×

நாகர்கோவில் 4வது வார்டு பூங்காவில் குப்பை, கழிவுகளால் நிரம்பி கிடந்த நீச்சல் குளம்: அதிகாரிகளுக்கு டோஸ்

நாகர்கோவில்: நாகர்கோவில் மாநகராட்சி 4 வது வார்டில் பூங்கா மற்றும் அதில் உள்ள நீச்சல் குளத்தில் குப்பைகள், கழிவுகள் கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த மேயர் மகேஷ், இவற்றை முறையாக பராமரிக்காத அதிகாரிகளை கண்டித்தார். நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், இன்று தனது சொந்த வார்டான 4 வது வார்டு பகுதியில் திடீரென காலையில் ஆய்வு செய்தார். அப்போது ராஜலெட்சுமி நகர் பகுதியில் உள்ள மாநகராட்சி சார்பில் ரூ.41 லட்சத்து 62 ஆயிரம் செலவில் புதுப்பிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டில் இருந்த பூங்காவை ஆய்வு செய்ய சென்றார். பூங்காவுக்குள் நுழைந்ததும் மேயர் மகேஷ் அதிர்ச்சி அடைந்தார்.

பூங்கா முழுவதும் குப்பைகள் நிரம்பி கிடந்தன. இருக்கைகள் மற்றும் பூங்காவில் இருந்த உபகரணங்கள் உடைந்த நிலையில் கிடந்தன. உதிர்ந்து கிடந்த மர இலைகள் காய்ந்தும், மழையில் மக்கி போயும் கிடந்தது. அந்த குப்பைகளை கூட அகற்ற வில்லை. மேலும் இந்த பூங்காவில் நீச்சல் குளம் உள்ளது. இந்த நீச்சல் குளம் பராமரிப்பு இல்லாமல் கிடந்தது. நீச்சல் குளத்தின் கரைகளில் மது பாட்டில்கள், பிளாஸ்டிக் கப் உள்ளிட்ட பல்வேறு கழிவு பொருட்கள் கிடந்தன. இவற்றை பார்த்த மேயர் மகேஷ், அதிர்ச்சி அடைந்தார்.

மக்கள் பயன்பாட்டுக்காக ரூ.41 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்ட பூங்காவை இப்படி வைத்துள்ளீர்கள். முறையாக அதிகாரிகள் ஆய்வு செய்திருந்தால், இந்த பூங்கா மக்கள் பயன்பாட்டுக்கு இருந்திருக்கும். எனது வார்டில் உள்ள பூங்காவை கூட, ஒழுங்காக அதிகாரிகள், பணியாளர்கள் வந்து பராமரிக்க வில்லை. ஆய்வு செய்ய வில்லை. மற்ற இடங்களில் நீங்கள் எப்படி வேலை பார்க்க போகிறீர்கள். அதிகாரிகள் அவர்களின் பணிகளை ஒழுங்காக செய்தாலே மாநகரம் சுத்தமாக இருக்கும் என அறிவுரை வழங்கிய மேயர் மகேஷ், உடனடியாக பூங்காவை சுத்தம் செய்ய வேண்டும் என்றுஉத்தரவிட்டார்.

அப்போது பொதுமக்கள் தரப்பில், இந்த பூங்காவில் சோலார் விளக்குகள் உள்ளன. இந்த விளக்குகள் முறையாக எரியவில்லை. சமூக விரோத கும்பல்கள் நடமாட்டம் பூங்காவுக்குள் இருக்கிறது என்றனர். இதை கேட்ட மேயர் மகேஷ், சோலார் விளக்குகள் முறையாக எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கண்காணிப்பு கேமராமக்கள் பொருத்த வேண்டும். பூங்காவுக்குள் அத்துமீறி நுழைந்து சமூக விரோத செயல்களில் ஈடுபடும் நபர்களை கண்டறிந்து, காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். பின்னர் கோட்டவிளை பகுதியில் உள்ள பூங்காவையும் மேயர் மகேஷ் பார்வையிட்டார். மேயருடன் ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனர்.

The post நாகர்கோவில் 4வது வார்டு பூங்காவில் குப்பை, கழிவுகளால் நிரம்பி கிடந்த நீச்சல் குளம்: அதிகாரிகளுக்கு டோஸ் appeared first on Dinakaran.

Tags : 4th Ward park ,Nagargo ,Nagarko ,Municipal 4th Ward ,Mayor ,Mahesh ,Municipal ,
× RELATED ரவுண்டானா அமைக்க வசதியாக...