- பவானி உட்கோடம்
- பர்கூர் மலை
- பவானி
- ஈரோடு
- தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை
- அம்மாபேட்டை-ஆண்டியூர்
- பவானி உட்கோடம்
- தின மலர்
*பர்கூர் மலைப்பகுதியில் மண்சரிவு ஏற்படும் பகுதியில் தடுப்புச்சுவர்
பவானி : தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறையின் ஈரோடு கோட்டம், பவானி உட்கோட்டத்தில் சாலை விரிவாக்கம், உயர்மட்ட பாலம் கட்டுதல் உட்பட ரூ.10.50 கோடி மதிப்பிலான வளர்ச்சிப்பணிகள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மாநில நெடுஞ்சாலையான அம்மாபேட்டை-அந்தியூர் சாலையில் பட்லூர் நால் ரோட்டில் நடப்பு நிதியாண்டுக்கான ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சாலையின் ஓடுதளத்தை மேம்பாடு செய்தல் பணி ரூ.1.90 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட்டு, மும்முரமாக நடைபெற்று வருகிறது.
மேலும், பவானி உட்கோட்டம், அந்தியூர் பிரிவு சாலையான வெள்ளித்திருப்பூர் – தொட்டிக்கிணறு சாலையில் 2.80 கிலோ மீட்டர் தொலைவுக்கு சென்னம்பட்டி மற்றும் சனிச்சந்தை பகுதிகளில் தார்ச்சாலை புதுப்பிக்கும் பணி ரூ.95 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் நிறைவு பெற்றுள்ளது.
சாலையின் இரு புறங்களிலும் எதிர்வரும் வாகனங்கள் தெளிவாக தெரியும் வகையில், புதர்கள் அகற்றப்பட்டு, வளைவுகள் சீர் செய்யப்பட்டு தார்ச்சாலை புதுப்பிக்கும் பணியானது மேற்கொள்ளப்பட்டது. அந்தியூர்-ஆதிரெட்டியூர்-மரவபாளையம் சாலையில், ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.2 கோடியில் உயர்மட்ட பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
அந்தியூர் பெரிய ஏரி பகுதியில் குப்பனங்காடு எனும் இடத்தில் இப்பாலம் கட்டும் நெடுஞ்சாலைத்துறை மூலம் கட்டப்பட்டு வருகிறது. மழைக்காலங்களில் பெரிய ஏரி நிரம்பி வழியும் போது, உபரிநீர் அந்தியூர்-ஆதிரெட்டியூர் செல்லும் சாலையில் உள்ள ஓடையில் ஏற்படும் வெள்ளப்பெருக்கால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வந்தது. இதனால், அந்தியூர், ஆதிரெட்டியூர், மரவபாளையம், வெள்ளித்திருப்பூர், சென்னம்பட்டி, சனி சந்தை பகுதிகளை சேர்ந்த மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வந்தனர்.
பொதுமக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு, பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் 30 மீட்டர் நீளம் கொண்ட உயர்மட்ட பாலம், 100 மீட்டர் நீளமுள்ள அணுகுசாலை பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் தமிழ்நாட்டையும், கர்நாடக மாநிலத்தையும் இணைக்கும் மிக முக்கிய சாலையாக அந்தியூர்-பர்கூர்-கொள்ளேகால் சாலை உள்ளது.
அந்தியூர் முதல் செல்லம்பாளையம், தாமரைக்கரை, பர்கூர், ஊசிமலை, தட்டக்கரை, கர்கேகண்டி வரையில் அமைந்துள்ளது. இச்சாலையில், 10வது கி.மீ. முதல் 51வது கி.மீ. வரையில் தமிழ்நாடு-கர்நாடகா மாநிலங்களுக்கு இடையில் மேற்குத்தொடர்ச்சி மலை அமைந்துள்ளது.
பவானி உட்கோட்ட நெடுஞ்சாலைத்துறை சார்பில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் நாளொன்றுக்கு இச்சாலையில் 1,968 கனரக வாகனங்கள் சென்று வந்துள்ளது. மழைக்காலத்தில் 10வது கி.மீ. முதல் 21வது கி.மீ. வரையில் செட்டி நொடி பகுதியில் அதிக அளவில் மண்சரிவும், சாலையில் சேதமும் ஏற்படும் பகுதியாக கண்டறியப்பட்டுள்ளது.
மலையில் ஏற்படும் சேதங்களை தவிர்க்கும் வகையில் ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அந்தியூர்-பர்கூர்- கொள்ளேகால் சாலையில் 150 மீட்டர் நீளத்திற்கு ரூ.1.74 கோடி மதிப்பில் தடுப்புச்சுவர் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு, மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேலும், பவானி – அந்தியூர் சாலையில் தொட்டிபாளையம் முதல் கன்னிவாய்க்கால் வரையில் 4 செ.மீ. உயரப்படுத்தும் பணிகள் ரூ.3 கோடியில் 3.95 கி.மீ. தொலைவுக்கு நடைபெற்று வருகிறது.
பவானி-அத்தாணி சாலையில் ஆப்பக்கூடலில் ரூ.1.50 கோடியில் சாலை சந்திப்பு மேம்பாட்டு விரைவில் தொடங்கப்பட உள்ளது. மேலும், அந்தியூர்-பாலக்குட்டை ரோட்டில் ரூ.27 லட்சத்தில் சாலை புதுப்பிக்கும் பணியும், பவானி-அத்தாணி சாலையில் ஜம்பை முதல் பெரியமோளபாளையம் வரையில் 1 கி.மீ. தொலைவுக்கு ரூ.90 லட்சத்தில் மேம்பாடு செய்யும் பணியும், அந்தியூர்- முனியப்பம்பாளையம்-கரட்டூர் ரோடு, 1.6 கி.மீ. தொலைவுக்கு ரூ.30 லட்சம் மதிப்பில் மேம்பாடு செய்யும் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது.
சாலைப்பணிகளை விரைந்து முடிக்கும் வகையில் பவானி நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் ராஜேஷ் கண்ணா தலைமையில் உதவி பொறியாளர் பாபு சரவணன், சேகர், சாலை ஆய்வாளர்கள் ரமேஷ் குமார், கிருஷ்ணமூர்த்தி, திருமுருகன் உள்ளிட்டோர் ஈடுபட்டுள்ளனர்.
The post பவானி உட்கோட்டத்தில் ரூ.10.50 கோடியில் விரிவாக்க பணிகள் appeared first on Dinakaran.