- கோ-ஆப்டெக்ஸ் கோலம்
- அண்ணா சேலை, சென்னை
- துணை முதலமைச்சர்
- உதயநிதி ஸ்டாலின்
- சென்னை
- தமிழ்நாடு அரசு
- கோ-ஆப்டெக்ஸ்
சென்னை: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று சென்னை அண்ணாசாலையில் ரூ.5.60 கோடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ‘கோ-ஆப்டெக்ஸ் கோலம்’ விற்பனை நிலையத்தை திறந்து வைத்தார். தமிழ்நாடு அரசின் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் பட்டு மற்றும் பருத்தி ரக வகைகளின் பாரம்பரிய மற்றும் நாகரிக சமகால வடிவமைப்புகளை கொண்டு சிறந்த கைத்தறி ரகங்களை மக்களுக்கு அறிமுகப்படுத்தி விற்பனை செய்கிறது. கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம், பண்டிகை காலங்களில் புதிய வடிவமைப்பு ரகங்களை வெளியிட்டு வாடிக்கையாளர்களின் மனங்களை கவர்ந்து வருகிறது. பாரம்பரிய பட்டு மற்றும் பருத்தி ரகங்களில் புதுமையான வடிவமைப்புகள் மற்றும் வண்ணங்களுடன் பல மதிப்பு கூட்டப்பட்ட ரகங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.
இந்நிலையில், சென்னை அண்ணாசாலையில் கலைஞர் திருவுருவச்சிலை எதிரில் பிரமாண்டமான ‘கோலம் கோ- ஆப்டெக்ஸ்’ விற்பனை நிலையமானது, ரூ.5.60 கோடி செலவில் 8,000 சதுர அடி பரப்பளவில் 4 தளங்களுடன் லிப்ட் மற்றும் வாகன நிறுத்தும் வசதியுடன் கட்டப்பட்டுள்ளது. முதல், 2ம், 3ம் தளங்கள் தலா 2,100 ச.அடி பரப்பளவிலும், 4ம் தளம் 1,700 ச.அடி பரப்பளவிலும் என மொத்தம் 8,000 சதுர அடி பரப்பளவில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டிடத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று திறந்து வைத்து, பொங்கல் திருநாள் சிறப்பு தள்ளுபடி விற்பனையையும் தொடங்கி வைத்தார்.
2024ம் ஆண்டு பொங்கல் திருநாள் பண்டிகை காலத்தில் ரூ.43.46 கோடி மதிப்பீட்டிலான கைத்தறி, பட்டு ரகங்கள் கோ-ஆப்டெக்ஸ் மூலமாக விற்பனை செய்யப்பட்டன. நடப்பாண்டு (2025) பொங்கல் திருநாள் பண்டிகை காலத்திற்கு ரூ.50 கோடியாக சிறப்பு விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பொங்கல் திருநாள் பண்டிகை சிறப்பு விற்பனையையொட்டி அனைத்து பட்டு மற்றும் பருத்தி ரகங்களுக்கு 30 சதவீத சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, இந்து சமயம் மற்றும் அறநிலைய துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, கோ-ஆப்டெக்ஸ் செயலாட்சியர் தீபக் ஜேக்கப், துணைமேயர் மகேஷ்குமார், நிலைக்குழு தலைவர் (பணிகள்) சிற்றரசு உள்பட அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
The post சென்னை அண்ணாசாலையில் ரூ.5.60 கோடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் கோலம் விற்பனை நிலையம் திறப்பு: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.