×

அருமனை அருகே அம்மன் கோயிலில் சாமி கும்பிட்டு சிலை திருடிய கொள்ளையர்கள்: விற்க கொண்டு சென்றபோது சிக்கினர்

அருமனை: அருமனை அருகே அம்மன் கோயிலில் புகுந்த கொள்ளையர்கள் சாமி கும்பிட்டுவிட்டு அம்மன் சிலை, குத்துவிளக்கு உள்ளிட்ட பொருட்களை திருடினர். அதனை நேற்று காலை விற்க முயன்றபோது பொதுமக்களிடம் சிக்கினர். அருமனை அருகே புத்தன்சந்ைத பகுதியில்  முத்தாரம்மன் கோயில் உள்ளது. நேற்று முன் தினம் இரவு கோயில் மதில் சுவர் ஏறி குதித்து உள்ளே புகுந்த மர்மநபர்கள் சிலர் பூட்டை உடைத்து அங்கிருந்த வெண்கல குத்துவிளக்குகள், சிறிய அளவிலான சாமி சிலைகளை திருடினர். பின்னர் உண்டியலை உடைத்து அதில் இருந்த சில்லறை காசுகளை திருடியதுடன் கோயிலில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களையும் திருடி விட்டு தப்பி சென்றனர்.

நேற்று காலை கோயிலுக்கு சென்ற பக்தர்கள் சிலை, பொருட்கள் கொள்ளை போயிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். தகவலறிந்ததும் பளுகல் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் நேற்று காலை 2 பேர் பைக்கில் சாக்கு பைகளுடன் சந்தேகப்படும் வகையில் பளுகல் அருகே உள்ள கண்ணாலுமூடு பகுதியில் சுற்றித்திரிந்தனர். இதைக்கண்ட பொதுமக்கள் சிலர் அந்த நபர்களை பிடித்து சாக்கு பையை சோதனையிட்டபோது அதில் சாமி சிலை உள்ளிட்ட கோயிலில் திருடப்பட்ட பொருட்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர் அவர்கள் இருவரையும், திருடிய பொருட்களுடன் பளுகல் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரித்ததில் அவர்கள் மருதங்கோடு பகுதியை சேர்ந்த மார்கோஸ் மகன் மனோஜ் (25), அர்ஜுனன் மகன் நடராஜ் (47) என்பது தெரியவந்தது. இதையடுத்து சிலை, குத்துவிளக்குகள் மற்றும் காணிக்கை காசுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் வந்த பைக்கும் திருட்டு பைக் என்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து அவர்கள் 2 பேரும் கைது செய்யப்பட்டு பைக்கும் பறிமுதல் செய்யப்பட்டது.

இது ஒருபுறம் இருக்க கொள்ளையர்கள் கோயிலில் திருடுவதற்கு முன்பு பயபக்தியுடன் சாமி கும்பிட்டுவிட்டு திருட்டை தொடங்கியுள்ளனர். அதிலும் ஒரு கொள்ளையன் குத்துவிளக்கை தொட்டு கும்பிட்டுவிட்டு அதனை அப்படியே கழற்றி திருடும் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமரா ஹார்டு டிஸ்க்கில் பதிவாகியுள்ளது.

ஹார்டு டிஸ்க்கை விட்டுச் சென்றனர்
சிசிடிவி கேமராவில் தங்களின் உருவம் பதிவாகிவிடும் என நினைத்த கொள்ளையர்கள் அதனை மட்டும் நைசாக திருடியுள்ளனர். ஆனால் அதில் பதிவாகும் காட்சிகள் கோயிலில் உள்ள ஹார்டு டிஸ்க்கில் பதிவாகும் என்ற விபரம் தெரியாததால், ஹார்டு டிஸ்க்கை அப்படியே விட்டுவிட்டு சென்றுவிட்டனர்.

The post அருமனை அருகே அம்மன் கோயிலில் சாமி கும்பிட்டு சிலை திருடிய கொள்ளையர்கள்: விற்க கொண்டு சென்றபோது சிக்கினர் appeared first on Dinakaran.

Tags : Sami Kumphi ,Amman temple ,Arumanai ,Muttharaman ,Buddhasanaidha ,Arumanai.… ,Sami ,
× RELATED சபரிமலை சீசன் காரணமாக மீனாட்சியம்மன் கோயிலில் அலைமோதும் கூட்டம்