*தேக்கடி பெரியாறு அணைப்பகுதியில் பரபரப்பு
கூடலூர் : பெரியாறு அணையின் நீர்த்தேக்க பரப்பு பகுதி மற்றும் சாலை, பொதுப்பணித்துறையினர் அலுவலக குடியிருப்புப் பகுதிகள் உள்பட 8,100 ஏக்கர் நிலத்திற்கு, ஒப்பந்தத்தின் அடிப்படையில் தமிழக அரசு குத்தகை பணம் செலுத்தி வருகிறது. பெரியாறு அணை கேரள பகுதியில் இருந்தாலும் அணையின் உரிமை மற்றும் பராமரிப்பு ஆகியவை தமிழக நீர்வளத்துறையினர் பொறுப்பிலும், தமிழக அரசின் உரிமையிலும் உட்பட்டு இருக்கிறது.
தேக்கடியில் இருக்கும் தமிழக குத்தகை வரம்பிற்குள் உள்ள தமிழக பொதுப்பணித்துறை அலுவலகம் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் பாதுகாப்பு காரணங்களுக்காகவும், குடியிருப்பை ஒட்டியுள்ள தமிழகப் பகுதிக்கு நீர் திறந்து விடும் ஷட்டர் பகுதிகளில் கண்காணிக்கவும் தமிழக பொதுப்பணித்துறை (நீர்வளத்துறை) அதிகாரிகள் சிசிடிவி கேமரா பொருத்த முடிவு செய்தனர். கடந்த 20ம் தேதி அலுவலகம், பணியாளர் குடியிருப்பு மற்றும் நுழைவாயில் பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் மற்றும் சோலார் லைட் அமைப்பதற்கான வேலைகளை தொடங்கி முதற்கட்டமாக 4 சிசிடிவி கேமராக்களை பொருத்தியுள்ளனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கேரள பெரியாறு புலிகள் காப்பக வனத்துறை அதிகாரிகள் சிசிடிவி கேமராக்கள் அமைக்கும் பணியினை தடுத்து நிறுத்தி, ‘‘கேரள அரசின் அனுமதி பெற்றே பணிகளை தொடங்க வேண்டும். மேற்கொண்டு பணிகளை செய்தால் வழக்கு தொடர்வோம்’’ எனக் கூறிச் சென்றுள்ளனர்.
இதைத்தொடர்ந்து, ‘‘எங்கள் (தமிழக உரிமைக்கு உட்பட்ட) பகுதிக்குள் பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக பொருத்திய கேமராக்களை அப்புறப்படுத்த முடியாது. எங்களது மேல் அதிகாரிகளிடம் இதுகுறித்து தெரிவித்து அவர்கள் வழிகாட்டுதலில் அடுத்தகட்ட பணிகள் தொடரும்’’ எனக் கூறி சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணியினை தமிழக பொதுப்பணித்துறையினர் பாதியிலேயே நிறுத்திவிட்டனர்.
இந்நிலையில், அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் மற்றும் கேமரா பொருத்துவதற்கான உபகரணங்கள் அனைத்தும் நேற்றுமுன்தினம் (டிச. 21) இரவோடு இரவாக திடீரென அகற்றப்பட்டு விட்டன. அதிர்ச்சியடைந்த தமிழக அதிகாரிகள் மறுநாள் காலையில் கேரள வனத்துறை அதிகாரிகளிடம் இதுகுறித்து கேட்டுள்ளனர். ஆனால், அவர்கள் தங்களுக்கு எதுவும் தெரியாது என பதில் கூறாமல் மழுப்பி விட்டனர். இச்சம்பவம் பெரியாறு அணைப்பகுதியில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொடரும் நெருக்கடி
கடந்த சில காலங்களாக பெரியாறு அணை ஆய்வு குறித்து செய்தி சேகரிக்கச் செல்லும் தமிழக பத்திரிகையாளர்கள் கேரள வனத்துறையினரால் தடுத்து நிறுத்தப்படுகின்றனர். ஆனால் கேரள பத்திரிகையாளர்கள் அணையின் அனைத்துப் பகுதிகளிலும் சுதந்திரமான செய்தி சேகரிக்க சென்று வருகின்றனர். அணை பகுதி, தமிழக பொதுப்பணித்துறை குடியிருப்பு பகுதி, அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தமிழக பத்திரிகையாளர்கள் செய்தி சேகரிக்க சென்று வருவதற்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கேரள வனத்துறையினரின் இச்செயலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
The post கேரள வனத்துறை மீண்டும் நெருக்கடி பொதுப்பணித்துறை குடியிருப்பில் பொருத்திய கேமராக்கள் அகற்றம் appeared first on Dinakaran.