சென்னை: குற்ற வழக்கு தொடர்வு துறையில் உள்ள அரசு உதவி வழக்கு நடத்துநர், 2ம் நிலை பதவியின் நேரடி நியமனத்திற்கான அறிவிக்கையை கடந்த செப்டம்பர் மாதம் 13ம் தேதி அன்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது. அதன்படி, அதற்கான கணினிவழித் தேர்வு கடந்த 14ம் தேதி அன்று 15 மாவட்ட மையங்களில் 4186 தேர்வர்களுக்கு நடத்தப்பட்டது.
சில தேர்வு மையங்களில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகளினால் சில தேர்வர்களால் இந்த தேர்வினை முழுமையாக முடிக்க இயலவில்லை. இதனைத் தொடர்ந்து தேர்வர்களிடமிருந்து மறுதேர்வு நடத்திட வேண்டி தேர்வாணையத்தில் கோரிக்கை பெறப்பட்டது. தேர்வர்களின் கோரிக்கையினை தேர்வாணையம் முறையாக பரிசீலனை செய்து அதனை ஏற்று, மேற்கண்ட பதவிக்காக கடந்த 14ம் தேதி பிற்பகலில் நடைபெற்ற கணினிவழித் தேர்வினை தேர்வாணையம் ரத்து செய்கிறது.
மேலும், ஏற்கனவே இத்தேர்விற்காக தேர்வாணையத்தால் அனுமதிக்கப்பட்ட தேர்வர்களுக்கு, மறுதேர்வு 22.2.2025 அன்று ஒளிக்குறி உணரி (ஓஎம்ஆர்) முறையில் தேர்வாணையத்தால் நடத்தப்படும். மறுதேர்வுக்கான நுழைவுச்சீட்டு, ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட தேர்வர்களுக்கு மட்டும். பின்னர் தனியே தேர்வாணைய இணையத்தளத்தில் வெளியிடப்படும்.
The post குற்ற வழக்கு தொடர்வு துறையில் அரசு உதவி வழக்கு நடத்துநர் பதவிக்கான மறுதேர்வு: தேதியை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி appeared first on Dinakaran.