×

எட்டயபுரம்-அருப்புக்கோட்டை இடையே இயக்கப்படும் அரசு பேருந்து சனிக்கிழமைகளில் மாயம்

*மாணவர்கள் சிறப்பு வகுப்பு செல்ல முடியாமல் தவிப்பு

கோவில்பட்டி : தூத்துக்குடி மாவட்டம் அரசு போக்குவரத்து கழக பணிமனை மூலம் தினமும் காலை 7.15 மணிக்கு எட்டயபுரத்திலிருந்து அருப்புக்கோட்டைக்கு அரசு பஸ் இயக்கப்படுகிறது. இந்த பஸ் புறப்பட்டு மேலக்கரந்தை தாப்பாத்திக்கு காலை 7.55 மணிக்கும், மேலக்கரந்தைக்கு காலை 8 மணிக்கும்- வெம்பூருக்கு 8.05 மணிக்கும் வந்தடைந்து பந்தல்குடி வழியாக அருப்புக்கோட்டை செல்கிறது.

மேலக்கரந்தை, தாப்பாத்தி, அகதிகள் முகாம், முத்துலாபுரம், அயன்வடமலாபுரம், அச்சங்குளம், கீழக்கரந்தை, வெம்பூர் போன்ற கிராமங்களில் உள்ள மாணவர்கள் தொடக்கப்பள்ளியை முடித்து உயர் கல்விக்காக பந்தல்குடி அரசு மேல்நிலை பள்ளிக்கு இப்பேருந்தில் சென்று வருகின்றனர்.

தற்போது மழைக்காலம் என்பதால் கன மழையால் பள்ளி நாட்களில் விடுப்பு விடப்பட்டதால் சனிக்கிழமை சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதனால் சனிக்கிழமை பள்ளிக்கு செல்ல தாப்பாத்தி, மேலக்கரந்தை, வெம்பூர் பேருந்து நிறுத்தங்களுக்கு வந்தனர். காலை 8 மணிக்கு வர வேண்டிய பேருந்து காலை 8.40 மணி வரை வரவில்லை. இதனால் பள்ளிக்கு செல்ல முடியாமல் தவித்தனர்.

இந்நிலையில் காலை 8.50 மணிக்கு அருப்புக்கோட்டை பணிமனை அரசு பேருந்து கோவில்பட்டியில் இருந்து இதேவழித்தடத்தில் மேலக்கரந்தை, பந்தல்குடி வழியாக அருப்புக்கோட்டை செல்லும் பேருந்து மேலக்கரந்தை நிறுத்தத்தில் வைத்து ஏற முயன்றனர். ஏற்கனவே கூட்ட நெரிசலுடன் பேருந்தில் பயணிகள் நின்றனர். அனைத்து மாணவர்களும் ஏற முடியாததால் பள்ளி செல்ல முடியாமல் வீடு திரும்பி விட்டனர். பேருந்தில் தொங்கிக்கொண்டு பயணம் செய்த மாணவர்களை நடுவழியில் ஓட்டுனர், நடத்துனர் இறக்கி விட்டு சென்று விட்டனர்.

வழக்கமாக வர வேண்டிய பேருந்து வராததால், மாணவர்களின் கல்வியின் அவசியத்தை அலட்சியம் செய்த போக்குவரத்து துறையாலும் மாணவ, மாணவிகள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.
கோவில்பட்டி பணிமனை அரசு பேருந்து சனிக்கிழமை மாயமாவது வாடிக்கையாக கொண்டுள்ளது. எனவே அனைத்து நாட்களிலும் அரசு பேருந்து பள்ளி நேரத்தில் இயக்க வேண்டும் என கரிசல் பூமி விவசாயிகள் சங்க தலைவர் வரதராஜன் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

The post எட்டயபுரம்-அருப்புக்கோட்டை இடையே இயக்கப்படும் அரசு பேருந்து சனிக்கிழமைகளில் மாயம் appeared first on Dinakaran.

Tags : Ettayapuram ,Aruppukottai ,Kovilpatti ,Thoothukudi District Government Transport Corporation ,Melakaranthi Thapathi ,
× RELATED தூத்துக்குடி- மதுரை தேசிய...