×

எப்போது வேண்டும் என்றாலும் பிஎப் பணத்தை ஏடிஎம்மில் எடுக்கும் வசதி அறிமுகம்: அடுத்த ஆண்டு முதல் அமல்

புதுடெல்லி: பிஎப் பணத்தை எப்போது வேண்டும் என்றாலும் ஏடிஎம் மூலம் எடுக்கும் வசதி அடுத்த ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்படுகிறது. பிஎப் பணத்தை தற்போது எடுக்க வேண்டும் என்றால் முதலில் இணையதளத்தில் சென்று உரிய காரணங்களை தெரிவித்து விண்ணப்பிக்க வேண்டும். மருத்துவம், படிப்பு, திருமணம், வீடு கட்டுதல் உள்பட பல்வேறு காரணங்களை தெரிவித்தால் அதற்கு உரிய அளவில் பணத்தை 7 முதல் 10 நாட்களுக்குள் பிஎப் நிறுவனம், அதில் இணைத்துள்ள உரிய வங்கி கணக்கில் டெபாசிட் செய்யும். அதன்பின் விண்ணப்பதாரர்கள் தங்கள் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுத்துக்கொள்ளலாம்.

இது இப்போது உள்ள நடைமுறை. ஆனால் புதிதாக பிஎப் கட்டமைப்பை மாற்றி வருகிறது ஒன்றிய அரசு. அதன் மூலம் பிஎப் பணத்தை வங்கி கணக்கு போன்று ஏடிஎம் மூலம் எப்போது வேண்டும் என்றாலும் எடுக்கும் நடைமுறை அறிமுகப்படுத்தப்படுகிறது. இதற்காக தனிக்கார்டு வழங்கப்படும். இந்த கார்டு மூலம் எந்த ஏடிஎம்மிலும் இருந்தும் பிஎப் கணக்கில் உள்ள பணத்தை எடுக்கலாம். ஆனால் பிஎப் கணக்கில் உள்ள பணத்தில் 50 சதவீதம் வரை மட்டுமே எடுக்க அனுமதிக்கப்படும் என்று தெரிகிறது.

இதற்கான முடிவு அடுத்த ஆண்டு மே மாதம் வெளியிடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் பி எப் 3.0 உள்கட்டமைப்பை பலப்படுத்தும் திட்டம் இந்த டிசம்பரில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பிறகு நாடு முழுவதும் உள்ள பிஎப் உறுப்பினர்கள் பிஎப் பணத்தை எடுக்க வசதியாக ஏடிஎம் கார்டுக்கு சமமான அட்டை வழங்கப்படும். மக்கள் தங்கள் சொந்த பணத்தை எடுப்பதற்கு ஏன் அனுமதி பெற வேண்டும் என்ற யோசனை அடிப்படையில் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

* ஜனவரி முதல் இணையதளம் வேகமாகும்
ஒன்றிய தொழிலாளர் செயலாளர் சுமிதா தவ்ரா கூறுகையில்,’ பிஎப் இணைய தளம் ஜனவரி முதல் விரைவாக செயல்படும். அனைத்து செயல்முறைகளும் எளிதாக்கப்படும். வங்கி அமைப்பு போல் எளிதாக செயல்பட திட்டமிட்டுள்ளோம். எனவே பிஎப் மூலம் கொடுக்கும் அட்டையை வைத்து ஏடிஎம்கள் மூலம் தங்கள் பணத்தை எடுக்கலாம்’ என்றார்.

* நாடு முழுவதும் 7 கோடிக்கும் அதிகமானோர் பிஎப் கணக்கு வைத்துள்ளனர்.

* அடுத்த ஆண்டு அவர்கள் அனைவருக்கும் ஏடிஎம் கார்டு போல் ஒரு அட்டை வழங்கப்பட உள்ளது.

* இந்த அட்டை மூலம் எப்போது வேண்டும் என்றாலும் பிஎப் பணத்தை எந்த வங்கி ஏடிஎம்மிலும் இருந்தும் எடுக்கலாம்.

The post எப்போது வேண்டும் என்றாலும் பிஎப் பணத்தை ஏடிஎம்மில் எடுக்கும் வசதி அறிமுகம்: அடுத்த ஆண்டு முதல் அமல் appeared first on Dinakaran.

Tags : New Delhi ,Dinakaran ,
× RELATED வாக்குச்சாவடி மையங்களில் பதிவான...