×

சுங்கத்துறை துணை ஆணையருக்கு மிரட்டல் இலங்கை பயணிகள் 4 பேர் கைது?

சென்னை: இலங்கையில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு கடந்த 15ம்தேதி அதிகாலை, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் வந்தது. அதில் இலங்கையைச் சேர்ந்த சலீம் என்ற பயணி உள்பட 4 பேர் ஒரு குழுவாக வந்தனர். அவர்களை சுங்க அதிகாரிகள் சோதனை நடத்தியபோது மோதல் ஏற்பட்டது. அவர்கள் சுங்கத்துறை துணை ஆணையர் சரவணனை மிரட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து சுங்க அதிகாரிகள், சலீம் உள்பட 4 இலங்கை பயணிகளையும் சென்னை விமான நிலைய காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அதோடு சுங்கத்துறை துணை ஆணையர் சரவணன், சென்னை விமான நிலைய காவல் நிலையத்தில் எழுத்து மூலமாக 4 இலங்கை பயணிகள் மீதும் புகார் அளித்தார்.

அதில் சுங்கத்துறை சோதனைக்கு ஒத்துழைப்பு அளிக்காததோடு, சுங்க அதிகாரிகளை மிரட்டவும் செய்தனர் என்று குறிப்பிடப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து சென்னை விமான நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டதோடு, சுங்கத்துறை துணை ஆணையர் புகாரின் பேரில், 4 பேர் மீதும் சிஎஸ்ஆர் போட்டு, விசாரணைக்கு அழைக்கும் போது, காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையில் விடுவித்தனர். இதற்கிடையே சென்னை விமான நிலைய போலீசார், நேற்று முன்தினம் (புதன்கிழமை) ஏற்கனவே சுங்கத்துறை துணை ஆணையர் கொடுத்த புகாரின் பேரில், இலங்கை பயணி சலீம் உள்பட 4 பேர் மீதும் எப்ஐஆர் போட்டு வழக்கு பதிவு செய்துள்ளனர். அவர்கள் மீது 121 (1), 351(1) உள்பட 7 பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து சென்னை விமான நிலைய போலீசார், இவர்கள் 4 பேரையும் கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

The post சுங்கத்துறை துணை ஆணையருக்கு மிரட்டல் இலங்கை பயணிகள் 4 பேர் கைது? appeared first on Dinakaran.

Tags : Deputy Commissioner of Customs ,Chennai ,SriLankan Airlines ,Chennai airport ,Sri Lanka ,Salim ,Deputy Commissioner of ,Customs ,
× RELATED சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி...