*மழையால் விரட்டும் பணியில் தொய்வு
தேன்கனிக்கோட்டை : தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் முகாமிட்டுள்ள 60 யானைகளை விரட்டும் பணியில், மழை காரணமாக தொய்வு ஏற்பட்டுள்ளது.கர்நாடக மாநிலம், பன்னார்கட்டா வனப்பகுதியிலிருந்து வந்துள்ள 100க்கும் மேற்பட்ட யானைகள், கிருஷ்ணகிரி மாவட்டம் தளி, தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் முகாமிட்டுள்ளன.
ஜவளகிரி, தேன்கனிக்கோட்டை, ஊடேதுர்க்கம், சானமாவு வனப்பகுதி என 4 பிரிவுகளாக பிரிந்து ராகி, அவரை, துவரை, தக்காளி, பீன்ஸ், முட்டைகோஸ் பயிர்களை நாசம் செய்து வருகின்றன. தேன்கனிக்கோட்டை அருகே நொகனூர், ஆலஹள்ளி, தாவரக்கரை வனப்பகுதியில் 20 யானைகள் முகாமிட்டு, பயிர்களை நாசம் செய்து வருகின்றன.
இந்நிலையில், ஓசூர் அருகே சானமாவு வனப்பகுதியில் முகாமிட்டிருந்த 20 யானைகளை, நேற்று முன்தினம் வனத்துறையினர் தேன்கனிக்கோட்டை வனப்பகுதியை நோக்கி விரட்டியடித்தனர். அந்த யானைகள் அருகில் உள்ள பேவநத்தம் வனப்பகுதிக்கு இடம் பெயர்ந்து, அங்கிருந்த 20 யானைகளுடன் சேர்ந்து கொண்டன. இதனால், பேவநத்தம் வட்டவடிவு பாறை அருகே, தற்போது குட்டிகளுடன் 40 யானைகள் முகாமிட்டுள்ளன.
இதையடுத்து பேவநத்தம், பாளேகுழி, கோட்டட்டி, புதூர், பச்சப்பனட்டி, பூனப்பள்ளி, கொத்தப்பள்ளி, காடுலக்கசந்திரம், கிரிசெட்டிப்பள்ளி ஆகிய கிராமங்களில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், நொகனூர் வனப்பகுதி வழியாக ஜவளகிரி வனப்பகுதிக்கு யானைகளை விரட்ட திட்டமிட்டிருந்த நிலையில், நேற்று காலை முதல் விடாது மழை பெய்து வருவதால் யானைகள் விரட்டும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. தற்போது, தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் 60 யானைகள் முகாமிட்டுள்ளதால், அப்பகுதி விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.
4 நாட்களாக ஒற்றை யானை முகாம்
சூளகிரியில் கடந்த 9ம் தேதி அதிகாலை சானமாவு வனப்பகுதியில் இருந்து வந்த ஒற்றை யானை, ஏ.செட்டிப்பள்ளி வனப்பகுதியில் தஞ்சமடைந்தது. இந்நிலையில், இந்த யானை இடம் பெயர்ந்து புலியரசி, கடத்தூர் வழியாக சின்னக்குத்தி வனப்பகுதியில் தஞ்சமடைந்துள்ளது. வனத்தை விட்டு வெளியில் வந்தால், யானையை கர்நாடகா வனப்பகுதிக்கு விரட்டியடிக்க வனத்துறையினர் தயார் நிலையில் உள்ளனர்.
தற்போது 4 நாட்களாக சின்னகுத்தி வனத்தில் உள்ள ஒற்றை யானை, இரவில் வனத்தை ஒட்டியுள்ள விளை நிலங்களில் ராகி பயிர்களை சாப்பிட்டு விட்டு, மீண்டும் வனத்திலே தஞ்சமடைகிறது. இதனால் சின்னகுத்தி சுற்றுவட்டார பகுதியான பெரியகுத்தி, கும்பளம், ராமன்தொட்டி பகுதி பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
The post தேன்கனிக்கோட்டை அருகே முகாமிட்டுள்ள 60 யானைகள் appeared first on Dinakaran.