×

பவானியில் அனைத்து மக்களையும் காக்கும் காவல் தெய்வம் செல்லியாண்டியம்மன்.!

ஈரோடு மாவட்டம், பவானியில் காவிரி, பவானி ஆறுகள் சங்கமிக்கும் தீபகற்ப நகரில் வடக்கு திசை நோக்கி அமர்ந்து, வேண்டுவோருக்கு வேண்டும் வரம் தந்து, அனைத்து மக்களையும் காத்து நிற்கும் காவல் தெய்வமாக விளங்கி வருகிறார் செல்லியாண்டியம்மன்.

இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான பவானி செல்லியாண்டி அம்மன் மற்றும் மாரியம்மன் கோயில்களுக்கு கடந்த 2007ம் வருடம் கும்பாபிஷேகம் நடைபெற்றது. தற்போது 16 ஆண்டுகள் ஆனதால் மீண்டும் கும்பாபிஷேகம் செய்ய இந்து சமய அறநிலையத்துறைக்கு பக்தர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதற்கு, தமிழ்நாடு அரசு அனுமதி அளித்ததை தொடர்ந்து, மீண்டும் திருப்பணி வேலைகள் செய்து, கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்யப்பட்டது.இதையடுத்து, கோயில் புணரமைப்பு உட்பட ரூ.3 கோடி மதிப்பில் திருப்பணி வேலைகள் செய்ய திட்டமிடப்பட்டது. திருப்பணிகள் செய்ய அம்மன் சன்னதியில் சீட்டு எழுதிப்போடப்பட்டு, வழிபாட்டுக்கு வந்த சிறுமியை கொண்டு சீட்டு எடுக்கப்பட்டது.

இதில், செப்டம்பர் மாதம் 11ம் தேதி என வாக்கு கிடைத்ததை தொடர்ந்து, அந்நாளில் பாலாலய பூஜைகள் செய்யப்பட்டு, சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. திருப்பணி வேலைகள் தொடங்கி, நடைபெற்று வந்ததால் கடந்த வருடம் மாசி மாதம் நடைபெறும் பொங்கல், தேர்த்திருவிழா நடைபெறவில்லை. இதையடுத்து, ரூ.3 கோடி மதிப்பில் செல்லியாண்டியம்மன் கோயில் மகா மண்டப வளாகத்தில் கருங்கல் தரைத்தளம், பக்கவாட்டில் கருங்கல் சுவர்கள் கட்டவும், பழுதடைந்த பகுதிகள் சீரமைக்கப்பட்டு வர்ணம் பூசவும் முடிவு செய்யப்பட்டது. மேலும், கொடிமரம் புதிதாக செய்யவும், பழுதான தேரை ரூ.35 லட்சம் மதிப்பில் இந்து அறநிலையத்துறை சார்பில் சீரமைக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

அம்மன் மீதான அளவற்ற பக்தியும், நம்பிக்கையும் கொண்ட நன்கொடையாளர்கள் நேரடியாக திருப்பணிக்கான உபயதாரராக பங்கேற்க ஆர்வத்துடன் வந்ததால், திருப்பணி வேலைகள் தொடங்கி மும்முரமாக நடைபெற்றது. இதையடுத்து, திருப்பணிகள் நிறைவடைந்த நிலையில் கோயில் முன்பாக தேவலோக பிரமாண்டத்துடன் யாகசாலை மண்டபம் அமைக்கப்பட்டு, பூஜைகள் நடைபெற்று வருகிறது.

சேறுபூசும் திருவிழா
பவானியின் காவல் தெய்வமான செல்லியாண்டியம்மன், மாரியம்மன் மற்றும் எல்லையம்மன் வகையறா கோயில்களில் ஆண்டுதோறும் மாசி மாதம் பொங்கல் மற்றும் தேர்திருவிழாவின் நடைபெறுவது வழக்கம். விழாவின் முக்கிய நிகழ்வான அம்மன் அழைத்தல் நிகழ்ச்சியை முன்னிட்டு பக்தர்கள் உடலில் சேறு, வண்ணப்பொடிகள் பூசியும், பல்வேறு வேடங்கள் பூண்டு வழிபாடு செய்வது வழக்கம்.

அப்போது, பவானி புதிய பஸ் நிலையம் அருகே எல்லையம்மன் கோயிலில் இருந்து படைக்கலனுடன் அலங்கரிக்கப்பட்ட குதிரையில் அம்மன் அழைத்து வரப்படும். ஊர்வலத்தின் போது வியாபாரிகள் மற்றும் பக்தர்கள், தங்களின் தொழில், வியாபாரம் பெருகும் எனும் நம்பிக்கையில் உப்பு, மிளகு, காய்கறிகள், பழவகைகள், துணிகள் மற்றும் சில்லறை காசுகளை வீசுவர். நேர்த்திக்கடனை நிறைவேற்ற அலகு குத்தியும், அக்னிசட்டி ஏந்தியும் ஊர்வலமாக வந்து வழிபாடு நடத்துவர்.

விழாவை முன்னிட்டு நாள்தோறும் அம்மன் திருவீதி உலாவும், கம்பத்துக்கு புனித நீர் ஊற்றியும் வழிபாடு நடத்தப்படும். முக்கிய அம்சமான கோயில் கருவறைக்குள் சென்று அம்மனுக்கு அபிஷேகம் செய்யும் அம்மன் நீராட்டு விடிய, விடிய நடைபெறும். இதில், பவானி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பால், மஞ்சள் நீரை ஊற்றி வழிபாடு செய்வர். மாசி மாதம் பிறந்தாலே அம்மன் கோயில்கள் விழாக்கோலம் பூண்டு காணப்படும். தற்போது, கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு பவானி நகரம் முழுவதும் மின்விளக்கு அலங்காரத்தால் ஒளிர்ந்து வருகிறது.

கோயிலுக்கு மரத்தேர்…
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பவானி செல்லியாண்டி அம்மன் கோயிலுக்கு ரூ.35 லட்சம் மதிப்பில் மரத்திலான புதிய தேர் செய்யப்படுகிறது. இதற்கான பணியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்துள்ளார். கோயில் திருவிழா தேரோட்டத்துக்கு புதிய மரத்தேர் செய்யப்பட்டு, திருவீதி உலா நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post பவானியில் அனைத்து மக்களையும் காக்கும் காவல் தெய்வம் செல்லியாண்டியம்மன்.! appeared first on Dinakaran.

Tags : Selyandiyaman ,Bhavani ,Selliandiyaman ,Kaviri ,Herod district, Bhavani ,Hindu Religious Institute ,Chelyandiyaman ,
× RELATED பவானி காலிங்கராயன் வாய்க்காலில் தண்ணீர் திறப்பு