×

மடத்துக்குளம் பகுதியில் 2000 ஏக்கர் நெற்பயிர்கள் கருகி சேதம்

*இழப்பீடு கேட்டு கலெக்டரிடம் மனு

திருப்பூர் : திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் மா.கம்யூ மாவட்ட குழு சார்பில் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: மடத்துக்குளம் பகுதியில்நெற்பயிர் சாகுபடிகள் விதைக்கப்பட்டு 40 நாட்கள் வளர்ந்த நிலையில் காரணம் தெரியாத நிலையில் பயிர்கள் கருகியது.

இதனால் சுமார் 2000 ஏக்கர் நிலம் வரை நெற்பயிர் சாகுபடி செய்த 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகம் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கிட வேண்டும்.

தற்போது சாகுபடிக்காக பயிர் கடனாக கூட்டுறவு மற்றும் வங்கிகளில் ஒரு லட்சம் வரை பயிர் கடன் பெற்றுள்ளனர். எனவே தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு விவசாயிகளுக்கான கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். ஜிங் சல்பேட் உள்ளிட்ட உரங்கள் மறு விதைப்புக்கான விதைகள் ஆகியவற்றை மானியமாக அரசு வழங்கினால் நெல் உற்பத்தியை மீண்டும் துவங்கிடவும், விவசாயிகள் கடன் நெருக்கடியில் சிக்காமல் இருக்கவும் உதவிடும்.

அமராவதி ஆற்றில் மறு சாகுபடிக்காக சிறப்பு கவனத்துடன் மீண்டும் 90 நாட்கள் நீர் திறந்து விடுவதன் மூலம் அந்த பகுதி விவசாயிகளின் பயிர்சாகுபடி பாதுகாக்க முடியும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.செம்மிபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் திருமூர்த்தி தலைமையில் அளிக்கப்பட்ட மனுவில்: பல்லடம் தாலுக்கா செம்மிபாளையம் கிராமத்தில் பூமி தான வாரியத்திற்கு சொந்தமான 2.85 ஏக்கர் பூமியை இலவச வீட்டு மனை பட்டாவாக வழங்குவதாக அறிந்தோம்.

நீண்ட நாட்களாக செம்மிபாளையம் ஊராட்சி பகுதியில் சொந்தமாக இடமோ வீடோ இல்லாமல் குடியிருந்து வரும் ஏழை எளிய பயனாளிகளை கண்டறிந்து,பாகுபாடின்றி இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும்.

ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் அளிக்கப்பட்ட மனுவில்: பாண்டியன் நகர் பொன்மலர் வீதியில் கடந்த அக்டோபர் 8ம் தேதி நடந்த வெடி விபத்து சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கும்,மளிகை கடைக்கும்,விபத்தில் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கும் அவர்களின் உடமைகளுக்கும் இதுவரை எந்த நிவாரணமும் கிடைக்க வில்லை. எனவே அதிகாரிகள் உடனடியாக நிவாரணம் வழங்கிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது.

புதிய திராவிட கழக மாவட்ட செயலாளர் இமானுவேல் நாடார் அளித்த மனுவில்:காடையூர் கிராமம் பொத்திபாளையம் பஞ்சாயத்துக்குட்பட்ட பசுவன் மூப்பன்வலசு ஊரில் பெயர் பலகை அடையாளம் தெரியாத நபர்களால் அகற்றப்பட்டுள்ளது. உடனடியாக ஊரின் பெயர் பலகை அமைத்து தர வேண்டும்.

கைத்தறி நெசவாளர்கள் குடும்பத்தினர் மற்றும் கம்யூனிஸ்ட் மணி என்பவர் அளித்த மனுவில்: சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி திருப்பூர் கலெக்டர் கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் 16ம் தேதி என்னுடன் சேர்ந்து 218 நபர்களுக்கு இடம் வழங்க பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலருக்கு செயல்முறைகள் உத்தரவு பிறப்பித்தார்.

அதன் அடிப்படையில் 18 நபர்களுக்கு பட்டா வழங்கப்பட்டது. மீதமுள்ளவர்களுக்கு பட்டா வழங்க தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில் 55 நபர்களுக்கு பட்டா வழங்க உத்தரவு பிறப்பித்தார். அதன்படி 55 பேரில் 6 பேருக்கு மட்டும் கடந்த மாதம் ஊதியூர் கிராமத்தில் பட்டா வழங்கப்பட்டது.

இந்நிலையில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் பிறப்பித்த செயல்முறை உத்தரவில் கூறப்பட்டுள்ள 55 நபர்கள் அடங்கிய பட்டியலில் மீதமுள்ள 49 நபர்களுக்கு உடனடியாக பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் இன்னும் மீதம் உள்ள 151 நபர்களுக்கு விரைந்து பட்டா வழங்க ஆவணம் செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

சமூக ஆர்வலர் ஈ.பி.அ.சரவணன் அளித்த மனுவில்: திருப்பூர் மாவட்டத்தில் 100 படுக்கை வசதிகளுடன் ரூ.34 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட இஎஸ்ஐ மருத்துவமனையை பிரதமர் திறந்து வைத்து 9 மாதமாகியும் இன்னும் முழுமையான பயன்பாட்டிற்கு வரவில்லை. போதிய மருத்துவர்கள் இல்லாததால் இஎஸ்ஐ பயனாளிகள் கோவை மாவட்டத்திற்கு பரிந்துரை செய்யப்படுகின்றனர்.

அதேபோல் புதிய பேருந்து நிலையத்திலிருந்து 5 கி. மீ நடந்து செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே இஎஸ்ஐ மருத்துவமனையை 100 படுக்கை வசதி மற்றும் 250 மருத்துவர்களுடன் முழுமையான பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். பேருந்து வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

தமிழக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் சார்பில் அளிக்கப்பட்ட மனுவில்: கடந்த 6 மாத காலமாக உப்பாறு அணைக்கு உயிர் தண்ணீர் கொடுக்க வேண்டும் என்ற பாசன விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றோம். இருந்தும் பிஏபி பொதுப்பணித்துறை அதிகாரிகள் எந்த ஒரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை.

உப்பாறு பாசன பகுதியில் வடகிழக்கு பருவமழை மிகவும் குறைவு. இதை கருத்தில் கொண்டு உப்பாறு அணைக்கு உயிர் தண்ணீர் வழங்க உத்தரவிட வேண்டும் என உப்பாறு பாசன விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சார்பாக வலியுறுத்தப்பட்டது.மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் நேற்று பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 484 மனுக்கள் அளிக்கப்பட்டதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post மடத்துக்குளம் பகுதியில் 2000 ஏக்கர் நெற்பயிர்கள் கருகி சேதம் appeared first on Dinakaran.

Tags : Madathikulam ,Tirupur ,Kristaraj ,M.Com ,
× RELATED திருப்பூர் பனியன் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து..!!