×

விஷசாராய வழக்கில் கைதான 18 பேர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டதை எதிர்த்த வழக்கு: ஜன. 6ல் இறுதி விசாரணை

சென்னை: கள்ளக்குறிச்சி விஷச் சாராய மரணம் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான இறுதி விசாரணை ஜனவரி 6ம் தேதி நடைபெறும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷச் சாராயம் அருந்தி 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது தொடர்பாக கைது செய்யப்பட்ட 18 பேர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டனர்.
குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டதை ரத்து செய்யக்கோரி 18 பேர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், எம். ஜோதிராமன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், அனைவரின் வழக்கிலும் பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இறுதி விசாரணைக்காக வழக்கை ஜனவரி 6ம் தேதிக்கு ஒத்திவைக்க வேண்டும் என்றார். இதைக்கேட்ட நீதிபதிகள், எதனடிப்படையில் அனைவர் மீதும் குண்டர் சட்டம் போடப்பட்டது என்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அட்வகேட் ஜெனரல், பல ஆண்டுகளாக இவர்கள் கள்ளச்சாராயம் விற்று வந்ததாகவும் விஷச் சாராய மரணத்தால் மாவட்டம் முழுவதும் பதற்ற நிலை உருவானதாகவும் கூறினார். அதற்கு நீதிபதிகள், இத்தனை ஆண்டுகளாக கள்ளச்சாராய விற்பனை நடைபெறுகிறது என்றால் அதனை தடுக்காமல் மது விலக்கு பிரிவு என்ன செய்துகொண்டிருக்கிறது?. என்று தெரிவித்து விசாரணையை ஜனவரி 6ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

The post விஷசாராய வழக்கில் கைதான 18 பேர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டதை எதிர்த்த வழக்கு: ஜன. 6ல் இறுதி விசாரணை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Madras High Court ,Kallakurichi ,Dinakaran ,
× RELATED கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணம்...