திருமலை: தெலங்கானா மாநிலம், ஐதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டரில் புஷ்பா படம் பார்க்க சென்றபோது, ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி என்ற பெண் உயிரிழந்தார். அவரது மகன் ஸ்ரீதேஜ் கோமா நிலையில் உயிருக்கு போராடி வருகிறார். இந்த சம்பவம் நடந்து 15 நாட்கள் ஆன நிலையில், இதுதொடர்பாக அல்லு அர்ஜூன் உட்பட 11 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். அல்லு அர்ஜூன் தற்போது இடைக்கால ஜாமீனில் உள்ளார்.
சட்டப்பேரவையில் முதல்வர் ரேவந்த் ரெட்டி இந்த விபத்தில் பெண் உயிரிழந்ததற்கும், சிறுவன் கோமா நிலைக்கு சென்றதற்கும் நடிகர் அல்லு அர்ஜூன் தான் காரணம் என குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு அல்லு அர்ஜூன் எனது 20 ஆண்டுகால சினிமா வாழ்க்கையை களங்கப்படுத்தும் விதமாக என் மீது குற்றம் சாட்டப்பட்டிருப்பதாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ஐதராபாத்தில் உள்ள உஸ்மானியா பல்கலைக்கழக கூட்டு நடவடிக்கை குழு மாணவர் சங்கத்தினர் ஐதராபாத் ஜூப்லிஹில்ஸ் பகுதியில் உள்ள அல்லு அர்ஜூன் வீட்டின் முன் நேற்று கூடினர். வீட்டின் மீது தக்காளி, கற்களை வீசிய அவர்கள், அங்கிருந்த பூத்தொட்டிகளை உடைத்து சேதப்படுத்தினர். அல்லு அர்ஜூனின் செயலால் ரேவதி குடும்பத்தினர் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், எனவே ரேவதி குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி நஷ்டஈடு வழங்க வேண்டும் என கோஷமிட்டனர். இது தொடர்பாக 8 மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.
* பெண் இறந்தது தெரிந்தும் வெளியே வர மறுப்பு
ஐதராபாத் போலீஸ் கமிஷனர் சி.வி.ஆனந்த் சந்தியா தியேட்டர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான வீடியோவை வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது: சந்தியா தியேட்டர் வெளியே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பெண் இறந்துவிட்டதாக அல்லு அர்ஜூனிடம் போலீசார் கூற முயன்றனர். ஆனால் தியேட்டர் மேலாளர் அல்லு அர்ஜூனிடம் செல்லவிடாமல் பவுன்சர்கள் மூலம் தடுத்தனர். பின்னர் மீண்டும் கூட்ட நெரிசல் ஏற்பட்டதை அல்லு அர்ஜூனின் கவனத்திற்கு கொண்டு சென்று ஒரு பெண் இறந்துவிட்டதாகவும், சிறுவனின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் சிக்கடப்பள்ளி ஏசிபி ரமேஷ் அல்லு நேரடியாக தெரிவித்தார்.
அப்போது கூட அல்லு அர்ஜூன் படம் முழுவதும் பார்த்துவிட்டு தான் செல்வேன் என்றார். பின்னர் நள்ளிரவு 12 மணி அளவில் டிஜிபி நேரடியாக அல்லு அர்ஜூனிடம் சென்று தியேட்டரை விட்டு வெளியேறுமாறு வலுக்கட்டாயமாக வெளியே அழைத்து வரப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டார். பவுன்சர்கள் எங்காவது போலீசாரை, பொதுமக்களை தள்ளி விட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
The post ஐதராபாத்தில் உள்ள நடிகர் அல்லு அர்ஜூன் வீட்டின் மீது கற்கள், தக்காளி வீச்சு: 8 பேர் கைது appeared first on Dinakaran.