×

தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 1.2 டன் பீடி இலைகள், மினி லாரி பறிமுதல்

தூத்துக்குடி: தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 1.2 டன் பீடி இலைகளை கியூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். கடத்தல் தொடர்பாக மினி லாரி டிரைவர் உள்ளிட்ட 2 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். பீடி இலைகளை கடற்கரைக்கு கொண்டு வர பயன்படுத்தப்பட்ட மினி லாரி கைப்பற்றப்பட்டது. தூத்துக்குடி கடற்பகுதியிலிருந்து இலங்கைக்கு பீடி இலைகள் கடத்தப்பட இருப்பதாக எஸ்பி ஆல்பர்ட் ஜானுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் கியூ பிரிவு இன்ஸ்பெக்டர் விஜயஅனிதா, எஸ்ஐக்கள் ஜீவமணி தர்மராஜ், வேல்ராஜ், சிவகுமார், எஸ்எஸ்ஐ ராமர், ஏட்டுகள் இருதயராஜ்குமார், பழனிபால்முருகன் மற்றும் போலீசார், தருவைகுளம் போலீஸ் சரகத்திற்குட்பட்ட தெற்கு கல் மேட்டிலிருந்து கடற்கரைக்கு செல்லும் உப்பள பாதையில் ஒரு மறைவான இடத்தில் நின்று இன்று அதிகாலை 2 மணி அளவில் கண்காணித்துக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு மினி லாரியில் தருவைகுளம் கடற்கரைக்கு வந்த 6 பேர் கொண்ட கும்பல், அதிலிருந்து பீடி இலை மூடைகளை இறக்கும் பணியில் ஈடுபட்டது. இதைப் பார்த்த கியூ பிரிவு போலீசார் அதிரடியாக மினி லாரியை சுற்றி வளைத்தனர். இதில் லாரி டிரைவர் உள்பட 2 பேர் சிக்கினர். மற்ற 4 பேரும் தப்பியோடி விட்டனர்.

விசாரணையில் அவர்கள் மினி லாரி டிரைவர் விருதுநகர் மாவட்டம், சாத்தூர், மேட்டமலை, சுடலைமணி மகன் காளிராஜன் (35), ராமநாதபுரம் மாவட்டம், பந்தல்குடி, வெள்ளையாபுரத்தைச் சேர்ந்த பெருமாள் மகன் அஜித்பெருமாள் (24) என்பது தெரியவந்தது. மினி லாரியை சோதனையிட்டதில் அதில் தலா 30 கிலோ எடை கொண்ட 40 மூடை பீடி இலைகள் இருந்தது, தெரியவந்தது. கடத்தப்பட இருந்த 1.2 டன் பீடி இலைகளின் இலங்கை மதிப்பு ரூ.30 லட்சம் ஆகும். பீடி இலை மூடைகள் மற்றும் மினி லாரியை கியூ பிரிவு ேபாலீசார் பறிமுதல் செய்தனர். இவைகளையும், பிடிபட்ட 2 பேரையும் இன்று சுங்கத்துறையினரிடம் கியூ பிரிவு போலீசார் ஒப்படைக்க உள்ளனர். தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு 1200 கிலோ பீடி இலைகள் கடத்த முயன்ற சம்பவம், மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 1.2 டன் பீடி இலைகள், மினி லாரி பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Tuticorin ,Sri Lanka ,Thoothukudi ,Q Division ,Dinakaran ,
× RELATED மோசமான வானிலை காரணமாக சென்னையில்...