×

அடுத்த ஆண்டு முதல் அமல் சபரிமலையில் இறந்தால் பக்தர்களுக்கு நிவாரணநிதி: ஆன்லைன் தரிசனத்தில் ரூ.10 வசூலிக்க முடிவு

திருவனந்தபுரம்: சபரிமலையில் இறந்தால் பக்தர்களுக்கு நிவாரண நிதி வழங்கும் திட்டம் அடுத்த ஆண்டு முதல் அமலுக்கு வருகிறது. இதற்காக ஆன்லைன் தரிசனத்தில் ரூ.10 வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சபரிமலை செல்லும் பக்தர்கள் பெரும்பாலும் பம்பை-சன்னிதானம் பாதையைத் தான் பயன்படுத்துகின்றனர். வருடம்தோறும் இங்கு மாரடைப்பால் மரணமடையும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த வருடம் மண்டல காலத்தில் இதுவரை 19 பேர் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தனர். தற்போது சபரிமலையில் செல்லும் வழியில் சாலை விபத்துகளில் மரணமடையும் பக்தர்களுக்கு ரூ.5 லட்சம் இன்சூரன்ஸ் வழங்கப்படுகிறது. மாரடைப்பு உள்பட பல்வேறு காரணங்களால் மரணமடைபவர்களுக்கு இந்த இன்சூரன்ஸ் கிடைக்காது.

இந்நிலையில் அடுத்த வருடம் முதல் மாரடைப்பு உள்பட பல்வேறு காரணங்களால் ஏற்படும் மரணத்திற்கும் நிவாரண உதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பிரசாந்த் தெரிவித்துள்ளார். இதற்காக அடுத்த வருடம் முதல் ஆன்லைன் தரிசனத்திற்கு முன்பதிவு செய்யும் பக்தர்களிடம் இருந்து ரூ.10 கட்டணமாக வசூலிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இந்தக் கட்டணம் கட்டாயம் கிடையாது. விருப்பம் உள்ளவர்கள் மட்டும் செலுத்தினால் போதும். வருடத்திற்கு 60 லட்சம் பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்கின்றனர். இவர்கள் அனைவரும் ரூ.10 செலுத்தினால் ரூ.6 கோடி வரை கிடைக்கும். இந்தத் தொகையிலிருந்து பக்தர்களுக்கு உரிய நிவாரண உதவி வழங்கலாம் என்று அவர் கூறினார்.

* பக்தர்கள் வருகை அதிகரிப்பு
இந்த மண்டல காலத்தில் நடை திறந்து 33 நாட்களில் தரிசனம் செய்த மொத்த பக்தர்கள் எண்ணிக்கை 24 லட்சத்தை நெருங்கி உள்ளது. இது கடந்த வருடம் வந்த பக்தர்களை விட 5 லட்சத்திற்கும் மேல் அதிகமாகும். நேற்றும் 80 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

* நடை மேம்பாலத்தில் இருந்து குதித்த பக்தர் பலி
சபரிமலையில் நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் சபரிமலை நடை மேம்பாலத்தில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வரிசையில் நின்று கொண்டு இருந்தனர். அப்போது திடீரென கர்நாடக மாநிலம் ராமநகர் பகுதியைச் சேர்ந்த குமாரசாமி (40) என்ற பக்தர் நடை மேம்பாலத்தின் கூரை மீது ஏறி அங்கிருந்து கீழே குதித்து பலியானார்.

The post அடுத்த ஆண்டு முதல் அமல் சபரிமலையில் இறந்தால் பக்தர்களுக்கு நிவாரணநிதி: ஆன்லைன் தரிசனத்தில் ரூ.10 வசூலிக்க முடிவு appeared first on Dinakaran.

Tags : Sabarimala ,Thiruvananthapuram ,Pampa-Sannidhanam ,
× RELATED சபரிமலை அப்பம் – சோதனை செய்த அதிகாரிகள்