- சம்பா பருவம்
- செட்டுப்பட்டி
- சம்பா
- சேத்துப்பட்டு மார்க்கெட் கமிட்டி
- திருவண்ணாமலை மாவட்டம்
- சேத்துப்பட்டு மார்க்கெட் கமிட்டி
*அதிக விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி
சேத்துப்பட்டு : சேத்துப்பட்டு மார்க்கெட் கமிட்டியில் சம்பா பருவம் தொடங்கியதால் நெல் மூட்டைகள் வரத்து அதிகரித்துள்ளது. நெல்லுக்கு அதிக விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு மார்க்கெட் கமிட்டி நெல் கொள்முதல் செய்வதில் தமிழகத்தில் முதல் இடத்தில் உள்ளது.
விவசாய விளைபொருள்களுக்கு நல்ல விலை கிடைப்பதால் விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய அண்டை மாவட்டங்களில் இருந்தும் சேத்துப்பட்டு, வந்தவாசி, போளூர், கலசபாக்கம் என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் விவசாயிகள் விளைபொருட்களை கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர்.
தற்போது மார்க்கெட் கமிட்டி கணினி மயமாக்கப்பட்டு விலை நிர்ணயம் செய்யப்படுவதால் கூடுதல் விலை கிடைக்கிறது. அது மட்டுமின்றி கொள்முதல் செய்வததற்கான பணம் விவசாயிகளின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படுகிறது.
எனவே, விளைபொருட்கள் அதிக அளவில் சேத்துப்பட்டு மார்க்கெட் கமிட்டிக்கு வருகிறது. தற்போது சம்பா பருவம் தொடங்கி உள்ளதால் விவசாயிகள் அறுவடை செய்த ஆர்என்ஆர், பொன்னி, என்எல்ஆர், கோகோ 55, கோகோ 51, ஏடி 37 ஆகிய நெல் ரகங்களை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.
இங்கு ஆர்என்ஆர் நெல் ரகம் ரூ.1069 முதல் ரூ.2069 வரை விலை போகிறது. ஏடிடி 37 நெல் ரகம் ரூ.1619 முதல் ரூ.1839 வரையிலும், கோகோ 55- 51 நெல் ரகங்கள் ரூ.1603 முதல் ரூ.1909 வரை விலை போகின்றது.
இது மற்ற மார்க்கெட் கமிட்டிகளை விட ரூ.50 முதல் ரூ.100 வரை கூடுதலாகும். தற்போது சம்பா பருவம் தொடங்கியுள்ளதால் மார்க்கெட் கமிட்டிக்கு 5,000 மூட்டைகள் முதல் 6,000 மூட்டைகள் வரை தினம் விற்பனைக்கு வருகின்றன. தினமும் 250 முதல் 260 லாட் வியாபாரிகளுக்கு வழங்கப்பட்டு கொள்முதல் செய்யப்படுகிறது.
இதுகுறித்து கண்காணிப்பாளர் தாமோதரன் கூறியுள்ளதாவது:தற்போது சம்பா பருவம் துவங்கியுள்ளது. விவசாயிகள் தங்களுடைய நெல் மூட்டைகளை மார்க்கெட் கமிட்டிக்கு கொண்டு வருகின்றனர். கமிட்டியில் போதிய வசதி உள்ளதால் மழையில் நனையாமல் இருக்க குடோன்களில் அடுக்க ஏற்பாடு செய்கிறோம். விவசாயிகளின் நெல்லுக்கு போட்டியிருப்பதால் விலை அதிகமாக கிடைக்கிறது. தற்போது பொன்னி வரவு குறைவாக உள்ளது.
பொன்னி விவசாயிகள் அறுவடை செய்து சில மாதம் வைத்திருந்து விற்பனை செய்தால் நல்ல விலை கிடைக்கும்.தற்போது ரூ.1851 முதல் 2029 வரை விலை போகிறது. ஒரு மாதம் இடைவெளிக்கு பிறகு சீசனில் கொண்டு வந்தால் ரூ.3,000க்கு விற்பனை செய்யலாம். அதிக லாபமும் பெறலாம். தொழிலாளர்கள் உடனுக்குடன் எடை போட்டு, பை மாற்றி தருவதாலும் பணபட்டுவாடா ஆன்லைனில் வங்கிக்கணக்கில் செலுத்தப்படுவதாலும் விவசாயிகள் அதிக அளவில் வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
The post சம்பா பருவம் தொடங்கிய நிலையில் சேத்துப்பட்டு மார்க்கெட் கமிட்டியில் குவியும் நெல் மூட்டைகள் appeared first on Dinakaran.