சென்னை: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தால் தரமான பருப்பு மற்றும் பாமாயில் வழங்கும் நிறுவனங்களுக்கே கொள்முதல் ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது என்று வாணிப கழக மேலாண்மை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண்மை இயக்குநர் வெளியிட்ட அறிக்கை: தர சோதனையில் தேர்வாகாத நிறுவனங்களுக்கு ரூ.1000 கோடி ரேஷன் பொருள் வாங்க ஆணை என்று பரப்பப்படும் செய்தி முற்றிலும் தவறானது. உரிய நடைமுறைகளை பின்பற்றி கொள்முதல் செய்யப்படுகின்றன. பத்திரிகையில் ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு பெறப்படும் ஒப்பந்தப்புள்ளிகளின் தொழில் நுட்ப ஆவணங்கள் தலைமை அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் நிலையில் உள்ள 5 அலுவலர்களை கொண்ட ஒப்பந்தப்புள்ளி ஆய்வுக்குழுவால் முழுமையாக ஆய்வு செய்யப்படுகின்றன. இவற்றில் தேர்ச்சி பெற்ற தகுதியுள்ள ஒப்பந்தப்புள்ளிகளின் பட்டியலை இக்குழு பரிந்துரைக்கிறது.
அதன்பின்னர் விலைப்புள்ளிகள் திறக்கப்பட்டு தகுதியான நிறுவனங்களுடன் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் குழும துணைக்குழு விலைக்குறைப்பு பேச்சுவார்த்தை நடத்தி அதன் பரிந்துரையின் அடிப்படையில் குழுமக் குழுவின் ஒப்புதல் பெற்று குறைந்த விலைக்கு விநியோகிக்க ஒப்புக்கொண்ட நிறுவனங்களுக்கு பாமாயில் மற்றும் துவரம் பருப்பு கொள்முதலுக்கான ஆணைகள் வழங்கப்படுகின்றன. துவரம் பருப்பு மற்றும் பாமாயில் கொள்முதல் செய்வதற்கு 2024 நவம்பர் 21ம் தேதி ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு அதற்கான பருப்பு மற்றும் பாமாயில் மாதிரிகள் ஒப்படைப்பு செய்வதற்கு 2024 டிசம்பர் 9ம் தேதி இறுதி நாளாக நிர்ணயிக்கப்பட்டது.
18 நிறுவனங்களிடமிருந்து 30 பருப்பு மாதிரிகளும் 9 நிறுவனங்களிடமிருந்து 9 பாமாயில் மாதிரிகளும் தலைமை அலுவலகத்தில் பெறப்பட்டன. பருப்பு மாதிரி சமர்ப்பித்த நிறுவனங்களில் ஒன்றும் பாமாயில் மாதிரி சமர்ப்பித்த நிறுவனங்களில் ஒன்றும் ஒப்பந்தப்புள்ளி ஆவணங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவில்லை. முதல் மாதிரி பகுப்பாய்வில் தேர்ச்சி பெறாத நேர்வுகளில், இரண்டாவது மாதிரியை ஆய்வகத்திற்கு பகுப்பாய்விற்கு அனுப்பி அதில் கிடைக்கும் முடிவையும் வைத்து பரிசீலனை செய்து இரண்டாவது மாதிரியிலும் தேர்ச்சி பெறாத நிறுவனத்தின் விலைப்புள்ளி திறக்கப்படமாட்டாது என்பதும் வழக்கத்திலுள்ள நடைமுறையாகும்.
2024 டிசம்பர் 9ம் தேதி ஒப்பந்தப்புள்ளி ஆவணங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யாத நிறுவனங்களை தவிர்த்து 17 நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட பருப்பு வகை மாதிரிகள் மாதிரி எண் குறிப்பிட்டு பகுப்பாய்விற்காக கிண்டியில் உள்ள NABL-ல் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகத்திற்கும் அதே நாளில் 8 நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட பாமாயில் மாதிரிகள் மாதிரி எண் குறிப்பிட்டு திருமழிசையில் உள்ள NABL-ல் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டன. பகுப்பாய்விற்காக அனுப்பிய 30 பருப்பு மாதிரிகளில், 24 மாதிரிகள் நிர்ணயிக்கப்பட்ட தரத்துடன் இருந்ததாகவும் 6 மாதிரிகளில் மட்டும் சேதமடைந்த மற்றும் உடைந்த பருப்புகள் நிர்ணயிக்கப்பட்ட அளவைவிடக் கூடுதலாக இருந்ததால் அவை உரிய தரத்தில் இல்லை எனவும் ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனாலும், மேற்கண்ட 6 மாதிரிகளின் தர ஆய்வு விவரங்கள் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் மற்றும் அக்மார்க் நிர்ணயித்த வரம்பிற்குள் இருந்தன. ஆதலால் 6 நிறுவனங்களால் சமர்ப்பிக்கப்பட்ட இரண்டாவது மாதிரிகள் மீண்டும் பகுப்பாய்விற்காக அனுப்பப்பட்டன. திரும்ப அனுப்பப்பட்ட ஆறு மாதிரிகளும் தர ஆய்வில் தேர்ச்சி பெற்றிருந்ததாக ஆய்வக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. விலைப்புள்ளிகள் திறக்கப்பட்டு அதனடிப்படையில் விலைக்குறைப்பிற்கான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன.
அதில் பருப்பில் குறைவான விலைப்புள்ளி அளித்த 4 நிறுவனங்களுக்கு கொள்முதல் ஆணைகள் வழங்கப்பட்டன. இவ்வாறு கொள்முதல் ஆணை வழங்கப்பட்ட 4 நிறுவனங்களின் பருப்பு மாதிரிகள் முதல் பகுப்பாய்விலேயே தரமானவை என சான்று பெறப்பட்டவையாகும். இந்நிறுவனங்களின் பருப்புகள் தரமற்றவை என நிராகரிக்கப்பட்டவை அல்ல. மேலும் முதல் மாதிரியில் தரம் குறைந்ததாக அறிவிக்கப்பட்ட நிறுவனங்கள் அளித்த விலைப்புள்ளிகளிலும் இந்த நான்கு நிறுவனங்கள் கொடுத்த விலைப்புள்ளியை விட அதிக விலைக் குறிப்பிடப்பட்டிருந்தன. பாமாயிலுக்கும் இதே நடைமுறையில் தகுதி பெற்ற 8 நிறுவனங்களும் தேர்ந்தோர் பட்டியலில் தேர்வு செய்யப்பட்டு அவற்றுடன் விலைக்குறைப்பு பேச்சுவார்த்தை நடத்தி விலையை குறைத்து வழங்கிய நிறுவனங்களுக்கு கொள்முதல் ஆணைகள் வழங்கப்பட்டன.
இந்த நிறுவனங்கள் கடந்த காலங்களில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு பாமாயில் வழங்கி வரும் நிறுவனங்களாகும். எனவே, மூன்று நிறுவனங்களின் பாமாயில் மாதிரிகள் தரமற்றவை என்று நிராகரிக்கப்பட்டதாக தெரிவித்திருப்பதும் பருப்பு கொள்முதல் ஆணை வழங்கப்பட்ட நான்கு நிறுவனங்களில் இரு நிறுவனங்களின் மாதிரிகள் முதலில் நடந்த தர பரிசோதனையில் தேர்வாகவில்லை என்பதும் சட்டத்திற்கு விரோதமாக அவற்றுக்கு ஆணை வழங்கப்பட்டுள்ளது என்பதும் முற்றிலும் தவறானதாகும். தர சோதனையில் தேர்வாகாத நிறுவனங்களுக்கு ரூ.1000 கோடி ரேஷன் பொருள் வாங்க ஆணை என்று தலைப்பிட்டிருப்பதும் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானதாகும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
The post தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தால் தரமான பருப்பு, பாமாயில் வழங்கும் நிறுவனங்களுக்கே கொள்முதல் ஆணை: மேலாண்மை இயக்குநர் தகவல் appeared first on Dinakaran.