×

கால்வாய் சீரமைக்கப்பட்டதால் கசவ நல்லாத்தூர் ஏரி 85% நிரம்பியது: நீர்வளத்துறைக்கு நன்றி தெரிவித்த பொதுமக்கள்

திருவள்ளூர்: கால்வாயில் இருந்த முள், செடி, கொடிகளை சீர்படுத்தியதால் கசவ நல்லாத்தூர் ஏரி 85 சதவீதம் நிரம்பியது இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நீர்வளத் துறைக்கு நன்றி தெரிவித்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் ஏரியிலிருந்து கொசஸ்தலை ஆறு உருவாகிறது. இது செல்லும் பாதையில் கேசாவரம் என்ற பகுதியில் அணைக்கட்டு ஒன்று கட்டப்பட்டுள்ளது. இந்த அணைக்கட்டிலிருந்து பாதி கொசஸ்தலை ஆறுக்கும், பாதி கூவம் ஆறுக்கும் 16 ஷட்டர் அமைத்து தண்ணீர் பிரித்து அனுப்பப்படுகிறது. இந்நிலையில் தற்போது பெய்த கன மழையால் காவேரிப்பாக்கம் ஏரியிலிருந்து திறந்து விடப்பட்ட நீர் கேசாவரம் அணைக்கட்டை வந்தடைந்தது.

இந்த நீரை 5 ஷட்டர் வழியாக 300 கன அடி வீதம் திருவள்ளூர் அடுத்த புதுமாவிலங்கை அணைக்கட்டு வழியாக செல்லக்கூடிய வாய்க்கால் மூலமாக திருவள்ளூர் அடுத்த கசவநல்லாத்தூர் ஏரி, கடம்பத்தூர் ஏரி, அகரம் ஏரி ஆகிய ஏரிகளுக்கு தண்ணீர் அனுப்பப்பட்டது. முன்னதாக நீர்வளத்துறை செயற்பொறியாளர் அ.அருள்மொழி, உதவி செயற்பொறியாளர் எஸ்.பாபு, உதவி பொறியாளர் காதம்பரி மற்றும் களப்பணியாளர்கள் அதிரடியாக நடவடிக்கை மேற்கொண்டு கால்வாயில் இருந்த முள், செடி, கொடிகளை சீர் செய்து, கசவநல்லாத்தூர் ஏரிக்கு திறந்து விட்டனர்.

அதன் பலனாக கசவ நல்லாத்தூர் ஏரி 2 நாளில் 85 சதவீதம் கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால் விவசாயத்தையே நம்பியுள்ள அப்பகுதி கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்து திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்திற்கும், நீர்வளத்துறை செயற்பொறியாளர் அ.அருள்மொழி, உதவி செயற்பொறியாளர் எஸ்.பாபு, உதவி பொறியாளர் காதம்பரி மற்றும் களப்பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்தனர். மேலும் ஏரியைச் சுற்றிலும் கருவேல மரங்கள் வளர்ந்து காணப்படுவதால் அவற்றை அகற்றி சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post கால்வாய் சீரமைக்கப்பட்டதால் கசவ நல்லாத்தூர் ஏரி 85% நிரம்பியது: நீர்வளத்துறைக்கு நன்றி தெரிவித்த பொதுமக்கள் appeared first on Dinakaran.

Tags : Kasava Nallathur Lake ,Water Resources Department ,Tiruvallur ,Kosasthalai River ,Kaveripakkam Lake ,Ranipet district ,Dinakaran ,
× RELATED தொடர் மழையால் ஏற்பட்ட...