×

பூச்சி அத்திப்பேடு அரசு தொடக்கப்பள்ளியில் மாணவர்களின் புகைப்படத்துடன் காலண்டர்: மாவட்ட கல்வி அலுவலர் வழங்கினார்

ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் அடுத்த தாமரைப்பாக்கம் அருகே பூச்சி அத்திப்பேடு கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 1 முதல் 5ம் வகுப்பு வரை 103 மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். இப்பள்ளியில் கடந்த 2 வருடங்களாக மாணவர்களுக்கு மட்டுமல்லாது வீடுகள்தோறும் காலண்டர் வழங்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து 3வது வருடமாக காலண்டர் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் பள்ளியின் தலைமையாசிரியர் வெஸ்லி ராபர்ட் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் அன்பு, துணைத்தலைவர் மீனா முருகன், பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் சந்தியா பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கல்வி அலுவலர் அரவிந்தன், ஹார்டுவேர்ஸ் கடை உரிமையாளர் காண்டீபன் ஆகியோர் முதல் பிரதியை வட்டார கல்வி அலுவலர்கள் கல்பனா, சுப்புலட்சுமி, வட்டார வளமைய மேற்பார்வையாளர் கவிதா ஆகியோருக்கு வழங்கினர். பின்னர் பள்ளியில் பயிலும் 103 மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மாணவர்களின் புகைப்படங்களுடன் கூடிய காலண்டர்களை வழங்கினர். இதில் மாவட்ட கல்வி அலுவலர் பேசுகையில், இந்த தொடக்கப் பள்ளிதான் இந்த கல்வி மாவட்டத்திலேயே சிறந்து விளங்குகிறது.

அரசு கல்விக்காக எந்த திட்டத்தை தொடங்கினாலும் முதலில் செயல்படுத்துவது இந்த பள்ளியாகத்தான் இருக்கும். இந்த பள்ளிக்கு எந்த உதவி வேண்டுமானாலும் நான் செய்கிறேன். இதுபோன்று காலண்டரில் மாணவர்கள் புகைப்படம் போடுவதால் மேல்படிப்பின்போது அவர்கள் இதை நினைத்துப் பார்ப்பார்கள் என்றார். நிகழ்ச்சியில் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் தாமோதரன், ஆசிரியர்கள் நளினி, அஜிதா, விக்டோரியா உட்பட பலர் கலந்துகொண்டனர். இறுதியில் பள்ளி மேலாண்மைக்குழு துணைத்தலைவர் கனிமொழி நன்றி கூறினார்.

The post பூச்சி அத்திப்பேடு அரசு தொடக்கப்பள்ளியில் மாணவர்களின் புகைப்படத்துடன் காலண்டர்: மாவட்ட கல்வி அலுவலர் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Puchi Athipedu Govt Primary School ,District Education ,Oothukottai ,Puchi Athippedu ,Thamaraipakkam ,Periyapalayam ,Puchi Athipedu Government Primary School ,
× RELATED திருத்தணியில் மின் சிக்கன வார விழிப்புணர்வு பேரணி