சென்னை: திராவிட இனத்தின் சுயமரியாதையை மீட்ட பெரியாரின் வழியில், மாநிலங்களின் சுயமரியாதையை மீட்க ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டிய தருணம் இது என்று முதல்வர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்திய அளவில் கவனத்தை ஈர்க்கக்கூடியதாக அமைந்த வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டில், கேரளாவின் வைக்கம் நகரில் பெரியாரின் நினைவிடம் ரூ.8 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் தமிழ்நாடு அரசால் புதுப்பிக்கப்பட்டது.
இந்தப் பணிகளை நிறைவேற்றுவதற்கு, சமூகநீதி – சமத்துவக் கொள்கை உணர்வு கொண்ட மூத்த சகோதரராக துணைநின்ற கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் முழு ஒத்துழைப்பினை வழங்கினார். ஒரு போராட்டக் களத்தின் வெற்றிக்கான நூற்றாண்டு விழாக் கொண்டாட்டத்திற்கு பொதுவுடைமை இயக்கத்தைச் சேர்ந்த கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையேற்றது மிகப் பொருத்தமாக அமைந்தது. வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்ற – அதனைச் சிறப்பாக நடத்திட உறுதுணையாக இருந்த அத்தனை பேருக்கும் என் நெஞ்சம் நிறைந்த நன்றியினை உரித்தாக்குகிறேன்.
மக்களைப் பிளவுடுபத்தி, மாநிலங்களைச்சிறுமைப்படுத்தி ஆளத் துடிப்பவர்களுக்குப் பெரியார் என்றாலும், சமத்துவம் என்றாலும், சமூகநீதி என்றாலும் இவையனைத்தையும் ஒன்றாக்கிய திராவிட மாடல் என்றாலும் எரிச்சல் ஏற்படுகிறது, வன்மம் வெளிப்படுகிறது. வைக்கத்தில் நூற்றாண்டு விழா நடத்தப்பட்ட அதே நாளில், ஒரே நாடு, ஒரே தேர்தல் எனும் ஜனநாயக விரோதத் திட்டத்திற்கு ஒன்றிய பா.ஜ.க. அமைச்சரவை ஒப்புதல் அளித்துக் கொடுங்கோன்மைக்கு வழி வகுக்க நினைக்கிறது.
நடைமுறைச் சாத்தியமில்லாத – மக்களாட்சி முறைக்கு விரோதமான – கூட்டாட்சித் தத்துவத்தைக் குற்றுயிராக்கும் ஒரே நாடு – ஒரே தேர்தல் முறைக்கு எதிராகத் தமிழ்நாடு சட்டமன்றத்தில் கடந்த பிப்ரவரி 14ம் தேதி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வைக்கம் விழாவில் பேசிய கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன், மாநிலங்களின் சுயமரியாதைக்காக நாம் எழுந்து நிற்க வேண்டும் என்பதை வலியுறுத்தியிருக்கிறார்.
சுயமரியாதை இயக்கம் கண்டு அதன் வழியாகத் திராவிட இனத்தின் சுயமரியாதையை மீட்ட பெரியாரின் வழியில், மாநிலங்களின் சுயமரியாதையை மீட்க ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டிய தருணம் இது. நூறாண்டுகள் கடந்தாலும் நமக்கான போராட்டங்கள் தொடர்கின்றன. பெரியார் -அண்ணா – கலைஞர் வழியில் போராடுவோம்! அவர்களைப் போலவே வெற்றி காண்போம். என்று முதல்வர் கடிதத்தில் கூறியுள்ளார்.
The post மாநிலங்களின் சுயமரியாதையை மீட்க ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டிய தருணம்: தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் appeared first on Dinakaran.