சிவகாசி: வடகிழக்கு பருவமழை தீவிரமாகியுள்ள நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் சிவகாசியின் முக்கிய தொழிலாக இருந்து வரும் பட்டாசு, காலண்டர் தயாரிப்பு பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. நேற்று அனைத்து பட்டாசு ஆலைகளுக்கும் விடுமுறை விடப்பட்டது. இதனால் வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து கிடைத்த ஆர்டர்களுக்கு, குறிப்பிட்ட நாட்களில் பட்டாசுகள் அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், வரும் கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக தயாரிக்கப்படும் பட்டாசுகள் உற்பத்தி பணிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பதால் தொழிலாளர்கள் கடும் வேதனை அடைந்துள்ளனர். பட்டாசு ஆலை உரிமையாளர் பொன்குமார் கூறும்போது, ‘‘தீபாவளி முடிந்து அடுத்த சில தினங்களில் பட்டாசு உற்பத்தி துவங்கப்பட்டது. அப்போது பருவமழை துவங்கியதால் உற்பத்தி பணிகள் பாதிக்கப்பட்டது. தொடர் மழை பெய்ததால் உற்பத்தி தொடர்ச்சியாக நடைபெறவில்லை. இதனால் பட்டாசு உற்பத்தி முழுமையாக பாதிப்பில் உள்ளது.
சற்று ஈரப்பதம் இருந்தாலும் உற்பத்தி செய்ய வழியில்லை. மழை தொடரும் பட்சத்தில் உற்பத்தி முழுமையாக பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. மேலும், தயாரித்த பட்டாசுகளை உலர வைத்து பேக்கிங் செய்து, விற்பனைக்கு அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மழை காரணமாக அனைத்து பட்டாசு ஆலைகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தொடர் மழையால் ஆயிரக்கணக்கான பட்டாசு ஆலை தொழிலாளர்கள் வேலை இழந்து சிரமப்படுகின்றனர்’’ என்றார்.
காலண்டர் உற்பத்தியாளர் பாண்டி கூறும்போது, ‘‘சிவகாசியில் 200க்கும் மேற்பட்ட அச்சகங்களில் 2025ம் ஆண்டிற்கான காலண்டர் தயாரிப்பு பணி தீவிரமாக நடந்து வந்தது. கடந்த 2 நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக காலண்டர் தயாரிப்பு பணி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், வெளிமாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து கிடைத்த ஆர்டர்களுக்கு, குறிப்பிட்ட நாட்களில் காலண்டர்களை அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது’’ என்றார்.
The post குட்டி ஜப்பானில் தொடர் மழை பட்டாசு, காலண்டர் உற்பத்தி பாதிப்பு: ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழப்பு appeared first on Dinakaran.