில் உண்டு. அதன் பின்னர் தனிப்பெரும் பிரிவாக உளவியலாளர்களும், மனநல மருத்துவர்களும் OCD குறித்து விரிவாக அறிந்து விழிப்புணர்வை ஏற்படுத்தத் துவங்கினார்கள்.அதனைத் தொடர்ந்து 1970 -80 -களுக்குப் பின் தெளிவான வரையறைகளோடு புரிதல்களும், தீர்வுகளும் வெளிச்சமாகியுள்ளன.

எனவே, OCD எனும் குறைபாடு குறித்து மனம் திறந்து பேசுவது, கலந்துரையாடல் நிகழ்த்துவது இன்று சகஜமாகிவிட்டது. இது ஒரு ஆரோக்யமான மனப்போக்கு.வெளிநாட்டைச் சேர்ந்த நிக்கோலா டெல்ஸா எனும் இயற்பியல் ஆராய்ச்சியாளர் தனக்குப் பலவிதமான ஓசிடி பாதிப்புகள் இருந்ததை வெளிப்படையாகக் குறிப்பிட்டார்.அவருக்கு புறாக்கள் , அணிகலன்கள் மீது பயம் இருந்தது. அவை தீமை விளைவிக்கும் என்று தீவிரமாக வெறுப்பில் இருந்தார்.இயல்பு வாழ்வில் இருந்து ஒதுங்கினார். மேலும், மூன்று என்ற எண் மட்டுமே தன்னைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளும் என்று உறுதியாக நம்பிய அவர், ஹோட்டல்களில் பிரச்சனைகளை ஏற்படுத்தினார்.

தான் பபிள்கம் மெல்லும் எண்ணிக்கையை தவறாமல் எண்ணுவது அவரின் வாடிக்கை.அதைத் தவிர்க்கவே முடியவில்லை. உண்ணும் உணவை எடைப்போட்டு சற்றும் மாறாமல் அதே அளவில் இருக்கும்படிச் செய்வாராம். இந்தப் பழக்கங்கள் மாறினால் அவரால் ஏற்றுக்கொள்ளவே முடியாத தீவிரம் இருந்தது. டெல்ஸாவின் OCD சிக்கல்கள் மனோவியல் மருத்துவர்களுக்கே பெரும்சவாலாக இருந்தது என்றால் பாருங்கள். ஆனால், பலவிதமான ஆராய்ச்சிகளுக்கு உட்படுத்தி அவருக்கு வழங்கிய பயிற்சிகள், சிகிச்சை முறைகள் இன்றளவும் பல OCD தொடர்பான பிரச்சனைகளுக்குத் தீர்வை வழங்கி வருகிறது. குறைபாடு கொண்டவரே பிறர் குறைபாடுகளை நீக்க மறைமுகமாக வழிசெய்து இருக்கிறார் எனில், எந்தக்குறையும் குறையே அல்ல என்று இதன்மூலம் நாம் நேர்மறையாகப் புரிந்து கொள்ளலாம்.

உலகப் புகழ் பெற்ற ‘டைட்டானிக்’ திரைப்படத்தில் நடித்த நடிகர் லியார்னோடோ டி கேப்ரியோ தனக்கு சிறுவயது முதலே ஒரு பக்கமாக நடப்பதில், படிக்கட்டுகளில் ஏறுவதில் குறிப்பிட்ட முறையின் தீவிரம் இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், OCD குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக The Aviator எனும் திரைப்படத்தில் பாதிப்பு உள்ளவராக நடித்திருக்கிறார். நம் நாட்டில்கூட ‘மின்சாரக் கனவு’ கஜோலின் கணவர் என்று நம்மால் அறியப்படக்கூடிய நடிகர் அஜய் தேவ்கன் அவர்கள் ‘‘கிருமித்தொற்று அச்சத்தின் தீவிரம் காரணமாக, தான் ஒருபோதும் கைகளால் உணவு உண்பதே இல்லை. கரண்டிகள் மட்டுமே’’என்று வெளிப்படுத்தியுள்ளார்.

சோப்பு, கழிப்பறைத் துடைப்பான், கிருமி நாசினிகள், தெளிப்பான்கள், வாசனைத் திரவியங்கள் என தூய்மைக்கான பொருட்களைக் கணக்கில்லாமல் வாங்கிக் குவித்துக் கொண்டே இருப்பது, வேறு பொருட்களை வாங்கச் சென்றாலும் இவற்றையே மீண்டும் மீண்டும் வாங்கிவருவது தன்னுடைய OCD பாதிப்பு என்று நடிகர் ரன்வீர்சிங் குறிப்பிடுகிறார். நம் எல்லோரிடமும் இதுபோல ஏதோவொரு OCD பாதிப்பு இருக்கக்கூடும்.வெளியிடங்களில் கழிப்பறைகளைப் பயன்படுத்த முடியாத நிலை, டார்லிங் 2 திரைப்படத்தின் கதாபாத்திரம்போல் சிறு சிறு பொருட்களை எந்த உள்நோக்கமுமின்றி எடுத்து வைத்துக்கொள்வது இப்படி ஆபத்துகள் இல்லாத OCD பட்டியல் நீளும்.ஆனால் அவற்றைப் பெரும்பாதிப்புகளை உருவாக்கும் நிலைக்குச்
செல்லாமல் கட்டுக்குள் வைப்பது அவசியம்.

இந்த உலகம் அனைத்து உயிர்களுக்குமானது. மரம்,செடி, கொடி ஏன் கிருமி எனும் ஒரு செல் உயிரிகள்கூட பரிணாமவளர்ச்சியில் பெரும்பங்காற்றுபவையே. எனவே கிருமித்தொற்று என்று அதீத அச்சம் கொள்பவர்களும் இதனை மனதில் நிறுத்துவதோடு ‘Exposure Response Remittance’ எனப்படும் பயிற்சியைத் தாமாகவே வீட்டில் மேற்கொள்ளலாம். அதாவது எது அதிக விருப்பு அல்லது வெறுப்பை, பயத்தை உண்டாக்குகிறதோ மீண்டும் மீண்டும் அதற்குள் நம்மை உட்படுத்திக் கொள்வது. சுருக்கமாகச் சொன்னால், அருணாச்சலம் திரைப்படத்தில் அதிகப் பணத்தைச் செலவழிக்க சொல்லும் வழிமுறையே இது.

அதிக அளவில் பயன்படுத்தினால் அதன் மீது சலிப்பும் வெறுப்பும் ஏற்பட்டுவிடும் எனும் உளவியல். புகைபிடிப்பவர்கள் ஒரு நாள்முழுதும் தொடர்ந்து புகைப்பிடித்துக் கொண்டே இருந்து மறுநாள் அப்பழக்கத்தை எளிதாக விட்டுவிடுவதை நடைமுறையில் நாம் பார்த்திருக்கிறோம்.அன்றைய தலைமுறைக்கு ஆசைக்கனவாக ஏங்கும் பொருளாக முந்திரிப் பருப்பு இருந்தது.இன்று பரவலாக எல்லாவற்றிலும் அதிகமாகப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டபோது, இன்றைய குழந்தைகள் பலருக்கும் முந்திரிப்பருப்பு மீது ஒவ்வாமை (Alergy ) தோன்றியுள்ளதை எனது சமீபத்து உளவியல் செய்முறை ஆராய்ச்சியில் கண்டறிந்தேன்.

மேலும்,OCD -க்கான சிகிச்சை முறைகளில் ‘15 நிமிட விதி ‘என்பதும் முன்னிறுத்தப்படுகிறது.செய்ய வேண்டும் என்ற கட்டாய உணர்வு எழும்போது 15 நிமிடங்கள் உறுதியாக அதைச் செய்யாமல் தள்ளி வைப்பது, தடுத்து மனக்கட்டுப்பாட்டைக் கொண்டு வருவது.குடும்பத்தாரின் ஒத்துழைப்போடு இவற்றை முயற்சி செய்யலாம். உணர்வுத் தூக்கல், மன எழுச்சியோடு மிகவேகமாக பதற்றத்தோடு செய்யும் செயல் அறிவற்றதாகப் பயனற்றுப் போய்விடும். சிந்திக்கும் ஆற்றலை மூளை குறைத்துக் கொள்ளும். ஆகவே காதலன் திரைப்படத்தில் கண்டு ரசித்ததை உள்வாங்கி, ‘‘எதுவானாலும் 5 நிமிடம் தள்ளிப்போடு” என்பதை 15 நிமிடம் வரை தள்ளிப்போட்டு நம் வாழ்விற்குப் பொருத்தமானவற்றைத் தேர்ந்தெடுத்துச் செய்யலாம்.

கொரோனா பெருந்தொற்றுக் காலத்திற்குப் பிறகு உலகெங்கும் சுத்தம் குறித்த விழிப்புணர்வு கூடியுள்ளது வரவேற்கத்தக்கதே. ஆனால், ஆதிகாலத்திலேயே மஞ்சள், இஞ்சி, துளசி, வீட்டின் முகப்பில் வேப்பிலை என, தூய்மையின் முக்கியத்துவத்தை உணவு முறைகள் , வழிபாட்டு முறைகள் மூலம் வாழ்க்கையோடு கலந்து வைத்த முன்னோரின் அறிவியல் தெளிவை மறந்துவிடக்கூடாது. நோய்மையற்ற அழகிய வீடு நல்ல மனநிலையோடு, நேர்மறை எண்ண அலைகளைத் தோற்றுவிக்கும் என்பதைக் கருத்தில் கொண்டு சுகாதாரம் பேணுவோம். அதே நேரம் தீவிர நிலையில் எதனைக் கைக்கொண்டாலும் அது சிக்கல்களை உருவாக்கும் என்று புரிந்து சுத்தம் குறித்த நம் விழைவுகளை சமநிலையில் வைத்துக்கொள்வது நல்லது.

‘‘இரவில் குப்பைக் கொட்டினால் குடும்பத்திற்கு ஆகாது” என்போம். அவசியமான பொருள் ஏதாவது இருளில் குப்பையோடு போய்விடக்கூடும். இரவு நேரத்தில் குப்பைக்கூளங்களுக்கு அருகே சென்றால் பூச்சி, பாம்பு என விஷ ஜந்துக்கள் தேடி வரக்கூடும் ஆபத்து இருக்கிறது. இரவு நேரத்தில் வெப்பநிலை குறைவாக இருக்கும்போது அழுகிய குப்பைகளை, கிருமிகளைத் தொடும்போது கிருமித்தொற்று ஏற்பட வாய்ப்பு அதிகம் இப்படி பெரியவர்களின் எளிய நடைமுறை வரையறைகளிலேயே அற்புதமான வாழ்க்கைச் சூட்சமங்கள் அடங்கியுள்ளன எனத் தெளிவோம்.குடும்பம் நடத்துவதையே ‘குப்பைக் கொட்டுவது’ என்றுதான் சொல்வோம் என்றால் குப்பையும் நல்லதே என அதனை முறையாகக் கையாளக் கற்றுக் கொள்ளவேண்டும்.

அடிப்படை சுகாதார வசதிகள்கூட இல்லாத இருப்பிடங்களில் வாழும் குழந்தைகள் மிகுந்த நோய் எதிர்ப்புத் திறனைக் கொண்டிருப்பதைப் புள்ளிவிவரங்கள் உறுதிப்படுத்துகின்றன. பழகப் பழக எதுவுமே இயல்பாகிவிடும் இல்லையா? ஆக பழகிய கிருமிகள்கூட அவர்களை ஒன்றும் செய்வதில்லையோ என்றே தோன்றுகிறது.காய்கறி மற்றும் பழக்குப்பைகள், சருகுகள் அனைத்தும் குப்பைகள் அல்ல. அவை மண்ணுக்கு உரமாகவே பார்க்கப்பட்ட மரபு நம்முடையது. ஆனால்,பொருளாதார வளர்ச்சியில் எட்டிய மேட்டிமை மனநிலை (Elite mindset ) பலரையும் மண்ணைக் கண்டாலே ‘‘ச்சீ அழுக்கு” என்று முகம் சுளிக்க வைத்து விட்டது.

குழந்தைகள் மண்ணில் விளையாடினால் பலரும் தடை போடுகிறார்கள்.ஆனால், களிமண்ணில் பிசைந்து குழந்தைகள் விளையாடும்போது,அவர்களின் பொறியியல் திறன், புத்தாக்க மூளைச் செயல்பாடுகள் அதிகரிக்கிறது என்று வெளிநாட்டவரின் கல்விமுறையாகச் சொன்னால் உடனே சரியென்று கேட்டுக் கொள்கிறோம். மண் என்று சொன்னால் குப்பையாகத் தோன்றும் மனதுக்கு, ‘க்ளே ‘ (Clay) என்று சொன்னால் அறிவுப்பயிற்சி என்று புரிகிறது.

இந்த முரண்பாடான தாழ்வு மனப்பான்மையை முதலில் விட்டொழிப்போம்.நம்மில் எவருக்கேனும் OCD பாதிப்பின் அறிகுறிகள் இருந்தால் அலட்சியமாக விட்டுவிடாமல் உரிய முறையில் சமநிலைப்படுத்த உதவுவோம். எவ்வளவு சுத்தம் சோறு போடும்? எவ்வளவு எல்லை மீறும்போது அதுவே குடும்பத்தின் அமைதியைக் கெடுக்கும் என்பதை அறிய முற்படுவோம்.பழங்கால வாழ்வியலின் துணையோடு, நவீன அறிவியலின் வழிகாட்டுதல்களோடு தூய்மையான பழக்க வழக்கங்களை, தூய்மையான எண்ணங்களோடு செயல்படுத்துவோமாக.

The post அதிக சுத்தம் ஆபத்தானதா? appeared first on Dinakaran.

Tags : Kungumam ,Dr. ,Jayashree Kannan Akamen ,Akshaya Patraman ,Dinakaran ,
× RELATED கழுத்து வலியிலிருந்து விடுதலை பெறுவோம்!