×

தேர்தல் நடத்தை விதிமுறைகளில் திருத்தம் ஜனநாயக படுகொலை செய்துள்ளது மோடி ஆட்சி: செல்வப்பெருந்தகை கடும் கண்டனம்

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று ெவளியிட்ட அறிக்கை: அவசர அவசரமாக ஒன்றிய சட்ட அமைச்சகம் தேர்தல் ஆணையத்தின் நடத்தை விதிமுறைகளை திருத்தம் செய்திருக்கிறது. ஏற்கனவே, 1961 தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி தேர்தல் சம்மந்தமான அனைத்து விவரங்களையும் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கிற மனுதாரருக்கு வழங்கப்பட்டு வந்தது. ஆனால், தற்போது செய்யப்பட்ட திருத்தத்தின்படி இத்தகைய ஆவணங்களை வழங்குவதிலிருந்து தேர்தல் ஆணையத்திற்கு விலக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

இதன்படி, நீதிமன்றம் கேட்டால் கூட ஆவணங்களை தேர்தல் ஆணையம் வழங்காமல் இருக்கிற உரிமையை பெற்றிருக்கிறது. இது ஏற்கனவே தேர்தல் ஆணையத்தின் மீதுள்ள நம்பகத்தன்மையை இழந்த நிலையில், இத்தகைய திருத்தத்தின் மூலம் மோடி தலைமையிலான ஆட்சி அப்பட்டமான ஜனநாயகப் படுகொலையை செய்திருக்கிறது. மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட், ஹரியானாவில் சுதந்திரமாகவும், பாரபட்சமின்றி தேர்தல் நடத்தப்பட்டிருந்தால் இந்தியா கூட்டணி ஜார்க்கண்டில் வெற்றி பெற்றதைப் போல, மகாராஷ்டிராவிலும், ஹரியானாவிலும் நிச்சயம் வெற்றி பெறும் என்று நாடே எதிர்பார்த்தது.

தேர்தல் ஆணையத்தின் முறைகேடுகள் குறித்து ஆதாரப்பூர்வமாக நீதிமன்றத்தை அணுகினாலும், இதில் தலையிட முடியாது. இதற்கு ஒரே தீர்வு தேர்தலுக்கு எதிராக வழக்கு தொடுப்பதுதான் என்று உச்சநீதிமன்றம் ஆணையிட்டிருப்பது பாஜ ஆட்சியாளர்களுக்கு பாதுகாப்பாக அமைந்துள்ளது. மூவர் தேர்வுக் குழுவில் தலைமை நீதிபதியை அகற்றி விட்டு ஒன்றிய அமைச்சரை குழுவில் சேர்க்கப்பட்டது.

இதன்மூலம் மூன்றில் இரண்டு பேர் பெரும்பான்மை என்ற அடிப்படையில் எதிர்க்கட்சித் தலைவரின் பரிந்துரை புறக்கணிக்கப்பட்டு, பிரதமர் மோடி யாரை விரும்புகிறாரோ, அவரைத்தான் தலைமை தேர்தல் ஆணையராகவோ, ஆணையர்களாகவோ நியமிப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டு விட்டது. இந்நிலை ஏற்பட்டது தேர்தல் ஜனநாயகத்திற்கே மிகப்பெரிய ஆபத்து, பெரும் கேடு என்று ராகுல்காந்தி கடுமையாக விமர்சனம் செய்தார். அதையெல்லாம் புறக்கணித்த காரணத்தினால் இன்றைக்கு தேர்தல் ஆணையமே பிரதமர் மோடியின் கைப்பாவையாக மாறி விட்டது.

The post தேர்தல் நடத்தை விதிமுறைகளில் திருத்தம் ஜனநாயக படுகொலை செய்துள்ளது மோடி ஆட்சி: செல்வப்பெருந்தகை கடும் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Modi ,Selvaperundakai ,Chennai ,Tamil Nadu Congress ,Union Law Ministry ,Election Commission ,Dinakaran ,
× RELATED எம்.ஜி.ஆர். – நரேந்திரமோடி ஒப்பீடு சரியானதே: அண்ணாமலை விளக்கம்