×

எஸ்.சி, எஸ்.டி, எம்பிசி மாணவர்கள் கல்வி உதவித்தொகைக்கான குடும்ப வருமான உச்சவரம்பை ரூ.8 லட்சமாக உயர்த்த வேண்டும் : பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: ஆதிதிராவிடர் – பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த மாணவர்கள் கல்வி உதவி தொகைக்கான குடும்ப வருமான உச்சவரம்பை ரூ.8 லட்சமாக உயர்த்தி நிர்ணயம் செய்ய வேண்டும் என பிரதமர் மோடி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் வாயிலாக கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கான வருமான உச்சவரம்பை ஒன்றிய அரசு ரூ.8 லட்சமாக மாற்றியமைத்துள்ளதையும், தேசிய வெளிநாட்டு கல்வி உதவித்தொகை மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான உயர்தர கல்வித் திட்டம் போன்றவற்றில் வருமான உச்சவரம்பு ரூ.8 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதையும் இக்கடிதம் வாயிலாக சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இதன் காரணமாக பின்தங்கிய நிலையில் வாழும் பல மாணவர்கள் மிகுந்த பயனை அடைந்துள்ளனர்.

அதேபோல், அகில இந்திய உயர்கல்வி ஆய்வு தரவுகளின்படி, ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் சில பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த மாணவர்களின் ஒட்டுமொத்த உயர்கல்வி சேர்க்கை விகிதம் மற்ற மாணவர்களைக் காட்டிலும் கணிசமாக குறைந்துள்ளது. மேலும், மக்கள் தொகை எண்ணிக்கையின் அடிப்படையில் ஒப்பிடுகையில், ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான ஒட்டுமொத்த உயர்கல்வி சேர்க்கை விகிதம் வெகுவாக குறைந்துள்ளது. இந்த நிலையை கருத்தில் கொண்டு, அவர்கள் உயர்கல்வி நிறுவனங்களில் அதிக எண்ணிக்கையில் சேர்வதற்கு தேவையான வசதிகளை செய்து தருவது மிகவும் அவசியமானதாகும்.

இதேபோல், மெட்ரிக் படிப்புக்கு முந்தைய மற்றும் மெட்ரிக் கல்விக்கு பிந்தைய உதவித் தொகை, ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்க கணிசமாக பங்களிக்கும் வகையில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கான ஆண்டு வருமான உச்சவரம்பிற்கு ஏற்ப, இப்பிரிவினர்களுக்கான உதவித்தொகைக்கான ஆண்டு வருமான உச்சவரம்பை ரூ.2.50 லட்சம் ரூபாயிலிருந்து, ரூ.8 லட்சமாக உயர்த்தி வழங்கினால், இச்சமூகங்களில் பெரிய அளவில் மாற்றங்கள் நிகழும் என்பதை குறிப்பிட விரும்புகிறேன்.

எனவே, இந்த விவகாரத்தில் பிரதமராகிய நீங்கள் தலையிட்டு, ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த மாணவர்களுக்கான மெட்ரிக் படிப்புக்கு முந்தைய மற்றும் மெட்ரிக் கல்விக்கு பிந்தைய உதவித்தொகை திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவித் தொகைக்கான வருடாந்திர குடும்ப வருமான உச்சவரம்பை ரூ.2.50 லட்சம் ரூபாயிலிருந்து, ரூ.8 லட்சமாக உடனடியாக உயர்த்தி நிர்ணயிக்க வேண்டுமென வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

The post எஸ்.சி, எஸ்.டி, எம்பிசி மாணவர்கள் கல்வி உதவித்தொகைக்கான குடும்ப வருமான உச்சவரம்பை ரூ.8 லட்சமாக உயர்த்த வேண்டும் : பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் appeared first on Dinakaran.

Tags : SC ,MBC ,Chief Minister ,M.K.Stal ,Chennai ,Modi ,Tamil Nadu ,Adi Dravidar ,Tribal ,ST ,Dinakaran ,
× RELATED பட்டியலின மக்களுக்கு எதிராக...