- செஞ்சியம்மன் நகர், பழவேக்காடு
- பொன்னேரி
- பழவேக்காடு, செஞ்சியம்மன்
- கரிமணல் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி
- தோனிரேவ்
- கோட்டகுப்பம் ஊராட்சி
- பாலாவேக்காடு
- செஞ்சியம்மன்
பொன்னேரி, டிச. 10: பழவேற்காடு, செஞ்சியம்மன் நகரில் கல்வியின் அவசியம் மற்றும் பாலியல் குற்றம் குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. கோட்டைக்குப்பம் ஊராட்சியில் உள்ள தோணிரேவு கிராமத்தில் இயங்கி வரும் கரிமணல் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 40க்கும் மேற்பட்ட சிறுமிகள் கல்வி பயின்று வருகின்றனர். இதில், 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் செஞ்சியம்மன் நகர் கிராமத்தில் இருந்து படித்து வருகின்றனர். சமீப காலமாக செஞ்சியம்மன் நகரில் இருந்து வரும் சிறுமிகள் பள்ளிக்கு அடிக்கடி விடுப்பு எடுத்தும், பள்ளிக்கு வராமல் பெற்றோர்களுடன் மீன்பிடிக்க செல்வதாகவும் அறிந்து பள்ளியின் தலைமை ஆசிரியர் பாண்டியராஜன் அந்த கிராமத்திற்கு சென்று குழந்தைகளிடமும், பெற்றோர்களிடமும் பள்ளிக்கு வரும்படி அழைப்பு விடுத்துள்ளார்.
இதனையடுத்து, ஒரு சில சிறுமிகள் தவிர மற்ற சிறுமிகள் பள்ளிக்கு வருவதை தவிர்த்துள்ளனர். இதுகுறித்து கிராம மக்கள், பள்ளி மேலாண்மை குழு, சமூக ஆர்வலர்களிடம் பாண்டியராஜன் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளார். அதன்படி, பழவேற்காட்டில் இயங்கி வரும் உறவு அறக்கட்டளை தொண்டு நிறுவனம் சார்பில், கல்வியின் அவசியம், முக்கியத்துவம் பாலியல் சீன்டல் குறித்து விழிப்புணர்வு கூட்டம் செஞ்சியம்மன் நகர் கிராமத்தில் நேற்று மாலை நடைபெற்றது.
இதில், திருப்பாலைவனம் காவல்துறை ஆய்வாளர் காளிராஜ் ஆலோசனையின்படி உதவி ஆய்வாளர்கள் திருவேங்கடம், ராகதேவன் ஆகியோர் கூட்டத்தில் கலந்துகொண்டு கிராம மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக தொடக்கப்பள்ளி சென்று கல்வி பயில்வது குழந்தைகளுக்கு எவ்வளவு அவசியம் என்றும், கல்வி பயின்றதால்தான் தாங்கள் காவல்துறையில் அதிகாரிகளாக பணி செய்ய முடிந்தது என்றும், வறுமையை காரணம் காட்டி சிறுமிகளை பள்ளிக்கு அனுப்பாமல் இருக்க கூடாது என்றும், ஏழ்மை நிலையில் இருக்கும் குடும்பத்தில் வசிக்கும் குழந்தைகளுக்கு கட்டாய கல்வி கொடுக்கும் விதத்தில் தமிழ்நாடு அரசு மதிய உணவுடன் காலை உணவு திட்டம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை தருகிறது என்றும் அறிவுரை வழங்கினர்.
மேலும், பள்ளிக்கு செல்லும் சிறுமிகளிடம் பாலியல் தொடர்பான குற்றங்களில் ஈடுபடுவது சட்டப்படி தண்டனைக்குரியது என்றும் கிராம மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்ச்சியில், உறவு அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் மஞ்சு, இயக்குனர் ரமேஷ், சமூக ஆர்வலர் அசோக் பிரியதர்ஷன் ஆகியோரும் கல்வியின் அவசியம் குறித்து விளக்கம் அளித்தனர். பின்னர், கிராமத்தில் உள்ள பள்ளி செல்லும் சிறுமிகள் அனைவருக்கும் கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது. கிராம நிர்வாகி ரமேஷ் நன்றி கூறினார். உறவு அறக்கட்டளை நிர்வாகி கர்ணா, பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் விநாயக மூர்த்தி, சமூக ஆர்வலர்கள் ஆமூர் தனசேகரன், வஞ்சிவாக்கம் திருஞானம் மற்றும் காவல்துறை அதிகாரிகள், கோட்ட அளவிலான எஸ்.சி., எஸ்.டி வன்கொடுமை தடுப்பு விழிப்புணர்வு குழு உறுப்பினர்கள், கிராம பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
The post பழவேற்காடு, செஞ்சியம்மன் நகரில் கல்வியின் முக்கியத்துவம் குறித்து பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு appeared first on Dinakaran.