புழல்: புழல் – வடபெரும்பாக்கம் இணைப்பு சாலையில் மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளதால், அதனை பயன்பாட்டிற்காக திறக்கப்படுமா? என்று வாகன ஓட்டிகள், பொதுமக்கள் எதிர்ப்பார்த்து காத்துக்கொண்டு இருகின்றனர். சென்னை மக்களுக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஒன்றான புழல் ஏரி. வடகிழக்கு பருவமழை காலங்களில் மழை பெய்யும் போது, இதன் முழு கொள்ளளவு நிரம்பி, உபரிநீர் வெளியேற்றப்படும் கால்வாய் ஏரியின் மதகு பகுதியில் இருந்து செங்குன்றம் சாமியார் மடம், வடகரை பாபா நகர், தண்டல் கழனி, புழல் கிரான்ட் லைன் இணைப்பு சாலை, புழல் திருநீலகண்ட நகர், தமிழன் நகர், காஞ்சி அருள் நகர், பாலாஜி நகர், மேக்ரோ மார்வெல் நகர், புழல் வடபெரும்பாக்கம் இணைப்பு சாலை, மாதவரம் – செங்குன்றம் மாநில நெடுஞ்சாலை, கொசப்பூர், ஆமுல்லைவாயல், சடையங்குப்பம் வழியாக திருவொற்றியூர், எண்ணூர் பகுதியில் கடலில் கலக்கிறது.
புழல் – வடபெரும்பாக்கம் இணைப்பு சாலையில் மழைநீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், மழை காலங்களில் இச்சாலை துண்டிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த அதிமுக ஆட்சியில் சென்னை மாநகராட்சி சார்பில், மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வந்தது. தற்போது, மேம்பாலம் பாலம் கட்டுமான பணி பாதியிலேயே நிற்கிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரியிடம் கேட்டபோது, பாலம் முடியும் புழல் பகுதியில் உள்ள இடம் தனியாருக்கு சொந்தமான இடம் என்று தனியார் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார். இதனால், பணிகள் முழுமையாக நடைபெறாமல் உள்ளது என தெரிவித்தனர். இதுகுறித்து புழல், வடபெரும்பாக்கம், மாதவரம் மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் கூறுகையில்; புழல் ஜி.என்.டி சாலை, புழல் மத்திய சாலையில் இருந்து காந்தி பிரதான சாலை வழியாக வடபெரும்பாக்கம், மாதவரம், மணலி, மாத்தூர், திருவெற்றியூர், எண்ணூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்ல இச்சாலையை தான் பயன்படுத்த வேண்டும்.
தற்போது, மேம்பாலம் கட்டும் பணி பாதியிலே நிற்பதால், சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு சுற்றி சென்று வரும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. இதனால், வாகனங்களில் எரிபொருள் மற்றும் நேரங்களும் வீணாகிறது. எனவே, சம்பந்தப்பட்ட சென்னை மாநகராட்சி உயர் அதிகாரிகள், உரிய நடவடிக்கை எடுத்து நீதிமன்றத்தில் உரிய ஆவணங்களை வழங்கி வழக்குகளை சந்தித்து உரிய நடவடிக்கை எடுத்து மேம்பாலம் கட்டுமான பணியை விரைந்து முடிக்க வேண்டும். அப்படி மேம்பாலம் கட்டுமான பணி முழுமையாக முடிக்கப்பட்டால், சாலை வழியாக மாநகர பேருந்து அல்லது மினி பேருந்து இயக்கப்படும் என மாநகர போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதனால், பள்ளி கல்லூரி செல்லும் மாணவ – மாணவிகளும், பல்வேறு பணிகளுக்கு செல்லும் ஊழியர்கள், குறிப்பாக பெண்கள் பயன் அடைவார்கள். எனவே, சம்பந்தப்பட்ட மாநகராட்சி உயர் அதிகாரிகள், உடைய நடவடிக்கை எடுத்து மேம்பாலம் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்திருந்த நிலையில், தற்போது பாலம் முழுமை பெற்றுள்ளது.
இதனை, உடனடியாக பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்க வேண்டும் என தெரிவிக்கின்றனர். புழல் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து செல்லும் பெண்கள், புழல் மத்திய சிறைச்சாலை அருகில் இருந்து சொல்லும் காந்தி பிரதான சாலை முதல் வடபெரும்பாக்கம் வரை உள்ள இந்த சாலையில் மாநகர போக்குவரத்து வசதி இல்லாததால், அதிகம் கட்டணம் கொடுத்து ஆட்டோ மற்றும் ஷேர் ஆட்டோக்களில் வடபெரும்பாக்கம், செட்டிமேடு, மஞ்சம்பாக்கம், வி.எஸ் மணி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளுக்கு செல்ல வேண்டிய அவலநிலை உள்ளது. மேலும், பல ஆண்டுகளாக கட்டி முடிக்கப்படாமல், உள்ள புழல் – வடபெரும்பாக்கம் இணைப்பு மேம்பாலம் பணி முடிக்கப்பட்டு உள்ளதால், மக்கள் பயன்பாட்டுக்கு உடனடியாக திறந்து விட வேண்டும். இந்த வழித்தடத்தில் மாநகர மினி பேருந்து, புழல் மத்திய சிறைச்சாலையில் இருந்து காந்தி பிரதான சாலை வடபெரும்பாக்கம், செட்டிமேடு, கொசுப்பூர் பைபாஸ் சாலை வழியாக மணலி வரை மினி பேருந்து விட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
