- அசாதாரண பொதுகூட்டம்
- பொது செயலாளர்
- எடப்பாடி
- சென்னை
- ஆதிமுகா பொது கூட்டம்
- எடப்பாடி பழனிசாமி
- ஜெயலலிதா
- ஆடமுகா வாய்
- தின மலர்
சென்னை: கள ஆய்வு குழுவினருடன் மாவட்ட நிர்வாகிகள் மோதிக்கொண்ட நிலையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக பொதுக்குழு இன்று நடைபெறுகிறது. இதில், பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட இருக்கின்றன. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக வை எடப்பாடி கைப்பற்றினாலும், மக்கள் செல்வாக்கு இல்லாததால் கடந்த 5 வருடமாக நடந்த தேர்தல்களில் அதிமுக படுதோல்வி அடைந்து வருகிறது. இதனால் கட்சியை ஒருங்கிணைக்க வேண்டும் என நிர்வாகிகள் கோரிக்கை வைக்கின்றனர். ஆனால், எடப்பாடி பிடிவாதமாக மறுத்து வருகிறார்.
2026 சட்டமன்ற தேர்தலை தனது தலைமையிலான அதிமுகவே சந்திக்கும் என கூறியுள்ளார். இதனால் பாஜ, பாமக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளும் அதிமுகவை விட்டு வெளியேறி விட்டது. தேமுதிக மட்டுமே அதிமுகவுடன் கூட்டணியில் உள்ளது. விஜயகாந்த் மறைவுக்கு பிறகு தேமுதிக வாக்கு வங்கியும் பெரியளவில் சரிந்துவிட்டது. இதனால், அதிமுக கட்சியினர் எடப்பாடி மீது கடும் அதிருப்தியில் உள்ளனர். கடந்த மாதம் கூட அதிமுக, கட்சி வளர்ச்சி பணி குறித்து ஆய்வுக்கு சென்ற கள ஆய்வு குழுவினருடன் பல்வேறு மாவட்ட நிர்வாகிகள் காரசாரமாக மோதிக் கொண்டனர்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் சென்னை வானகரம் ஸ்ரீ வாரு வெங்கடாஜலபதி பேலஸ் மண்டபத்தில் இன்று காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது. கூட்டத்துக்கு கட்சியின் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமை தாங்குகிறார். பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிறப்புரை ஆற்றுகிறார். கூட்டம் தொடங்கியதும் முதலில், அதிமுக கட்சியின் தலைவர்கள், நிர்வாகிகள் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்படும். 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக வலுவான கூட்டணி அமைப்பதற்கான முழு அதிகாரம் எடப்பாடி பழனிசாமிக்கு வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
கடந்த 2022ம் ஆண்டு ஜூன் மாதம் 22ந் தேதி அதிமுக பொதுக்குழு கூடியபோது, அதிமுகவில் இரட்டை தலைவர்கள் இருந்தனர். அந்த கூட்டத்தில்தான் ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டார். ஓ.பன்னீர்செல்வம் மீது தண்ணீர் பாட்டில் வீசப்பட்டது. பின்னர், பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக எடப்பாடி அறிவித்தார். இதை எதிர்த்து, நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் வழக்கு பதிவு செய்தார். ஆனால், அவருக்கு வெற்றி கிடைக்கவில்லை. அதிமுக பொதுக்குழு தீர்மானம் செல்லும் என நீதிமன்றம் அறிவித்ததால், கட்சியின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டார்.
கட்சியின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்ட பிறகு, அவரது தலைமையில் அதிமுக பொதுக்குழு இன்று நடைபெறுகிறது. அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க கட்சியினர் திட்டமிட்டுள்ளனர். பொதுக்குழு கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, வளர்மதி, ஆர்.பி.உதயகுமார், வைகைச்செல்வன், டி.ஜெயக்குமார் ஆகியோர் பேசுவார்கள் என தெரிகிறது. இறுதியில் எடப்பாடி பழனிசாமி உரையாற்றுவார். பொதுக்குழு கூட்டத்தில், கட்சியின் வளர்ச்சிக்கான அறிவிப்புகள் உள்பட பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளது.
கூட்டத்தில் பங்கேற்கும் பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்களுக்கு ஏற்கனவே, அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டுள்ளது. அழைப்பிதழ் வைத்திருப்பவர்கள் மட்டும் பொதுக்குழு கூட்டத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். இன்று நடைபெறும் கூட்டத்தில் பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் சுமார் 2,500 பேரும், சிறப்பு அழைப்பாளர்கள் 1,000 பேரும் கலந்துகொள்ள இருக்கின்றனர். பொதுக்குழு நடைபெறுவதையொட்டி சென்னை நகரில் இருந்து வானகரம் வரை பேனர்கள், கொடி, தோரணம் வைக்கப்பட்டுள்ளது.
The post பொதுச்செயலாளர் எடப்பாடி தலைமையில் அதிமுக பொதுக்குழு இன்று நடைபெறுகிறது: பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகிறது appeared first on Dinakaran.