- அஇஅதிமுக
- முதல்வர்
- எம். ஸ்டால்
- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- பண்ணகரம் தொகுதி
- தமிழ்நாடு சட்டமன்றம்
- தின மலர்
அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட வன்னியர் உள் இடஒதுக்கீடு சட்டம் முறையாக கொண்டு வரப்படவில்லை என்று பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டி பேசினார்.
தமிழக சட்டப் பேரவையில் நேற்று துணை நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு பெண்ணாகரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி (பாமக) பேசியதாவது:
கடந்த 2023ம் ஆண்டு சென்னையைச் சுற்றிலும் வெள்ளச் சேதம் ஏற்பட்ட போது, நிவாரணத் தொகையாக ஒரு குடும்ப அட்டைக்கு ரூ.6,000 வழங்கப்பட்டது. ஆனால் சமீபத்தில் பெய்த கனமழையால் தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. முதல்வர் நேரில் சென்று பார்வையிட்டது வரவேற்கத்தக்கது. ஆனால், நிவாரணத் தொகையாக ஒரு குடும்ப அட்டைக்கு ரூ.2,000 தான் வழங்கப்படுகிறது. இதை உயர்த்தி வழங்க வேண்டும்.
அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்: மிக்ஜாம் புயலால் தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் பெய்த கன மழையாலும், 10 நாட்களுக்கு எந்தவித செயல்பாடுகளும் மேற்கொள்ள முடியாமல், வீடுகளுக்குள்ளே, தொழிற்சாலைக்குள்ளே என எல்லா இடங்களிலும் மிகப்பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்பட்டது. அந்த பாதிப்பினுடைய விகிதாச்சாரம் வேறு, இந்த பாதிப்பினுடைய விகிதாச்சாரம் வேறு என்ற முறையில்தால் ரூ.2,000 வழங்கப்படுகிறது.
ஜி.கே.மணி: வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் இடஒதுக்கீடுக்காக முதல்வர் மேற்கொண்ட நடவடிக்கைகள் அனைத்தும் முதலில் சிறப்பாக இருந்தன. நல்லது நடக்கும் என்று நினைத்தோம். ஆனால், இறுதியில் கானல் நீராகிவிட்டது. கைக்கு எட்டியது, வாய்க்கு எட்டவில்லை.
அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்: உச்ச நீதிமன்றத்தின் உரிய தரவுகளின் அடிப்படையிலேயே இந்த இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என்று கூறியுள்ளது. அதற்கு மக்கள் தொகை கணக்கெடுப்பும் சாதிவாரி கணக்கெடுப்பும் நடத்த வேண்டும். இந்த கணக்கெடுப்பை ஒன்றிய அரசே எடுக்க முடியும். பாஜ கூட்டணியில் உள்ள பாமக அதற்கு அழுத்தம் கொடுத்து, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் சமூகநீதி நிலை நாட்டப்படும்.
ஜி.கே.மணி: வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்குவதற்கு சாதிவாரி கணக்கெடுப்பு தேவை என்று அமைச்சர் கூறுகிறார். இதற்கு முன்பு அளிக்கப்பட்ட இஸ்லாமியர் உள்ஒதுக்கீடு, அருந்ததியர் உள் ஒதுக்கீடு, மிக பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடுக்கு எல்லாம் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டுத்தான் கொடுக்கப்பட்டதா?.
அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்: பிற்படுத்தப்பட்டோருக்கான 20 சதவீத இடஒதுக்கீட்டை கொடுத்தவர் கலைஞர். அதை எதிர்த்து நீதிமன்றத்துக்குச் சென்று யாரும் வெல்ல முடியவில்லை. அருந்ததியருக்கு உள்ஒதுக்கீடு கொடுத்தவர் கலைஞர். அதையும் எதிர்த்து நீதிமன்றத்துக்குச் சென்று யாரும் வெல்ல முடியவில்லை. சரியான முறையில் ஆய்வு செய்து, இடஒதுக்கீட்டை கொடுத்தார். ஆனால், நீங்கள் இருந்த கூட்டணி ஆட்சியானது, தேர்தலுக்காக அவசர கதியில் கொடுத்துச் சென்றனர். அதனால் தான் நீதிமன்றம் தகுந்த புள்ளி விவரத்தோடு அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளது. இதற்கு மேலும் சரியான புள்ளி விவரத்துக்காக செய்ய வேண்டியது என்றால், சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்துவது தான். அதற்கு, உங்கள் கூட்டணிக் கட்சியான பாஜவிடம் தான் கேட்க வேண்டும்.
முதல்வர் மு.க.ஸ்டாலின்: வன்னியர் உள்இடஒதுக்கீடு சட்டத்தைக் கொண்டு வந்தபோது முறையாகக் கொண்டு வரவில்லை. இருப்பினும், திமுக ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, நாங்கள் நிறைவேற்றுவதற்கு தயாராக இருக்கிறோம் என்று கூறி தான், அதை எந்த வகையில் நிறைவேற்ற வேண்டுமோ, அதை எல்லாம் நிறைவேற்றி அது அமல்படுத்தப்பட்டு கொண்டிருந்தது. இதற்கு இடையில் தான் ஆனால், உச்ச நீதிமன்றத்துக்கு சென்று தடை பெற்றிருக்கும் நிலை உள்ளது. நாங்கள் என்ன செய்வது? இது யாருடைய தவறு?.
இவ்வாறு விவாதம் நடந்தது.
The post கடந்த அதிமுக ஆட்சியில் வன்னியர் உள் இடஒதுக்கீடு சட்டம் முறையாக கொண்டு வரப்படவில்லை: முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.