திருமலை: தொடர் மழை காரணமாக திருப்பதி மலைப்பாதையில் பாறை சரிந்து விழுந்ததால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். திருப்பதி, திருமலையில் நேற்று முன்தினம் இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில், திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்லும் இரண்டாவது மலைப்பாதை 8வது கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஹரிணி நிழற்பந்தல் அருகே நேற்று மதியம் சுமார் 12.45 மணியளவில் பாறை ஒன்று திடீரென சரிந்து சாலையில் விழுந்தது. அதிர்ஷ்டவசமாக அந்த நேரத்தில் எந்த வாகனமும் செல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. ஆனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த தேவஸ்தான அதிகாரிகள் உடனடியாக அந்த பகுதிக்கு விரைந்து சென்று பாறையை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். மேலும் போக்குவரத்தையும் சரி செய்தனர். இதற்கிடையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மண் சரிவு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதால் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் செல்லுமாறு தேவஸ்தான நிர்வாகத்தினர் கேட்டுக் கொண்டனர்.
The post திருமலையில் பெய்து வரும் தொடர் மழையால் திருப்பதி மலைப்பாதையில் பாறை சரிந்து விழுந்தது: பக்தர்கள் அதிர்ச்சி appeared first on Dinakaran.