×

தொழிற்சாலைகளில் பணிபுரியும் மகளிர் நலன் கருதி 17 சிப்காட் தொழிற்பூங்காக்களில் குழந்தை காப்பகங்கள்: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா முன்னிலையில் கையெழுத்து

சென்னை: தொழிற்சாலைகளில் பணிபுரியும் மகளிர் நலன் கருதி 17 சிப்காட் தொழிற்பூங்காக்களில் குழந்தைகள் காப்பகங்கள் அமைக்க அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா முன்னிலையில் கையெழுத்தானது. தொழிற்சாலைகளில் வேலைக்கு செல்லும் பெண்கள் முன்னேற்றத்திற்காக, தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் (சிப்காட்) தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் உள்ள 17 சிப்காட் தொழில் பூங்காக்களில் குழந்தைகள் காப்பகங்களை தொடங்க திட்டமிட்டுள்ளது.

இந்த குழந்தைகள் காப்பகங்கள், பணிபுரியும் பெற்றோரின் குறிப்பாக பெண்களின் மன அழுத்தத்தை குறைக்கவும், பெண் தொழிலாளர்கள் அதிகளவில் பணியாற்றக்கூடிய சூழலை உருவாக்கவும் தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்தின் மூலம் 17 தொழில் பூங்காக்களில் குழந்தைகள் காப்பகங்கள் தொடங்கப்பட உள்ளன. ஏற்கனவே 13 தொழிற்பூங்காக்களில் 63 குழந்தைகள் காப்பகங்கள் பல்வேறு தொழிற்சாலைகள் மூலம் நடத்தப்பட்டு வருகின்றன. இவற்றின் பயனாக ஏறத்தாழ 1 லட்சத்து 50 ஆயிரம் தொழிலாளர்கள் பயன்பெற்று வருகிறார்கள்.

2024-25ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் அறிவித்தபடி இந்த குழந்தைகள் காப்பகங்கள் வேலைக்கு செல்லும் பெற்றோர்கள் தொழிற்சாலைகளில் கவலையின்றி பணியாற்றுவதற்கான சூழல்களை உருவாக்கிட உதவும். இந்த 17 தொழிற் பூங்காக்களில் புதிதாக ஏற்படுத்தப்படும் குழந்தைகள் காப்பகங்களில் ஏறத்தாழ 3 லட்சத்து 23 ஆயிரம் தொழிலாளர்கள் பயன்பெறுவார்கள். இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்காக தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் சென்னையில் உள்ள இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு சார்ந்த பெண்கள் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்ற உள்ளது.

தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா முன்னிலையில் நடைபெற்ற இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் செந்தில்ராஜ், இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பினுடைய (சென்னை) பெண்கள் பிரிவின் தலைவர் திவ்யா அபிஷேக் ஆகியோர் இணை ந்து கையெழுத்திட்டனர்.
அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா இந்த நிகழ்ச்சியில் பேசும்போது, இந்தியா முழுவதும் உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்களில் 43 சதவீதத்தினர் தமிழ்நாடு மாநிலத்தை சேர்ந்தவர்கள்.

இது இந்திய தொழிற்துறை வளர்ச்சிக்கு, தமிழ்நாட்டு பெண் தொழிலாளர்களின் விலைமதிப்பற்ற பங்களிப்பை பறைசாற்றுகிறது ” என்றார். இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்தின் செயல் இயக்குநர் சிநேகா, தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்தின் அதிகாரிகளும், இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு – சென்னை பெண்கள் அமைப்பின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

The post தொழிற்சாலைகளில் பணிபுரியும் மகளிர் நலன் கருதி 17 சிப்காட் தொழிற்பூங்காக்களில் குழந்தை காப்பகங்கள்: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா முன்னிலையில் கையெழுத்து appeared first on Dinakaran.

Tags : 17 SIPCOT ,Minister ,T.R.P.Raja ,Chennai ,Tamil Nadu Industrial Development Corporation ,SIPCOT ,Tamil Nadu… ,
× RELATED தொழிற்சாலைகளில் பணிபுரியும் மகளிர்...