×

எண்ணூர் துறைமுகம்- பூஞ்சேரி 6 வழிச்சாலை பணிகள் மந்தம்: வாகன ஓட்டிகள் கடும் அவதி

திருவள்ளூர்: காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீ பெரும்புதூர், இருங்காட்டுக்கோட்டை, ஒரகடம், சிங்கப்பெருமாள்கோவில் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து சென்னை-எண்ணூர் துறைமுகத்திற்கு வரும் கனரக வாகனங்களால் சென்னையில் அதிகளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு செல்பவர்கள், ஆம்புலன்ஸ் செல்லும் நோயாளிகள் உரிய நேரத்திற்கு செல்ல முடியாமல் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். அதுமட்டுமின்றி சென்னை புறநகர் பகுதியில் இருந்து நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாகன எண்ணிக்கையால் சென்னைக்குள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது.

அதை குறைக்கும் வகையில் தமிழக அரசு சார்பில் 2022ம் ஆண்டு சென்னை எல்லை சாலைத்திட்டத்தின் கீழ் எண்ணூர் துறைமுகம் முதல் மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி கிழக்கு கடற்கரை சாலை வரையில் ரூ.12,301 கோடி திட்ட மதிப்பீட்டில் 133 கிலோ மீட்டர் தொலைவிற்கு 6 வழிச்சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இப்பணியானது பிரிவு ஒன்றின்படி எண்ணூர் முதல் தச்சூர் வரை 25 கிலோ மீட்டர் தொலைவிலும், பிரிவு 2ன்படி தச்சூர் முதல் புன்னப்பாக்கம் வரை 13 கிலோ மீட்டர் வரையிலும், பிரிவு 3ன்படி திருவள்ளூர் நெடுஞ்சாலை முதல் வெங்கத்தூர் வரையிலும், பிரிவு 4ன்படி ஸ்ரீபெரும்புதூர்- சிங்க பெருமாள்கோவில் வரை 24 கிலோமீட்டர் வரையிலும், பிரிவு 5ன்படி சிங்கப்பெருமாள் கோவில்- மாமல்லபுரம் பூஞ்சேரி வரை 30 கிலோ மீட்டர் என மொத்தம் 133 கிலோ மீட்டர் வரை தொடங்கி நடைபெற்று வருகிறது.

இச்சாலை அமையும் வழித்தடங்களில் 349 பாலங்கள், 5 பெரிய பாலங்கள், 20 சிறிய பாலங்கள், 324 தரைப்பாலங்கள், 49 சுரங்க வழிகள், 4 மேம்பாலங்கள், 3 ரயில்வே மேம்பாலங்கள் கட்டப்பட உள்ளன. 81 கிராமங்கள் வழியாக நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு பணிகள் நடந்து வருகிறது.

இந்நிலையில் 2வது பிரிவாக நடைபெறும் தச்சூர் முதல் புன்னப்பாக்கம் வரையிலான பணிகள் மந்தமாக நடைபெற்று வருகிறது. இந்த கட்டுமான பணி காரணமாக சாலைகள் குண்டும், குழியுமாகவும், வளைவுகளாகவும் இருப்பதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது. வருகின்ற 2025ம் ஆண்டுக்குள் பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டுமென அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் பணிகள் மிகவும் மந்தமாக நடைபெற்று வருவதால் பணிகளை துரிதப்படுத்தி விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post எண்ணூர் துறைமுகம்- பூஞ்சேரி 6 வழிச்சாலை பணிகள் மந்தம்: வாகன ஓட்டிகள் கடும் அவதி appeared first on Dinakaran.

Tags : Ennore Port-Poonchery 6-lane ,Thiruvallur ,Chennai-Ennore Port ,Kanchipuram district ,Sri Perumputhur ,Irungattukottai ,Oragadam ,Singaperumalkovil ,Chennai ,Dinakaran ,
× RELATED திருவள்ளூர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீ விபத்து..!!