×

முன்னாள் பாதுகாப்பு படையினருக்கான நலத்திட்டங்களை செயல்படுத்த சன் டிவி ரூ.3.50 கோடி கொடிநாள் நிதி

சென்னை: முன்னாள் பாதுகாப்பு படையினருக்கான நலத்திட்டங்களை செயல்படுத்துவதற்காக கொடி நாள் நிதியாக மூன்று கோடியே 50 லட்சம் ரூபாயை சன் டிவி குழுமம் வழங்கியுள்ளது. ராணுவ வீரர்களின் தியாகத்தையும், பணிகளையும் போற்றும் வகையில், டிசம்பர் 7ம் தேதி நாடு முழுவதும் ஆயுதப்படை கொடிநாளாக கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி, ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் நலனுக்காக கொடி நாள் நிதி வசூலிக்கப்படுகிறது. நாடுமுழுவதும் உள்ள லட்சக்கணக்கான முன்னாள் படை வீரர்கள், படை வீரர்களின் குடும்பத்தினர் இந்த நிதியின் மூலம் பயன்பெற்று வருகின்றனர்.

அந்த வகையில், சன் டிவி குழுமம் கொடி நாள் நிதியாக மூன்று கோடியே 50 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளது. இதற்கான காசோலையை கேந்திரிய சைனிக் வாரியத்தின் இயக்குநர் கேப்டன் சதீஷ்குமாரிடம் சன் டிவி சார்பில், மல்லிகா மாறன், காவேரி கலாநிதி மாறன் ஆகியோர் வழங்கினர். இந்திய பாதுகாப்பு படையின் ஓய்வுபெற்ற ராணுவ வீரர்கள் நலனுக்காக இந்த நிதி பயன்படுத்தப்பட இருப்பதாக கேந்திரிய சைனிக் வாரியத்தின் இயக்குநர் கேப்டன் சதீஷ்குமார் தெரிவித்தார்.

“சன் டிவி குழுமத்திடம் ஆயுதப்படை கொடி நாள் நிதியாக ரூ.3.50 கோடி பெறுவதில் மிக்க மகிழ்ச்சி. பெறப்படும் ஒவ்வொரு ரூபாயும் முன்னாள் படை வீரர்கள், உடல் உறுப்புகளை இழந்த வீரர்கள், சிகிச்சையில் உள்ள வீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்திருப்பவர்களின் குடும்ப நலனுக்காகவும், மறுவாழ்வுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது.

சன் டிவி குழுமம் தொடர்ச்சியாக கொடி நாள் நிதி வழங்கி வருவதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஆயுதப்படை கொடி நாள் நிதிக்கு அதிக பங்களிப்பு வழங்கும் நிறுவனமாக சன் டிவி குழுமம் உள்ளது” என கேப்டன் சதீஷ் குமார் தெரிவித்தார். முன்னாள் படைவீரர்கள் நலனுக்காக ஒன்றிய பாதுகாப்புத் துறையின் கீழ் இயங்கும் கேந்திரிய சைனிக் வாரியத்துக்கு கடந்த 5 ஆண்டுகளில் 15 கோடியே 75 லட்ச ரூபாய் நிதியை சன் டிவி குழுமம் அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

The post முன்னாள் பாதுகாப்பு படையினருக்கான நலத்திட்டங்களை செயல்படுத்த சன் டிவி ரூ.3.50 கோடி கொடிநாள் நிதி appeared first on Dinakaran.

Tags : Sun TV ,CHENNAI ,Sun TV Group ,
× RELATED 80 ஏழைக் குழந்தைகளுக்கு இலவச இதய அறுவை...