×

ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் பதவிக்கான மெயின் தேர்வு ரிசல்ட் இந்தியா முழுவதும் 2845 பேர் தேர்ச்சி: தமிழ்நாட்டில் 141 பேர் தேர்ச்சி பெற்று சாதனை

சென்னை: ஒன்றிய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பதவிகளுக்கான மெயின் தேர்வு ரிசல்ட் நேற்று வெளியிடப்பட்டது. இதில் இந்தியா முழுவதும் 2845 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தில் மட்டும் 141 பேர் தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளனர். ஒன்றிய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) ஆண்டு தோறும் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் மற்றும் ஐஆர்எஸ் உள்ளிட்ட 26 வகையான பதவிகளுக்கான தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்தாண்டுக்கான ( 2024ம் ஆண்டு) சிவில் சர்வீஸ் பணியில் அடங்கிய 1056 பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டது. இத்தேர்வுக்கு இந்தியா முழுவதும் இருந்து சுமார் 9 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து இருந்தனர்.

இதில் 6 லட்சம் முதல்நிலை தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். இவர்களுக்கான முதல்நிலை தேர்வு கடந்த ஜூன் மாதம் 16ம் தேதி நடந்தது. தொடர்ந்து தேர்வு முடிவு கடந்த ஜூலை மாதம் 1ம் தேதி வெளியானது. முதல்நிலை தேர்வில் இந்தியா முழுவதும் இருந்து 14,627 பேர் தேர்ச்சி பெற்றனர். அதில் தமிழ்நாட்டை சேர்ந்த 650 தேர்ச்சி பெற்றனர். முதல்நிலை தேர்ச்சி பெற்றோருக்கான மெயின் தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் , 20, 21, 22, மற்றும் 28, 29ம் தேதி என 5 நாட்கள் நடந்தது. இந்த நிலையில் மெயின் தேர்வுக்கான ரிசல்ட்டை யுபிஎஸ்சி தனது இணையதளமான www.upsc.gov.inல் நேற்று இரவு வெளியிட்டது.

இது குறித்து சங்கர் ஐஏஎஸ் அகாடமி நிர்வாக இயக்குனர் டாக்டர் எஸ்.டி.வைஷ்ணவி கூறுகையில், ‘‘சிவில் சர்வீஸ் மெயின் தேர்வில் இந்தியா முழுவதும் இருந்து 2,845 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழ்நாட்டிலிருந்து 141 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 95 மாணவர்கள் சங்கர் ஐஏஎஸ் அகாடமியில் பயின்றவர்கள் ஆவார்கள். ஒட்டு மொத்தமாக சங்கர் ஐஏஎஸ் அகாடமியில்(சென்னை,பெங்களுர், திருவனந்தபுரம் ) 495 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்’’ என்றார்.

நேர்முக தேர்வு முடிந்த பின்னர் நேர்முக தேர்வு, மெயின் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் பணி ஒதுக்கப்படும். அதன் பின்னர் டேராடூனில் உள்ள இந்திரா காந்தி தேசிய வன பயிற்சி மையத்தில் சுமார் ஒன்றரை ஆண்டுகள் அவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும். அதை தொடர்ந்து அவர்கள் பணியில் சேர்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

The post ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் பதவிக்கான மெயின் தேர்வு ரிசல்ட் இந்தியா முழுவதும் 2845 பேர் தேர்ச்சி: தமிழ்நாட்டில் 141 பேர் தேர்ச்சி பெற்று சாதனை appeared first on Dinakaran.

Tags : India ,Tamil Nadu ,CHENNAI ,Union Government Staff Selection Commission ,Union… ,
× RELATED வீடுகளுக்கு மின்சாரம் வழங்குவதில்...