×

மகாராஷ்டிரா இந்தியா கூட்டணியில் சமாஜ்வாடி கட்சி விலகல்: உத்தவ் கட்சி விளம்பரத்தால் அதிர்ச்சி

மும்பை: பாபர் மசூதி இடிப்பை ஆதரித்து உத்தவ் கட்சி சார்பில் நாளிதழில் விளம்பரம் வெளியிடப்பட்டதால் மகாராஷ்டிராவில் உள்ள இந்தியா கூட்டணியில் இருந்து சமாஜ்வாடி கட்சி விலகியது. கடந்த 1992ம் ஆண்டு டிசம்பர் மாதம் 6ம் தேதி அயோத்தியில் இருந்த பாபர் மசூதி இடிக்கப்பட்டது. பாபர் மசூதி இடிக்கப்பட்டதை மறைந்த சிவசேனா தலைவர் பால்தாக்கரே வெகுவாக வரவேற்றார். இந்நிலையில் இந்த தினம் கடந்த வெள்ளிக்கிழமையன்று அனுசரிக்கப்பட்டது.

அப்போது, உத்தவ் சிவசேனா கட்சியை சேர்ந்த மிலிந்த் நர்வேர்கர் எக்ஸ் தளத்தில் போட்டோவுடன் கூடிய பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், மறைந்த பால்தாக்கரே, உத்தவ் தாக்கரே, ஆதித்ய தாக்கரே மற்றும் மிலிந்த் நர்வேகர் ஆகியோர் இடம் பெற்று இருந்தனர். மேலும் பாபர் மசூதியை இடித்தவர்கள் குறித்து தான் பெருமைப்படுவதாக பால்தாக்கரே கூறிய கருத்துகளும் இருந்தது.

இதேபோல நாளிதழ் ஒன்றில் பாபர் மசூதி இடிப்பை ஆதரித்து உத்தவ் கட்சி சார்பில் விளம்பரம் வெளியிடப்பட்டது. இது கடும் சர்ச்சையை கிளப்பியது. சிவசேனா உத்தவ் கட்சி அங்கம் வகிக்கும், மகாராஷ்டிராவில் உள்ள இந்தியா கூட்டணியை சேர்ந்த காங்கிரஸ் மற்றும் சரத் பவார் கட்சி ஆகியவற்றை சேர்ந்த தலைவர்கள் பலரும் உத்தவ் கட்சி எம்எல்சி மிலிந்த் நர்வேகருக்கு கண்டனம் தெரிவித்தனர். இந்த கூட்டணியில் அகிலேஷ்யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி கட்சியும் அங்கம் வகிக்கிறது. இந்த கட்சியின் மகாராஷ்டிரா மாநில தலைவர் அபு ஆஸ்மி ஆவார். மிலிண்ட் நர்வேர்கரின் எக்ஸ் தள பதிவை தொடர்ந்து, மகாராஷ்டிராவில் உள்ள இந்தியா கூட்டணியில் இருந்து சமாஜ்வாடி கட்சி விலகுவதாக அவர் அறிவித்தார்.

 

The post மகாராஷ்டிரா இந்தியா கூட்டணியில் சமாஜ்வாடி கட்சி விலகல்: உத்தவ் கட்சி விளம்பரத்தால் அதிர்ச்சி appeared first on Dinakaran.

Tags : SAMAJWADI PARTY ,MAHARASHTRA INDIA ALLIANCE ,UTAV PARTY PUBLICITY ,MUMBAI ,INDIA ALLIANCE ,MAHARASHTRA ,BABAR MOSQUE ,UTAV PARTY ,Babar ,Mosque ,Ayothi ,Uthav Party ,
× RELATED ஒரே நாடு,ஒரே தேர்தல் குறித்த ஜேபிசி குழுவில் பிரியங்கா காந்திக்கு இடம்