×

திருவண்ணாமலையும் 12 ஜோதிர்லிங்கங்களும்

தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்பது சிவபெருமானுக்கே பொருந்தும். தென்னாடுடைய இறைவனான சிவபெருமான், எந்நாட்டவர்க்கும் தலைவனாகவும் இருக்கின்றார். பாரத நாட்டிலே, வடக்கே காஷ்மீர் முதல் தெற்கே குமரி வரை பரந்து விரிந்த பூமியிலே, ஆயிரக்கணக்கான சிவத்தலங்கள் இருக்கின்றன. இந்தத் தலங்களைப் பல்வேறு விதமான தொகுப்புகளில் பிரிப்பார்கள். நாயன்மார்களால் பாடப்பட்ட தலங்களைப் பாடல் பெற்ற தலங்கள் என்பார்கள். அதைப் போலவே அட்டவீரட்ட தலங்கள், பஞ்சபூத தலங்கள், மூலத்தான தலங்கள், சப்த விடங்கத் தலங்கள், ஜோதிர்லிங்கத் தலங்கள் என்று பல பிரிவுகள் உண்டு. அதில் இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களைப் பற்றிக் காணலாம்.

உதாரணமாக, பஞ்சபூத ஸ்தலங்கள் ஐந்தும் தென்னாட்டிலேயே இருக்கின்றன. குறிப்பாக, தமிழகத்திலேயே இருக்கின்றன. அதைப் போலவே அட்டவீரட்ட தலங்களும் தமிழ் நாட்டிலேயே அமைந்திருக்கிறது. சப்தவிடங்க தலங்களும் தமிழகத்திலேயே அமைந்திருக்கிறது. ஆனால், 12 ஜோதிர் லிங்கத் தலங்கள் தமிழ்நாட்டில் மட்டும் அமைந்திருக்கவில்லை, பாரத தேசம் முழுமைக்கும் பல்வேறு இடங்களில் அமைந்திருக்கிறது. இந்த 12 ஜோதிர்லிங்கத் தலங்களில் ஒரே ஒரு தலம் மட்டும் தமிழகத்தில் உள்ளது. மற்ற தலங்கள் இந்தியாவின் பிற மாநிலங்களில் அமைந்திருக்கின்றன.

எனவே, ஒரு வகையில் இந்தியாவின் எல்லா மாநிலங்களையும் சிவ பக்தியின் மூலம் இணைக்கின்ற தலங்களாக இத்தலங்கள் வழங்குகின்றன என்பது இத்தலங்களுக்கே உரிய சிறப்பு. ஜோதிர்லிங்கத் தலங்கள் என்றால் ஒளிமயமான சிவபெருமானின் லிங்க வடிவங்கள் சிறப்பாக அமைந்த 12 தலங்கள் என்று எடுத்துக் கொள்ளலாம். அண்டாதி அண்டங்கள் எல்லாம் பரந்து விரிந்த பிரபஞ்சத்தின் ஒளிச் சுடராய் விரிந்த சிவபெருமான் இந்த 12 தலங்களில் மிகச்சிறப்பான முறையில் காட்சி தருகின்றார். இவைகளை “ஒளித்தலங்கள்” என்று சொல்லலாம்.

ஒளியும் இறைவனும்

சிவன் என்றால், முழுமையானது, மங்கலகரமானது என்று பொருள். சிவன் என்ற சொல்லிற்கு “எது இல்லாததோ அது” என்று அர்த்தம். சிவன் ஜோதி மயமானவன். மாணிக்க வாசகர் திருவெம்பாவை தொடங்கும் போது சிவபெருமானை, “ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ் சோதியை என்று ஒளி வடிவமாகவே காண்கிறார். இறைவன் ஜோதி. சாதாரண ஜோதியல்ல; பெரும் ஜோதி. அவனுக்கு இணையான ஒளி இல்லை. அகண்ட ஜோதி. அடுத்து அந்த ஜோதியின் அருமை எளிதில் உணர முடியாதது. ஞானத்தால் மட்டுமே உணரமுடியும். அடுத்து அது எங்கிருந்துவந்தது. எங்கு போய் முடிவது என்பது யாராலும் சொல்ல முடியாது.

“அங்கிங்கெனாதபடி
எங்கும் ப்ரகாசமாய்
ஆனந்த பூர்த்தியாகி
அருளொடு நிறைந்ததெது?
தன்னருள் வெளிக்குளே
அகிலாண்ட கோடியெலாம்
தங்கும்படிக் கிச்சை வைத்து
உயிர்க்குயிராய் தழைத்ததெது?’’
– என்கிறார் தாயுமானவர்.

“தீப மங்கள ஜோதி” என்கிறார் அருணகிரிநாதர். அருட்பெருஞ்சோதி என்கிறார் ஞானப்பிரகாச வள்ளலார். தேவாரத்தில் “திருவையாறகலாத செம் பொற்சோதி’’ என்றும், “வெண்பளிங்கினுட் பதித்த சோதியானை’’ என்றும், திருவாசகத்தில், “ஆதியும் அந்தமுமில்லா அரும்பெரும்சோதி’’ என்றும், “சோதியாய்த் தோன்றும் உருவமே’’ – என்றும், “சோதியே சுடரே சூழொளி விளக்கே’’ என்றும், திருவிசைப்பாவில் “ஒளிவளர்விளக்கே’’ – “சுடரொளி விளக்கினுள்ளொளி விளக்குந் தூயநற் சோதியுட் சோதி’’ என்றும், சிவஞான சித்தியாரில் “சோதிக்குட் சோதியாய்த் தோன்றிடுவன்காணே’’ எனவும் பல படியாக சிவனின் ஒளித் தோற்றம் விவரிக்கப்படுகிறது. இந்த ஒளித்தோற்றத்தின் பிம்பம்தான் 12 ஜோதிர்லிங்கங்கள்.

திருவாதிரை நட்சத்திரத்தில் தோன்றிய லிங்கங்கள்

நட்சத்திரங்களில் ஆறாவது நட்சத்திரமாக இருப்பது திருவாதிரை. 27 நட்சத்திரங்களில் `திரு’ என்ற சிறப்புடன் அழைக்கப்படும் இரண்டு நட்சத்திரங்களில் முதல் நட்சத்திரம் இது. இரண்டாவது நட்சத்திரம் திருவோணம். ஒன்று சிவபெருமானின் நட்சத்திரம். சிவனை ஆதிரையான் என்பார்கள். இந்த நட்சத்திரத்தின் ராசி மிதுனம். திருவாதிரை நோன்பு என்பது திருவாதிரை நட்சத்திரத்தோடு கூடிய நிறைமதி நாளில் உபவாசம் இருந்து நோற்கும் ஒரு நோன்பாகும். இந்த திருவாதிரை நட்சத்திர நாளில் சிவன் தன்னை சோதிலிங்க வடிவில் வெளிப்படுத்திய தலங்கள்தான் ஜோதிர்லிங்கத் தலங்கள். ஒளிக்கு முதலும் முடிவும் கிடையாது. தன் முதலையும் முடிவையும் தேவரும் மற்றவரும் அறியா வண்ணம் வெளிப்படுத்திய அதிசயம்தான் ஜோதிர்லிங்கத் தலங்கள்.

திருவண்ணாமலையும் 12 ஜோதிர்லிங்கங்களும்

திருவண்ணாமலை தல புராணமும், 12 ஜோதிர்லிங்கத்தலங்களின் தல புராணமும் ஏறக்குறைய ஒன்றுதான். பஞ்ச பூதத்தலங்களில் அக்னி எனப்படும் ஒளித்தலம் திருஅண்ணாமலை. அந்த ஒளியின் 12 பாகங்கள்தான் ஜோதிர்லிங்கத் தலங்கள். எனவே, திருவண்ணாமலையின் பிரதி பிம்பத் தலங்களாக 12 ஜோதிர்லிங்கத் தலங்கள் அமைந்திருக்கின்றன. சிவ புராணத்தின் படி, ஒருமுறை, பிரம்மா மற்றும் விஷ்ணு இவர்களுள், யார் பெரியவர் என்பது பற்றி வாக்குவாதம் செய்தனர். விவாதத்தைத் தீர்ப்பதற்காக, சிவன் மூன்று உலகங்களையும் துளைத்தார், எல்லையற்ற ஒளித்தூணாக, ஜோதிர்லிங்கமாகத் தோன்றினார். பிரம்மாவும் விஷ்ணுவும் ஒளித்தூணில் ஏறி இறங்கவும், இரு திசைகளிலும் ஒளியின் முடிவைக் கண்டறியவும் முடிவு செய்தனர்.

பிரம்மா ஒரு ஹம்சபட்சியில் ஏறி ஒளியின் முடிவைக் கண்டுபிடித்ததாகப் பொய் சொன்னார், அதற்கு ஆதாரமாக ஒரு தாழம்பூ மலரை உருவாக்கினார், பிரம்மாவின் பொய் சிவனுக்கு கோபத்தை ஏற்படுத்தியது, அவர் உமக்கு ஆலயமோ வழிபாடோ பூலோகத்தில் இருக்காது என்று சபித்தார். அப்படி ஒளி (ஜோதி) அடையாளமாக (லிங்கம்) தோன்றிய தோற்றமே ஜோதிர்லிங்கங்கள்.

எந்தெந்தப் பகுதியில் உள்ளன?

1. குஜராத் மாநிலம் கிரில் சோம்நாத் ஜோதிர்லிங்கம்.
2. ஆந்திர மாநிலம் ஸ்ரீசைலத்தில் உள்ள மல்லிகார்ஜுன ஜோதிர்லிங்கம்.
3. மஹாகாலேஷ்வர் ஜோதிர்லிங்கம், மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைனில் உள்ளது.
4. மத்தியப் பிரதேச மாநிலம் கந்த்வாவில் உள்ள ஓம்காரேஷ்வர் ஜோதிர்லிங்கம்.
5. ஜார்கண்டில் உள்ள தியோகர் நகரில் பைத்யநாத் ஜோதிர்லிங்கம்.
6. மகாராஷ்டிராவில் பீமாசங்கர் ஜோதிர்லிங்கம்.
7. தமிழ்நாட்டில் ராமேஸ்வரத்தில் ராமநாதசுவாமி ஜோதிர்லிங்கம்.
8. குஜராத்தின் துவாரகாவில் உள்ள நாகேஷ்வர் ஜோதிர்லிங்கம்.
9. உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாத் ஜோதிர்லிங்கம்.
10. மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் உள்ள திரிம்பகேஷ்வர் ஜோதிர்லிங்கம்.
11. உத்தரகாண்ட் மாநிலம் ருத்ரபிரயாக்கில் கேதார்நாத் ஜோதிர்லிங்கம்.
12. மகாராஷ்டிர மாநிலம் அவுரங்காபாத்தில் உள்ள கிருஷ்னேஷ்வர் ஜோதிர் லிங்கம்.

The post திருவண்ணாமலையும் 12 ஜோதிர்லிங்கங்களும் appeared first on Dinakaran.

Tags : Thiruvannamalai ,Jothirlingas ,Shiva Peruman ,Lord ,South ,Shivaberuman ,Lord of the South ,India ,Kashmir ,Kumari ,Tiruvannamalai ,
× RELATED சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை...