×

முதற்கட்டமாக 7 கோயில்களில் மின்னணு ஆலோசனைப் பெட்டிகள்: அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்

சென்னை: முதற்கட்டமாக 7 கோயில்களில் பக்தர்கள் தங்களது தரிசன அனுபவம் குறித்த மதிப்பீட்டினையும், ஆலோசனைகளையும் அளிக்கும் வகையில் மின்னணு ஆலோசனைப் பெட்டிகளை வடபழனியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தொடங்கி வைத்தார். இந்து சமய அறநிலையத்துறை தனது நிர்வாகக் கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொண்டு குடமுழுக்குகள் நடத்துதல், பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தி வழங்குதல், திருக்கோயில் சொத்துகளை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டெடுத்து பாதுகாத்தல் போன்ற பல்வேறு பணிகளை செம்மையாக மேற்கொண்டு வருவதோடு சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளையும் நிறைவேற்றி வருகிறது.

இந்து சமய அறநிலையத்துறை மானியக்கோரிக்கை அறிவிப்பில், “48 முதுநிலைத் திருக்கோயில்களில் பக்தர்கள் தங்களது தரிசன அனுபவம் குறித்த மதிப்பீட்டினை அளிக்கும் வகையில் மின்னணு ஆலோசனைப் பெட்டிகள் வைக்கப்படும்” என்றும், “சென்னை மாவட்டம், வடபழநி, அருள்மிகு வடபழநி ஆண்டவர் திருக்கோயில் மூலவர் சன்னதி மரக்கதவில் வெள்ளித் தகடு போர்த்தும் திருப்பணி ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் செய்யப்படும்” என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்புகளை நிறைவேற்றிடும் வகையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று சென்னை, வடபழனி, அருள்மிகு வடபழனி ஆண்டவர் திருக்கோயிலில் உபயதாரர் நிதியில் ரூ.33.85 லட்சம் செலவில் உருவாக்கப்பட்ட வெள்ளி கதவுகளை திருக்கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைத்து, ரூ.10 லட்சம் செலவில் பக்தர்களின் வசதிக்காக மூலஸ்தானத்தில் அமைக்கப்பட்டுள்ள குளிரூட்டி வசதியினை தொடங்கி வைத்தார்.

மேலும், திருக்கோயில்களுக்கு வருகை தரும் பக்தர்கள் தங்களது தரிசன அனுபவம் குறித்த மதிப்பீட்டினையும், ஆலோசனைகளையும் திருக்கோயில் நிர்வாகம் மற்றும் துறைக்கு அளிக்கும் வகையில் முதற்கட்டமாக, வடபழனி, மயிலாப்பூர், திருவொற்றியூர், பழனி, திருத்தணி, ஸ்ரீரங்கம் மற்றும் மருதமலை ஆகிய 7 திருக்கோயில்களில் மின்னணு ஆலோசனைப் பெட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. வடபழனி ஆண்டவர் திருக்கோயிலில் அமைக்கப்பட்டுள்ள மின்னணு ஆலோசனைப் பெட்டி வசதியினை அமைச்சர் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் தியாகராய நகர் சட்டமன்ற உறுப்பினர் ஜெ. கருணாநிதி, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை அரசு முதன்மைச் செயலாளர் பி. சந்தரமோகன், இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் இரா.சுகுமார், இணை ஆணையர்கள் இரா. வான்மதி, ஜ.முல்லை, திருக்கோயில் தக்கார் ல. ஆதிமூலம், துணை ஆணையர்கள் இரா. ஹரிஹரன், எம்.ஜெயா, உபயதாரர்கள் சுதா ஆதிமூலம், பி.கணேஷ் பிரசாத், ரோஹித் ரமேஷ், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post முதற்கட்டமாக 7 கோயில்களில் மின்னணு ஆலோசனைப் பெட்டிகள்: அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Minister ,Sekarbabu ,Chennai ,Vadapalani ,Hindu Religious ,and Endowments ,P.K. Sekarbabu ,Hindu Religious and Endowments Department ,
× RELATED சுயவிளம்பரத்திற்காக நாள்தோறும்...